அதிக லாபம் தரும் திசு வாழை சாகுபடி

திசு வாழை பயிரிட்டால் நிகரலாபம் அதிகம் பெறலாம் என்று இவ்வாழை ரகத்தை பயிரிட்டு பலன்பெற்ற விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சென்ற ஆண்டில் கோலியனூர் வட்டாரம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி அ. ராஜா தனது 0.5 ஏக்கர் நிலத்தில் 500 கன்றுகள் நடவு செய்து தற்சமயம் ஜி9 வாழை ஒவ்வொன்றும் சராசரியாக 35 கிலோ எடை வருமாறு உற்பத்தி செய்துள்ளார்.

இந்த 0.5 ஏக்கரிலிருந்து கிடைத்துள்ள இந்த தார்களை தற்சமயம் கோயம்பேடு சந்தை விலையான கிலோ ரூ.9.80-க்கு விற்பனை செய்தாலும் ரூ.1,71,500 வரை மொத்த வருமானமாகவும், ரூ.1,21,500 வரை நிகர லாபமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த மனோகர், வளவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் போன்ற விவசாயிகளும் கோலியனூர் ஒன்றிய தோட்டக்கலைத்துறை மூலம் திசு வாழைக் கன்றுகளை 50 சதவீத மானிய விலையில் பெற்று ஜி9 வாழை சாகுபடியில் திருப்திகரமான முறையில் உற்பத்தி செய்துள்ளார்கள்.

பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த அ.ராஜா மற்றும் மனோகர் ஆகிய விவசாயிகள் திசு வாழையை சிறந்த முறையில்சாகுபடி செய்துள்ளதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின்கீழ் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2000 வீதம் விவசாயிகளுக்கான பரிசுத் தொகை கோலியனூர் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளதாக உதவி இயக்குநர் முனைவர் க. வீராசாமி தெரிவித்தார்.

வழிகாட்டுதல்

விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குநர் என். பன்னீர்செல்வம் இதுகுறித்து கூறியது:

  • கடந்த 2009-ம் ஆண்டில் ஜி9 திசு வாழையினை பிப்ரவரி மாதத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் எர்வீனியா வாடல் நோயால் பாதிப்பு அடைந்ததால் மிகவும் கவலை அடைந்திருந்தனர்.
  • ஆனால் சென்ற ஆண்டில் தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய வழிகாட்டுதலின் படியும், வட்டார தோட்டக்கலை வழிகாட்டுதலின் படியும் விவசாயிகள் அ.ராஜா, மனோகரன், ராஜசேகர் ஆகியோர் ஜூலை மாதத்தில் ஜி9 திசு வாழையை நடவு செய்து சீரிய முறையில் பராமரித்து நல்ல விளைச்சலை பெற்றுள்ளார்கள்.
  • மேலும் திசு வாழையில் அடர்நடவு சாகுபடி முறைகளையும், சொட்டுநீர் உர நிர்வாக முறைகளையும் காலத்தே பயிர் பாதுகாப்பு, காராமணி, சணப்பை போன்ற நிழல் பயிர் சாகுபடி, காற்று தடுப்பான் பயிர் (உதயம் வாழை, அகத்தி) சாகுபடி போன்ற காரணிகளை கடைபிடித்தால் ஜி9 திசு வாழைசாகுபடியில் தற்சமயம் நெல்லுக்கு அடுத்ததாக பயிர் சுயற்சி முறையில் சாகுபடியிலுள்ள மொந்தன் வாழையைக் காட்டிலும் அதிக உற்பத்தி மற்றும் அதிக வருமானம் பெற இயலும்.
  • சொட்டுநீர் பாசன முறையில திசு வாழை சாகுபடி செய்தால் கூடுதலான வருமானம் பெற இயலும். 50 சதவீத மானியத்தில் திசு வாழை செடிகளுக்கும், 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன தேவைகளுக்கும் தங்கள் ஒன்றியத்திலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகலாம் என்று தெரிவித்தார்.
  • திசுவாழை பயிர்களை ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் பயிரிட்டால் மழைக்கால பாதிப்புகள் இல்லாமல் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் நேரடி அனுபவத்தை தெரிந்து கொள்ள, அ. ராஜாவை (திஹார் ஜெயிலில் உள்ளவர் இல்லை!) 09443322770 என்ற எண்ணிலும், மனோகரை 09865329845 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு மேலும் விளக்கங்கள் பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அதிக லாபம் தரும் திசு வாழை சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *