பூச்சிக்கொல்லி மருந்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்!

இந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வருடத்துக்கு 10 ஆயிரம் பேர் இறப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது உண்மை கண்டறியும் குழு.

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்திவயலில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது 4 விவசாயிகள் மருந்தின் தாக்கத்தால் இறந்திருக்கிறார்கள். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பது தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூச்சி மருந்து பாதிப்புகளால் இறந்த விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று உண்மை கண்டறியும் குழுநேரில் ஆய்வு நடத்தியது. இதில் அகில இந்திய அளவிலான நீடித்த, நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்புத் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகண்டி, பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அனந்து, உறுப்பினர்கள் பார்த்தசாரதி, சுவாமிநாதன், சுராஜ் அபியான் அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ரமேஷ் கருப்பையா, சரவணன், நாட்டுப்பருத்தி ஆர்வலர் நந்தகுமார் அடங்கிய குழு இறந்த விவசாயிகளின் வீடுகள், சிகிச்சை பெற்ற மருத்துவமனைகள், மருந்து வாங்கிய கடைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்த பிறகு, பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்கள். அதில்,

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 33,500 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் கட்டுப் பாடின்றி தனியார் உரக்கடைகளில் விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோனோ குரோட்டோபாஸ் உள்ளிட்ட 93 பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த தடையுள்ளது. ஆனால், நம் நாட்டில் மட்டும் சர்வ சாதாரணமாக இந்த மருந்துகள் புழக்கத்தில் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் ஏன் தடை செய்யாமல் இருக்கிறது என்பது தெரியவில்லை. தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியத்தாலும் விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தாலும் மஹாராஷ்ட்ராவில் 50 பேர், தமிழகத்தில் 5 பேர், தெலங்கானாவில் 10 பேர் இறந்துள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இறந்துள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தலா ரூ.5 லட்சமும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இந்தியாவில் தற்போது ஆண்டுக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் பூச்சிக்கொல்லி மருந்து பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர். இதற்கு விதையில் குளறுபடியா பயன்படுத்தப்படும் மருந்தில் குளறுபடியா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

 

மஹாராஷ்ட்ராவில், கேரளாவில் செயல்படுத்தியதுபோல், தமிழகத்தில் தடை செய்த மருந்துகளை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். சிறப்பு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்டமருந்து, விதை விற்பதையும் பாதிக்கப்பட்டோர் நிலையையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.அதேபோல் நம் நாட்டில் எண்டோ சல்பானைவிட கொடியது மோனோ குரோட்டோபாஸ். ஆனால், எண்டோ சல்பானைத் தடை செய்துவிட்டார்கள். மோனோ குரோட்டோபாஸைத் தடைசெய்யவில்லை என்பது வேதனை இருக்கிறது எனப் பேசினார்கள்.

நன்றி: விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *