வாழையில் கிழங்கு அழுகல் நோய் கட்டுபடுத்துவது எப்படி

வாழை சாகுபடியில் கன்று நடவில் இருந்து ஐந்து மாதங்கள் வரை கிழங்கு அழுகல் நோய் அதிகம் காணப்படும்.

அறிகுறிகள்

 • நோய் தாக்கப்பட்ட கன்றின் இலைகள் மஞ்சளாகவும், இளம் குருத்து மிகவும் சிறுத்தும், இலைகள் வெளிவர முடியாமல் தண்டின் உள்ளேயே இருப்பது போல் காணப்படும்.
 • ஆரம்பத்தில் குருத்து இலைகள் காய்ந்தும் மற்ற இலைகள் பச்சையாகவும் இருக்கும். நாளடைவில் பச்சை இலைகளும் காய்ந்து விடும்.
 • அடித்தண்டு உப்பி பெருத்தும், தரைமட்டத்தில் தண்டில் கருப்பு நிற வளையமும், வெடிப்பும் காணப்படும்.
 • சில சமயம் தரைமட்டத்தில் அடித்தண்டில் தண்டுப்பகுதி அழுகி காணப்படுவதால் தண்டை பிடித்து லேசாக இழுத்தால் தண்டு கிழங்கில் இருந்து தனியே வந்து விடும்.

பரவும் வீதம்:

 • வடிகால் வசதி இல்லாமல் இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பது, கோடை காலத்தில் மண் வெப்பம் அதிகரிக்கும் போது, எர்வீனியா என்ற இந்த கிழங்கு அழுகல்நோய் ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

 • மழைகாலத்தில் நிலத்திற்கு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
 • வெயில் காலங்களில் ஊடுபயிராக சணப்பை பயிரிட்டு, 45 நாட்கள் கழித்து பிடுங்கி, மண்ணில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
 • நடவு நட்ட 3ம் நாள் எமிசான் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றினை சுற்றி ஊற்ற வேண்டும்.
 • ஒரு லிட்டருக்கு கார்பன்டசிம் ஒரு கிராம், ஸ்டெப்ரோமைசீன் 0.20 கிராம் கலந்து ஒவ்வொரு கன்றிற்கும் 250 மி.லி., வீதம் கன்றினை சுற்றி ஊற்ற வேண்டும்.
 • புரோப்பிகோனசோல் மருந்து: 0.5 மி.லி., ஸ்டெப்ரோமைசீன் சல்பேட் 0.20 கிராம், ஒரு லிட்டரில் கலந்து ஒவ்வொரு கன்றிற்கும் 250 மி.லி., வீதம் ஊற்ற வேண்டும்.
 • முதல் மருந்திற்கு பின்னர், 20வது நாள், 40வது நாளில் இதேபோல் வேர்பாகத்தை நனைப்பதன் மூலம் எர்வீனியா என்ற கிழங்கு அழுகல் நோயில் இருந்து வாழையை பாதுகாக்கலாம்.

இவ்வாறு தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *