பிஞ்சுகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் நஞ்சு

இந்தப் பேரரசில் எஜமானர்கள் எல்லாம் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் அடிமைகளைவிடக் குறைந்த உடல்நலத்துடன் இருக்கிறார்கள். கிராமங்களில் வாழும் சாதாரண மக்கள் நகரத்தில் வாழும் செல்வந்தர்களைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள். சாதாரண உணவு சாப்பிடுபவர்கள், வசதி மிக்கவர்களைவிட நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள்” என்று எழுதிச் சென்றுள்ளார் ரோமானியப் பேரரசின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்படும் காயூஸ் முசோனியூஸ் ரோபூஸ். கி.மு. முதலாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்தார்.

ரோமப் பேரரசின் ஆளும் வர்க்கத்துக்கு முடக்குவாதம், நீர்க்கட்டு, வலி முதலிய உடல்நலக் கேடுகள் இருந்ததை வரலாறு நிரூபிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஈய (Lead) உலோகம்தான் என்கிறார் புகழ்பெற்ற புவிவேதியியல் நிபுணர் ஜெரோம் நிரியாகு. மாபெரும் ரோமப் பேரரசு அழிந்துபோக மிகையான ஈயப் பயன்பாடும் காரணம் என்று நம்பப்படுகிறது.

ரோமப் பேரரசின் உயர்குடிகள் பயன்படுத்திய தண்ணீர் குழாய்கள், சமையல் பாத்திரங்கள், நீர்த் தொட்டிகள், உணவு சேமிக்கும் காலன்கள், மதுக் கலன்கள், கோப்பைகள் என எல்லாமே ஈயத்தால் ஆனவை. அவர்கள் திராட்சை பழச் சாற்றை ஈயக் கலன்களில் சுண்டக் காய்ச்சி, டெப்புரூட்டம் எனும் சாஸ் தயாரித்து மதுவுக்கும் உணவுக்கும் இனிப்புச் சுவை சேர்க்கப் பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிகப்படியான ஈயம் அவர்களது உணவிலும், தண்ணீரிலும், மதுவிலும், சுற்றுப்புறத்திலும் கலந்து பின் அவர்களது உடலிலும் கலந்துவிட்டது. ஈயத்தால் மாசடைந்த நச்சுக் கூடுகளாக அவர்கள் நடமாடியுள்ளனர்.

ரோமானிய நகரங்களில் தண்ணீர் பொதுவிநியோக நடைமுறை ஆளும் வர்க்கமான செல்வந்தர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. இரவு முழுவதும் ஈயத் தொட்டியிலும் ஈயக் குழாய்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக ஈயம் கரைந்தது. காலையில் முதல் விநியோகமாகச் செல்வந்தர்களுக்குத்தான் இந்தத் தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்த முன்னுரிமை அவர்களது வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக்கொண்டிருந்ததை அறியாதது அவர்களுடைய துரதிருஷ்டம்.

பெரும் பசி, சோம்பல், குடிக்கு அடிமையாதல், மலட்டுத்தன்மை, பாலுறவுத் திறன் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஆளும் வர்க்கத்தை ஆற்றல் அற்றதாக மாற்றியுள்ளன. ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீசர், தன்னுடைய பாலியல் செயல்பாட்டில் திறன் அற்றவராக இருந்துள்ளார்.

அவரால் ஒற்றைப் பிள்ளைக்கு மட்டுமே தந்தையாக முடிந்ததது. கலிகுலா, நீரோ, கமோடஸ் போன்ற திறமையற்ற மன்னர்கள் உருவாக ஈயமும் காரணம் என்கிறார் நிரியாகு. ரோமாபுரி பற்றி எரிந்தபோது ‘ஈயத்தால் செய்யப்பட்ட மார்புக் கவசம் அணிந்த நீரோ மன்னன்’ பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம்!

ரோமானியப் பிரபுக் குலம் உருவாக்கிய வலிமையும் திறமையும் அற்ற நிர்வாகம், ஆட்டம் கண்டு இறுதியில் அழிந்தும்போனது.

Courtesy: Economic Times
Courtesy: Economic Times

படுபாதக ஈயம்

இன்று உலகின் படு ஆபத்தான சூழல் நஞ்சாக ஈயம் கருதப்படுகிறது. ஈயம் கலந்த பெட்ரோல் முன்பு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வந்தது. தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும், நாம் வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் பயன்படுத்தும் பெயிண்ட், தானியங்கி வாகனங்களில் பயன்படும் ஈய அமில மின்கலங்கள், நிலக்கரியை எரிக்கும் அனல்மின் நிலையங்கள், மின்னணு சாதனக் குப்பைகள், உலோக உருக்கு ஆலைகள், செராமிக் பொருட்கள், வளையல் தயாரிப்புகள் போன்றவற்றால் காற்றின் மூலமும் உணவின் மூலமும் அதிக அளவில் ஈயம், நம் உடலுக்குள் நுழைந்தவண்ணம் உள்ளது.

நமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஈய ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடி மக்கள் ஈய ஆபத்துடன் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.

குழந்தைகள் எச்சரிக்கை!

பெரியவர்களைவிடக் குழந்தைகள்தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும் தீவிரமாகவும் ஆளாகிறார்கள்.

பெரியவர்களின் உடலை அடையும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன.

ஆனால், குழந்தைகளின் உடலை அடையும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது.

உடலும் மூளையும் வேகமாக வளரும் பருவம், குழந்தைப் பருவம். அப்பருவத்தில் அவர்களது உடல் வேதி மாசுகளை ஈர்க்கும் வேகமும் விகிதமும் அதிகமாக உள்ளன.

ஈயத்தால் மாசுபட்ட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் நாம் காணும் துறுதுறுப்பு, கவனக் குறைபாடு, நடத்தைக் குறைபாடு போன்றவற்றுக்கு அவர்கள் கருவில் இருக்கும்போதோ அல்லது வளரும் பருவத்திலோ ஈயத்தால் பாதிக்கப்படுவதும் காரணம்.

பொதுவாக நமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருட்கள் நுழையும்போது, ரத்தத்தில் கலந்து மூளை, தண்டுவடம் தவிர மற்ற எல்லாப் பாகங்களுக்கும் பரவும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் போகும் ரத்தம் நச்சுப் பொருள்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை ரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர் – Blood Brain Barrier – BBB) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள் மூளைக்கு எளிதில் பரவிக் கடும் நரம்புமண்டலப் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

தாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்திய நிலை

ஜார்ஜ் பவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனம் 1999இல் இந்திய நகர்ப்புறக் குழந்தைகளிடம் ஈயத்தின் பதிப்பு பற்றி மிகப் பெரிய ஆய்வை நடத்தியது. இதில் 51.4 சதவீத நகர்ப்புறக் குழந்தைகளின் ரத்தத்தில் ஆபத்தான அளவில் ஈயம் இருந்தது தெரியவந்தது.

இந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும் பணியிடங்களிலும் சுவர்கள், ஃபர்னிச்சர் ஆகியவற்றுக்கு அடிக்கப்பட்டுள்ள பெயிண்ட்களில் இருந்து நம்மையும் குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது. உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம், சிறு குழந்தைகளுக்கு உண்டு. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டலும் ஈயம் கலந்த பெயிண்ட்கள் தற்போதும் சந்தையில் பரவலாக உள்ளன. டாக்சிக்ஸ் லிங்க் என்ற தேசிய அளவிலான நச்சு ஆய்வு அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வு ஒன்று, இந்தியச் சந்தையில் கிடைக்கும் பெயிண்ட்களில் 90 சதவீதப் பெயிண்ட்கள், தர நிர்ணயத்தைவிட அதிக ஈயத்தைக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது.

பழக்கவழக்கங்களின் பேரில் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்க நமக்கு உரிமை இல்லை. சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவருவதற்குச் சூழல் சீர்கேடு முக்கியக் காரணம் என்பதை உணர வேண்டிய தருணம் இது. ஈயம் உட்பட நம் உடலையும் குழந்தைகளின் உடலையும் அடையும் வேதி மாசுகள் மனிதச் செயல்பாடுகளால் (ஆந்த்ரபோஜெனிக்) உற்பத்தியாகிவருபவைதான். நம்முடைய விழிப்புணர்வும், அரசின் கட்டுப்பாடுகளும் கடுமையான நடவடிக்கைகளுமே இந்த விஷயத்தில் மாற்றத்தை உருவாக்கும்.

– தேவிகாபுரம் சிவா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்,
தொடர்புக்கு: devikapuramsiva@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *