ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிரச்னைகள் தொடர்கதையாகி விட்டன. தூத்துக்குடி, காயல்பட்டினம், திருவாரூர், திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளால் விவசாய நிலங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் மலைவாசஸ்தலமான கொடைக்கானலிலும் மெர்க்குரி ஆலையின் கழிவால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளன.
இதுசம்பந்தமாக ‘கொடைக்கானலின் நச்சு வரலாறு, கழிவுகளை சுத்தம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதை நோக்கி’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள், இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பப்ளிக் பாலிசி, தி அதர் மீடியா அமைப்புகள் இணைந்து சென்னை, கவிக்கோ அரங்கில் விவாத அரங்கினை நடத்தியது.
ஆலைக் கழிவால் பாதிக்கப்பட்டவரும், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான மகேந்திர பாபு பேசியபோது, “நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, எண்ணெய் போன்ற பொருட்களை தயாரித்து வருகிறது ஹிந்துஸ்தான் யூனிலீவர். இந்த நிறுவனம் 1983ம் ஆண்டு கொடைக்கானலில் பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் ஆலையில் பணி புரிந்து வந்தனர். காலப்போக்கில் ஆலையில் இருந்து வெளியேறிய பாதரச கழிவுகளாலும், பாதரச லெட் வேதியியல் மாற்றங்களாலும் பல தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிப்படையத் தொடங்கினர். 1983லிருந்து 2001 வரை, இதுபற்றியான விழிப்புணர்வே இல்லாமல் 1,047 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பல போராட்டங்களுக்குப் பிறகு ஆலை மூடப்பட்டு, தெர்மா மீட்டர் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.
ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றபடாமலேயே உள்ளது. இதனால் கொடைக்கானலில் பல குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் மட்டுமின்றி மலையின் சூழலும், பழங்கள், காய்கறிகள் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. நீரும் நிலமும் நஞ்சாகி வருகின்றன” என்ற தகவல்களை பகிர்ந்தார்.
ஆலை பிரச்னைகளை முன்வைத்து சட்ட நிபுணர் டாக்டர். உஷா ராமநாதன், பொது சுகாதார நிபுணர் டாக்டர். ரகல் கெய்டொண்டே, ஆலை போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய நவ்ரேஷ் மோடி, கொடைக்கானல், கடலூர், கொடுங்கையூர் பகுதிகளில் மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வரும் மக்களும் விவாத அரங்கில் கலந்துகொண்டு சில முடிவுகளை அறிவித்தனர்.
“மக்களுக்கும், இயற்கைக்கும் பாதுகாப்பான திட்டங்களைத்தான் அரசு ஆதரிக்க வேண்டும். ஆலையினை மூடி பதினைந்து ஆண்டுகள் கழித்து, இன்றும் பாதரச கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பாதரசம், கழிவு நீரோடு கலந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும் செல்கிறது. இதனால் நீரும், நிலமும் விஷமாவதோடு, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உடல் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு எவ்வித இழப்பீடும், மருத்துவ வசதியும் இன்றுவரை கிடைக்கவில்லை. பல வெளிநாட்டு கம்பெனிகளை அரவணைக்கும் மத்திய, மாநில அரசுகள் சுற்றுப்புறத்தின் மீதும், தொழிலாளர்கள் மீதும் அக்கறை கொள்வதே இல்லை.
பாதுகாப்பான மருத்துவக் குழுக்களை அமைத்தல், இயற்கைக்கு எவ்வித மாசுபாடு இல்லாமல் இருத்தல் போன்ற விஷயங்களை அரசுகள் கண்டுகொள்வதே இல்லை. இழப்புகளும், அழிவுகளும் நடந்தால் கண்டுகொள்ளாமல் அமைதி காக்கின்றன. இந்த நஞ்சை விதைத்தமைக்கு அரசும், ஆலையும்தான் பொறுப்பேற்க வேண்டும். பாதரசக் கழிவுகளை சுத்திகரிப்புடன் அகற்ற வேண்டும். இதை பெரும் பிரச்னையாக பார்க்காவிட்டால், கொடைக்கானலும், அதன் சுற்றுவட்டாரங்களும் அழிந்தேவிடும். வருகின்ற சந்ததிகளும் கண்டிப்பாக பாதிக்கப்படுவர். அதனால் அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
நன்றி: விகடன்
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
விக்கிபீடியா
அமெரிக்கா சுற்று சூழல் துறை – பாதரசத்தின் தீமைகள்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
3 thoughts on “கொடைக்கானலில் பாதரசத்தால் பகீர்”