வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில்நுட்பங்கள்

வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக 25 முதல் 40 சதவீதம் வருவாய் பெறலாம் என்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்ட வாழைப் பழத்தை நீண்ட நாள் சேமித்து வைக்க அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.

அத்தகைய தரம் கொண்ட வாழைப் பழத்தைத்தான் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல முடியும். வாழைப் பழங்களைப் பாதுகாக்க மற்ற பழங்களைப் போல அல்லாமல் பாதுகாப்பு அறையின் வெப்பநிலை 12 முதல் 21 சென்டிகிரேட் வரை இருக்க வேண்டும். குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கும் போது அதன் தரம் பாதிக்கப்படுகிறது.

தொழில்நுட்பங்கள்:

 • அறுவடைக்கு முன்னரும், அதன் பின்னரும் கடைப்பிடிக்கப்படும் தொழில் நுட்பங்களே பழங்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. தொழில் நுட்பங்களைச் சரியாகக் கையாளாத காரணத்தால் மொத்த உற்பத்தியில் 18 முதல் 20 சதவீதம் வாழை வீணாகிறது.
 • உள்ளூர் விவசாயிகள் சந்தைகளுக்கு வாழைப் பழத்தை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க வாழை இலை அல்லது பாலித்தீன் பையால் முழுவதும் மூடியே எடுத்துச் செல்கின்றனர்.
 • ஆனால், ஏற்றுமதி செய்யும்போது பழங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்ப வேண்டும்.
 • இந்த அட்டைப்பெட்டி 57 x 22.5 செ.மீ. அளவுடையது. இதில் 1.3 செ.மீ. விட்டமுடைய 10 சிறு துளைகள் இருக்கும். இதில் வாழை சீப்புகளை அதன் அடிப்பாகம் கீழிருக்குமாறும், காய்கள் மேல் நோக்கி இருக்குமாறும் நீளவாக்கில் அடுக்க வேண்டும்.
 • இவற்றை ரயில்கள் மூலம் அனுப்பும்போது ஒன்றின் மேல் ஒன்றாக 9 பெட்டிகள் இருக்குமாறு அடுக்க வேண்டும். 10 டன் கொள்ளளவுள்ள ரயில் பெட்டியில், 100 வாழைப் பெட்டிகளை அடுக்க முடியும். ஒரு டிரக்கில் குறைந்தது இத்தகைய பெட்டிகளை 350 வரை அடுக்க முடியும்.

வெப்ப நிலை:

 • வாழைப் பழங்களை 13 டிகிரி சென்டிகிரேடுக்கு கீழ் உள்ள வெப்பநிலையில் வைத்து சேமிக்கும்போது பழத்தின் தோலில் கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இது குறைந்த வெப்பநிலையால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக் குறைபாடுள்ள பழங்கள் பழுத்த பின்னரும் அதன் தோல் கடினமாக இருக்கும்.
 •  மேலும், இந்தப் பழங்கள் எளிதில் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எனவே, இந்த வெப்பநிலையில் பழங்களை சேமிப்பது ஏற்றதல்ல.
 •  ரோபஸ்டா மற்றும் குள்ள வாழைத் தார்களை பூத்த 100 நாள்களுக்குப் பின்னால் வெட்டி, முன் சேமிப்பு நேர்த்தியாக 1,000 பி.பி.எம். தயோபென்ட்சோல் என்ற மருந்தில் வாழை சீப்புகளை நனைக்க வேண்டும்.
 •  அவ்வாறு சேமிக்கும்போது, அதிகபட்சமாக 28 நாள்கள் 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் எந்தவிதச் சேதமும் இல்லாமல் சேமிக்க இயலும். 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில், 80 முதல் 90 சதவீத ஈரப்பதமும் பழங்களை சேமிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருக்கும். வெப்பநிலை அதிகரிப்பதால் பழங்கள் விரைந்து பழுத்து விடும்.

மெழுகு பூசுதல்:

 • பழங்களின் வாழ்நாளை அதிகரிக்க 6 சதவீத மெழுகுக் கரைசலில் சீப்புகளை 30 முதல் 60 விநாடிகள் நனைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பழங்கள் பழுப்பது தடைபடுவதுடன் அதன் மணமும், சுவையும் அதிகரிக்கும்.
 • இதை 12 சதவீத மெழுகில் மீண்டும் ஒரு முறை நனைத்து எடுப்பதால் பழங்களின் வாழ்நாளை 5 வாரங்களுக்கு மேல் நீட்டிக்க முடியும்.
 •  மேலும், வாழைச் சீப்புகளை பாலித்தீன் பைகளில் 50 கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் சேமிக்கும்போது குறைந்த வெப்பநிலையான 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும், வெளி அறை வெப்பநிலையில் 2 வாரங்களும் பழங்களை பழுக்காமல் பாதுகாக்க முடியும்.

பாலித்தீன் பைகளால் மூடுதல்:

 • பழங்களை காற்றோட்டமில்லாத பாலித்தீன் பைகளைக் கொண்டு மூடும் போது பழங்கள் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. 100 காஜ் தடிமனுள்ள பாலித்தீன் பைகளில் 2 சதவீத காற்றோட்ட வசதி செய்து, பழங்களை மூடும்போது வெளி அறை வெப்பநிலையிலும், குறைந்த வெப்பநிலையிலும் (13 முதல் 15 சென்டிகிரேட்) பழங்களை 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை பாதுகாக்க இயலும்.

தாவரங்களின் பங்கு:

 • கொக்கோ இலை அல்லது உமியுடன் சேர்த்து வாழைச் சீப்புகளை குறிப்பாக சமையலுக்கான வாழைக் காய்களை பைகளில் சேமிக்கும்போது 30.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் இரு வாரங்களும், 20.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும் தரம் குறையாமல் சேமிக்க இயலும்.
 • வாழைத் தார்களை மூடுவதற்கு ஊதா நிற பைகளுக்குப் பதிலாக வெள்ளை நிறப் பைகளே சிறந்தது.இந்தப் பைகளில் அடைப்பதன் மூலம் பழுப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாள்கள் குறையும். மேலும், பழங்களில் பாதிப்பும் குறைவாக இருக்கும்.
 • இத்தகைய புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழை விவசாயிகள் தங்கள் வருவாயில் 25 முதல் 40 சதவீதம் கூடுதலாக ஈட்ட முடியும் என்கின்றனர் வேளாண் அலுவலர்கள்.

தொடர்புக்கு…: தருமபுரி வருவாய் கோட்டத்தின் வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) தா.தாம்சன். மொபைல் எண்: 09443563977.

நன்றி: தினமணி 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *