தற்போது மழைப் பொழிந்து வெப்பம் குறையும் சூழ்நிலையில் நூற்புழுக்கள் அதிகம் உற்பத்தியாகி வாழையை தாக்குகின்றன.
கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் இந்த நூற்புழுக்களை சரியான நிர்வாக முறைகளைக் கையாண்டு கட்டுப்படுத்தலாம்.
இந்த நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்சியியல் வல்லுனர் நி. விஜயகுமார் கூறியது:
வாழையை 70-வகையான நூற்புழுக்கள் தாக்கினாலும், ஐந்து வகையான நூற்புழுக்கள்தான் அதிக சேதம் விளைக்கின்றன.
அவை தற்போதுள்ள சீதோஷ்ண நிலையில் அதிகம் தாக்குகின்றன.
அவை, வேர்துளைக்கும் நூற்புழு, வேர்க்காய் நூற்புழு, சுருள் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, வேர்நீர்கட்டி ஆகியவனவாகும்.
வேர்துளைக்கும் நூற்புழுவின் பாதிப்பு அறிகுறிகள்:
- வேர்கள் மற்றும் கிழங்கின் வெளிப்பகுதிகளில் கருஞ்சிவப்பு காயங்கள் காணப்படும்.
- வேர்ப்பிடிப்பு குறைவதால் மரம் வேரோடு சாய்ந்து விடும். அனைத்து வாழை ரகங்களும் வேர்துளைக்கும் நூற்புழுவின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
- ஆனால், நெய்பூவன், குன்னன் போன்ற இரகங்கள் அதிகம் பாதிக்கப்படாது.
வேர்க்காய் நூற்புழுவின் பாதிப்பு அறிகுறிகள்:
- வேர்ப் பகுதிகளில் கருப்பு நிறக் காயங்கள் வேரின் உட்பகுதி வரை செல்லும்.
- வேர்க்காய் நூற்புழுக்கள் வாழையின் அனைத்து ரகங்களையும் தாக்கும்.
சுருள் நூற்புழுவின் பாதிப்பு அறிகுறிகள்:
- வேர்களின் மேல்பகுதியில் கருங்கோடுகள் தோன்றும், நுனியிலிருந்து வேர் அழுகும்.
- வேரின் உட்பகுதி வரை செல்லும் சுருள் நூற்புழுக்கள் வாழையின் அனைத்து ரகங்களையும் தாக்கும்.
வேர் முடிச்சு நூற்புழுவின் பாதிப்பு அறிகுறிகள்:
- மரங்கள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்.
- இலைகள் காய்ந்தும், வேரில் முடிச்சுகள் அதிகமாகவும் காணப்படும்.
- இந்த நூற்புழுக்களும் வாழையின் அனைத்து ரகங்களையும் தாக்கும்.
வேர்நீர்கட்டியின் பாதிப்பு அறிகுறிகள்:
- இந்த நூற்புழுவானது, சல்லி வேர்களை மட்டுமே தாக்கும்.
- மரம், வளர்ச்சி குன்றியும், தார் வெளிவர முடியாமலும், தார்கள் வந்தாலும் சிறுத்தும் தரம் குறைவாகவும் இருக்கும்.
- இந்த நூற்புழுக்கள் வாழையின் அனைத்து இரகங்களையும் தாக்கும். அதே சமயத்தில் இது நெற்பயிரையும் தாக்கும் தன்மைக் கொண்டது.
கட்டுப்படுத்தும் வழிகள்:
- நூற்புழு தாக்காத நிலத்தை வாழையின் நடவுக்காக தேர்வு செய்ய வேண்டும்.
- வாழை நடவு செய்யும் வயலில் கண்டிப்பாக கோடையில் உழவுச் செய்ய வேண்டும்.
- வாழை நடவு செய்வதற்கு முன், நடவுக் குழிகளில் மூன்று பங்கு வேப்பம் புண்ணாக்கு, இரண்டு பங்கு சர்க்கரை ஆலைக் கழிவு, ஒரு பங்கு சுட்ட சுண்ணாம்பு ஆகியவற்றை கலந்து ஒரு கை அளவுக்கு இட வேண்டும்.
- வாழைக்கான விதைக் கிழங்கின் மேல் தோல் மற்றும் வேர்களை சீவிய பின் 50-55 டிகிரி செல்சியஸ் கொதிநீரில் 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
- சாமந்தி பூ மற்றும் கேந்தி போன்ற பூ பயிர்ளை ஊடு பயிராக நடவுச் செய்ய வேண்டும்.
- வாழைக்கான விதைக் கிழங்கினை 0.1 சத வேப்ப எண்ணை கரைசலை நனைத்து நடவுச் செய்ய வேண்டும்.
- வாழை நட்ட மூன்றாவது மற்றும் ஐந்தாவது மாதங்களில், வேப்பம் புண்ணாக்கு ஒரு கன்றுக்கு அரைக் கிலோ என்ற அளவிலும், மணிலா புண்ணாக்கு ஒரு கன்றுக்கு ஒரு கிலோ என்ற அளவிலும் இட வேண்டும்.
- வேப்பம் புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து இடுவதால் நூற்புழுவின் தாக்குதல் குறையும்.
- நூற்புழு தாக்குதல் அதிகமாக உள்ள வாழைத் தோப்புகளில் “கார்போபியூரான் 3ஜி’ என்ற குருணை மருந்தினை அல்லது “அல்டிகார்ப்’ என்ற நூற்புழு மருந்தினை ஒரு மரத்திற்கு 40 கிராம் என்ற அளவில் நடவுச் செய்த 3 மற்றும் 5 வது மாதங்களில் இடலாம்.
- நெல், கரும்பு, பயறு வகைகள், பருத்தி மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களுடன் வாழைப் பயிரினை பயிர் சுழற்சி முறையில் செய்யலாம்.
- ஆமணக்கு, சணப்பை, கிளைடீசீரியா, வேம்பு, வெற்றிலை மற்றும் முருங்கை இலைகளின் சாற்றினை வாழையின் வேர்களில் தெளிப்பதால் நூற்புழு தாக்குதல் குறையும்.
- மேலும் உயிரக பூஞ்சாணமான “பேசிலோமைசிஸ் லைலாசினஸ்’ ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் என்ற அளவில் கரைத்து வேர்ப் பகுதி நனையும்படி தெளித்தால் நூற்புழு இறந்தவிடும்.
- இவ்வாறு நூற்புழுக்களை முறையாக கட்டுப்படுத்துவதன் மூலம் வாழை பயிர் செய்யும் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
supper news sir