“மண்ணு மாதிரி இருக்கியே’ என தப்பித் தவறி கூட யாரையும் சொல்லிவிட முடியாது. மண்ணின் அடிமடியில் ரசாயனத்தை கொட்டினால், சோற்றுக்கு அடிமடியில் கையேந்தி நிற்க வேண்டி வரும் என்கிறார், ஈரோடு சத்தியமங்கலம் தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி. அவர் கூறியது:
இந்த விவசாயம் 20 ஆண்டுகளாக எல்லா விஞ்ஞான தகவல்களையும் எனக்கு தருகிறது. நிலத்தின் வயிறு நிம்மதியாக இருப்பதற்காக 2010லிருந்து என்னுடைய 12 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் வாழை, மஞ்சள் சாகுபடி செய்கிறேன்.
மஞ்சளுக்கு ஜூனில் நடவு செய்து களை எடுக்க வேண்டும். மண் அணைத்து சாணம், புகையிலை தூள் மூலம் படுக்கை தரவேண்டும். பஞ்சகவ்யா, அமிர்தகரைசலை தண்ணீர் மூலமும், இலைவழியாகவும் எட்டுமுறை தெளிக்கிறேன். பவானி ஆற்றுபாசனத்தில் வண்டல் மண்ணாக இருப்பதால், பத்து நாளைக்கு ஒருமுறை தண்ணீர் விடுகிறேன்.
பத்தாம் மாதம் (பிப்ரவரி) அறுவடை செய்வேன்.
இலையை அறுத்து வெளியே எடுத்துவிட்டு கிழங்கு தோண்ட வேண்டும். ஒற்றை பயிரில் உள்ள விரலி, குண்டு மஞ்சள் கிழங்கை பிரித்து தண்ணீரில் வேகவைத்து, 10 – 15 நாட்கள் நல்ல வெயிலில் காயவிடவேண்டும். அதன்பின் வேர், மேல்தோல் போகும் அளவுக்கு இயற்கை பாலீஷ் செய்தால் சுத்தமான மஞ்சள் கிடைக்கும். இதை அரைத்தால் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நிறம் கண்ணை உறுத்தாது.
அரைத்த மஞ்சளை கிலோ ரூ.120லிருந்து விற்பனை செய்கிறேன். விவசாயிகளுக்கு நோய் தாக்காத இயற்கை விதைக் கிழங்குகளை விற்பனை செய்கிறேன். இவை மிகச்சிறந்த கிருமிநாசினி. உணவில் சேர்த்தால் புற்றுநோய் வராது. பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். சருமபாதுகாப்பும் தரும்.
10 ஏக்கரில் செவ்வாழை, கதலி, ரஸ்தாளி, நேந்திரம், கற்பூரவள்ளி வாழை பயிரிட்டுள்ளேன். இந்தாண்டு முதல் முயற்சியாக 600 நேந்திரம் கன்றுகள் நட்டுள்ளேன். இந்த மண்ணில் விளைச்சல் குறைவுதான். இயற்கையில் விளைந்தது என்ற சந்தோஷம் இருக்கிறது.
அடுத்த சந்ததிகளுக்கு உயிருள்ள மண்ணாக நிலத்தை தருவதில் தான், விவசாயி என்கிற பெருமை இருக்கிறது, என்றார்.
இவரிடம் பேச: 08903469996 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்