வாழையில் ஊடுபயிராகக் கோழிக்கொண்டைப் பூஞ்செடி: கூடுதல் வருமானம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விவசாயிகள் வாழையில் ஊடுபயிராகக் கோழிக்கொண்டைப் பூஞ்செடி பயிரிட்டுக் கூடுதல் வருமானம் பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வாழை பயிரிட்டு வருகின்றனர். இதேபோல் பூஞ்செடிகளையும் வளர்த்துப் பறிக்கும் பூக்களைச் சத்தியமங்கலம் சந்தையில் விற்று வருகின்றனர்.

ஆறடிக்கு ஆறடி என்கிற கணக்கில் வாழைக்கன்றுகளை நட்டுள்ள விவசாயிகள், அதன் நடுப்பகுதியில் கோழிக்கொண்டைப் பூஞ்செடிகளை வளர்த்து வருகின்றனர். சொட்டுநீர்ப் பாசன முறையில் வாழைக்குப் பாயும் தண்ணீரிலேயே கோழிக்கொண்டைப் பூஞ்செடிகளும் செழித்து வளர்கின்றன.

நட்ட 3 மாதங்களில் கோழிக்கொண்டைப் பூக்கள் பயன்தரத் தொடங்குகின்றன. நாள்தோறும் பறிக்கப்படும் பூக்களைச் சத்தியமங்கலம் சந்தையில் ஏலமுறையில் விற்கின்றனர்.

ஒரு கிலோ பூ இருபது ரூபாய் முதல் எண்பது ரூபாய் வரை விலைபோகிறது. திருமணம், திருவிழாக் காலங்களில் பூக்களுக்கு இதைவிடக் கூடுதலாகவும் விலை கிடைக்கிறது. இதன்மூலம் ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை முன்கூட்டியே வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வாழைகள் ஓரளவு உயரமாக வளர்ந்தபின் பூஞ்செடிகளிலும் பூக்கள் குறையத்தொடங்கும்போது செடிகளை மடக்கி மண்போட்டு வாழைக்கு உரமாக்கி விடலாம். இதனால் தழையுரம் பெற்ற வாழை நன்கு செழித்து வளரும் எனச் சத்தியமங்கலம் விவசாயிகள் கூறுகின்றனர்.

வாழை கன்றாக இருக்கும்போதே அதில் பூஞ்செடிகளை ஊடுபயிராக வளர்த்து முன்கூட்டியே வருமானம் ஈட்டி வருகின்றனர் சத்தியமங்கலம் விவசாயிகள். இதை மற்ற மாவட்டங்களில் வாழை பயிரிடும் விவசாயிகளும் பின்பற்றிக் கூடுதல் வருமானம் பெறலாம்….

நன்றி: பாலிமர் நியூஸ்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *