வாழையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்

 

சீப்புகளை பிரித்தல்

 • வாழையில் குலையினை மரத்திலிருந்து வெட்டி எடுத்த பின்பு, கூரிய, சுத்தமான வாழைக்காய் வெட்டும் கத்தி கொண்டு தண்டினை ஒட்டி சீப்புகளை நறுக்கி எடுக்க வேண்டும்.

 

 • சீப்புகளை வெட்டியவுடன் அவற்றின் நீர் (பால்) வடிவதற்காக இலைகளைப் பரப்பி சீப்பின் உச்சி கீழே பார்த்த வண்ணம் வைக்க வேண்டும்.

 

 • வாழை முடிக்கொத்து நோய் தாக்காமல் இருக்க, சீப்புகளை 0.1% பென்லேட் அல்லது தயபென்டஸோல் கரைசலில் நனைத்து எடுக்க வேண்டும்.

இலைகளின் மீது அடுக்கி வைத்தல்

 • அறுவடை செய்த குலைகளை வெட்டிய கொண்னை அடிப்பகுதியில் இருக்குமாறு வரிசையாக அமைப்பது.
 • இது இரண்டு நிலைகளில் தேவைப்படுகிறது.
 • அறுவடை செய்யும்போது வயலிலேயே குலைகள் இம்முறையில் இலை அடுக்குகளின் மீது வரிசையாக வைக்கப்படுகின்றன.
 • குலை எடுத்துச் செல்லும் வண்டி வருமுன் குலைகளை இவ்வாறு தொடர்ந்து அடுக்கி வைத்தால் நோய்க் காரணி ஒன்றிலிருந்து மற்றொரு குலைக்குப் பரவ வாய்ப்புள்ளது.
 • மேலும் வண்டிகளில் எடுத்துச் செல்லும் போதும், விற்கப்பட்ட உடன் வியாபாரி பழுக்க வைக்கும் அறைக்குக் கொண்டு செல்லும் முன்பும் இம்முறையில் தான் குலைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
 • இவ்வாறு அமைப்பதால் காய்களில் பூச்சியினாலோ, கையாளும் முறையினாலோ காயங்கள் ஏற்பட்டோ அதன் வழியே நோய் பரப்பம் கிருமிகள் வயலிலிருந்து அல்லது அப்பகுதிகளிலிருந்து தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

பெட்டிகளில் அடுக்குதல்

 

 • பெட்டிகளில் வாழைச் சீப்புகளை அடுக்கும் போது, இரு கிடைமட்ட வரிசைகளில் காய்களின் காம்பு நுனி பெட்டியின் ஓரத்திலும், காய்நுனி மத்தியப் பகுதியிலும் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
 • ஒரு வரிசையாக வைக்கும்போது, சீப்பின் காம்பு நுனி அடியிலும், காய்கள் மேற்புறம் அமையுமாறு செங்குத்தாக அமைக்கவும்.
 • மெத்தை விரிப்பு அல்லது கிராப்ட் பேப்பர் போன்றவை அடிபடாமல் இருக்க பெட்டியின் (காய்களின்) அடிப்பகுதியில் வைக்க வேண்டும். காய்களின் மீது 100 காஜ் தடிமன் கொண்ட அல்லது குறைந்த அடர்வு கொண்ட பாலி எத்திலீன் காகிதம் கொண்டு மூடுவதால் மிதமான தட்பவெப்பநிலை கிடைக்க ஏதுவாகும்.

காய்களை குளிர்வித்தல்

 • அதிக தூரம் எடுத்துச் செல்லக் கூடிய மற்றும் ஏற்றுமதித்தர வாழைக்காய்களை அதன் சேமிப்புக்காலத்தை அதிகரிக்க குளிர்விக்க வேண்டும்.
 • குலையினை அறுவடை செய்த 10 -12 மணி நேரத்தில் குளிர்விக்க வேண்டும்.
 • பெட்டிகளில் அடைக்கப்பட்ட காய்களை 13º செல்சியஸ் வெப்பநிலையும் 85 -90% ஈரப்பதம் கொண்ட காற்றை வேகமாகச் செலுத்துவதன் மூலம் குளிர்விக்கலாம்.
 • வயல் வெப்பநிலையான 30º முதல் 35º செ வெப்பநிலையிலிருந்து 13º செ குளிர்விக்கும் வெப்பநிலைக்கு வாழைக் காய்களைக் கொண்டுவர குறைந்தது 6-8 மணி நேரம் ஆகும்.
 • சீப்புகள் அடுக்கப்பட்டட பெட்டிகளை உடனே சேமித்து வைக்க குளிர்விக்கும் அறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

சேமித்து வைத்தல்

 • அறுவடைக்குரிய அனைத்து வழிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டால் அவ்வாழைக் காய்களை கப்பல் வழியே ஏற்றுமதி செய்யலாம்.
 • அதற்கு சேமிப்பு அறையில் 13º செ வெப்பநிலை மற்றும் 85 -95% ஈரப்பதமும் வேண்டும்.
 • வெப்பநிலை, 13º செ.க்குக் குறைந்தால் மேற்புறத் தோலில் நிறமாற்றம், நிறம் குறைதல், பழுக்காமல் போதல், சதைப்பகுதி பழுப்பு நிறமாதல் போன்ற குளிர்விப்புக் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
 • சேமிப்பு வெப்பநிலையான 13º செ என்பது இரகத்திற்கேற்ப 3 முதல் 4 வாரங்களாக மாறுபடும்.
 • குறைந்த வெப்பநிலையுடன் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சேமித்து வைப்பதன் மூலம் வாழையின் சேமிப்புக் காலத்தை மேலும் அதிகரிக்கலாம்.
 • ரொபஸ்டா இரக வாழையானது 5% ஆக்ஸிஜன் + 5% கார்பன்டை ஆக்ஸைடு @ 12º செ முதல் 13º செ வெப்பநிலையில் அறுவடை செய்தபின் 4 முதல் 6 நாட்கள் வைத்திருப்பதால் அதன் சேமிப்புக் காலம் 8 வாரங்கள் வரை நீட்டிக்கப்படுகின்றது.

பழுக்க வைத்தல்

 • பெட்டி அல்லது பிளாஸ்டிக் கிரேட்களில் வைக்கப்பட்டிருக்கும் வாழைக் காய்கள் பின்பு பழுக்கும் அறைக்கு மாற்றப்படுகின்றன. குறைந்த வெப்பநிலை அதன் பழுக்கும் திறனை அதிகரிக்கும்.
 • ஒளி மற்றும் காற்றுபுகா வண்ணம் இறுக்கமாக மூடப்பட்ட அறையில் 160 முதல் 180º செ வெப்பநிலையும் 85 – 90% ஈரப்பதமும் இருக்குமாறு பராமரிக்கப்பட வேண்டும்.
 • 100 பி.பி. எம் (0.01%) எத்திலீனை அந்த அறைக்குள் செலுத்தவும்.
 • காயினைப் பழுக்க வைப்பதில் எத்திலீன் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது.
 • 24 மணி நேரம் இவ்வாறு மூடி வைக்கப்பட்ட பின் அறையினைத் திறந்து விடவும். இதனால் பழுக்கும் முதல் நிலையில் வெளி வரும் எத்திலீன் வாயுவும், கார்பன் – டை – ஆக்ஸைடு வாயுவையும் அறையை விட்டு வெளியேற்றவேண்டும். பின்பு அடுத்த 3-4 நாட்களுக்கு அறையின் வெப்பநிலை 8º செ லிருந்து 15º செ க்கு குறைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

 

 

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *