மூணாரில் பூத்துக் குலுங்குகிறது ‘நீலக்குறிஞ்சி’

ஒவ்வொரு ஆண்டும் பூக்கும் பருவத்தில் நீலக்குறிஞ்சி எனும் அரியவகை மலர்கள் பூத்துக்குலுங்குவதைக் காண மூணாரில் பயணிகள் குவிந்து வருகின்றனர். பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் குவியும் சிறந்த இந்திய மலைவாசஸ்தலமாக மூணார் விளங்குகிறது.

பூத்தமேடு

வாசனை திரவியங்களின் தோட்டங்களை அனுபவிக்க பயணிகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறது பூத்தமேடு. பரந்து விரிந்திருக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், நறுமணம் மிக்க ஏலக்காய் தோட்டங்கள் மற்றும் இந்த இடத்தின் புதுமலர்ச்சிமிக்க தோட்டவெளிகள் புத்துணர்ச்சி தரக்கூடியன. மூணாரில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள இந்த சுற்றுலாத்தலம் ஒரு டாக்ஸி அல்லது ஒரு வாடகை வண்டியை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். மலையேற்றம் மற்றும் நீண்ட மலைப்பகுதிகளுக்கு ஏற்ற இடமாக இந்த மூணார் உள்ளது.

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

மூணார் நகரத்துக்கு வெளியே உள்ள ஒரு பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி இது, ஆட்டுக்கல் மூணார் வருபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாக உள்ளது. இதன் வெளிப்பகுதி முனையில் ஒரு பள்ளிவாசல் அமைந்துள்ளது. ஆட்டுக்கல் மழைக்காலங்களில் பயணிகள் அனுபவிக்க சிறந்த இடம். இப்பகுதியைச் சுற்றிப் பார்ப்பதோடு இங்குள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழலாம்.

ராஜமாலா

மூணார் பயணத்தின்போது, ராஜமாலா செல்வது ஒரு சாகச உணர்வை தரும். இது ஆனைமுடி சிகரத்தின் ஒரு பகுதி. கேரளாவின் மிகப்பெரிய மலை. இங்கு அற்புதமான மலையேற்றப் பகுதிகள் உள்ளன. பள்ளத்தாக்கைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் ட்ரெக்கிங் செல்பவர்கள் ஆனைமுடி சரகம் வழியாக செல்லும்போது ரவிக்குளம் தேசிய பூங்காவை (ராஜாமாலாவிலிருந்து 3 கி.மீ. தொலைவு) அடையலாம்.

ரவிக்குளம் தேசிய பூங்கா

மூணாரில் எல்லோரும் மிகவும் விரும்பக்கூடிய இடம் இது. நீலகிரி வரையாடுகளின் இல்லம் என்று இதனை அழைக்கிறார்கள். அதற்காகவே இந்த இடம் புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு ஏராளமான அரிய வகை பறவைகள், விலங்குகள், பட்டாம்பூச்சிகள் சுற்றித்திரிகின்றன. இதனைச் சுற்றிலும் உள்ள மலைகளில் உள்ள தேயிலைத் தோட்டம் பூங்காவை மேலும் அழகுபடுத்துகிறது.

தேவிகுளம்

இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறு மலைச்சாரல் ஆகும். சில்லென்ற காற்று வீசும் இப்பகுதியில், இது பசுமை மலைச்சரிவு, இம்மலையெங்கும் தாழ்ந்துவரும் மேகங்கள் என கண்கொள்ளா காட்சியைக் கொண்டுள்ள இடம். வரும் சுற்றுலாப் பயணிகளை இருத்திவைத்துக்கொள்ளும் எண்ணற்ற அருவிகளும் ஏரிகளும் இங்கு நிறைந்துள்ளன. தேவிகுளத்தில் முக்கியமாக பார்க்கவேண்டிய ஏரி சீதா தேவி ஏரி.

இப்பகுதி முழுவதும் மூலிகைத்தன்மை நிறைந்துள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டுகளிப்பதற்காகவே ஒரு சிறந்த சரணாலயம் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி நகரின் நச்சுக்காற்றிலிருந்து தப்பிக்க விரும்புபவர்கள் இங்கு வந்து பல்வேறு சரணாலயங்கள் வழியாக செல்லும்போது  சுத்தமான, குளிர்ச்சியான காற்றை சுவாசித்து சற்றே சுத்திகரித்துக்கொள்ளலாம்.

நன்றி: ஹிந்து

குறிஞ்சி பூக்களை பார்க்க போகிறீர்களா?? இந்த இடங்கள் மனிதனின் தாக்கம் இல்லாத இடங்களில் ஒன்றாகும். நம்மால் முடிந்தது பிளாஸ்டிக் பை எடுத்து போக்காமல் இருப்பது, குப்பை போடாமல் இருப்பது, நீர் கொண்டு போகும் பெட் பாட்டில்களை திருப்பி எடுத்து வருவது, சத்தமாக பாட்டு போடாமல் இருப்பது, தண்ணி அடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போடாமல் இருப்பது..

நம் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் இந்த இயற்கை அற்புதங்களை பார்க்க நாம் விட வேண்டும் அல்லவா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மூணாரில் பூத்துக் குலுங்குகிறது ‘நீலக்குறிஞ்சி’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *