‘வாழையடி வாழையா…’ என்பதை வாழ்த்துச் சொல்லாகத்தான் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்தப் பழமொழி உண்மையில் சொல்லவருவது, வாழையின் வளத்தைப் பெருக்கவே. வாழை விவசாயத்தில் அடிவாழையை வெட்டாமல் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நம் முன்னோர் வலியுறுத்தியது என்கிறார் கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி.

வாழையே உரம்
இயற்கை விவசாய முறையைப் பின்பற்றும் இவர் மரம், செடிகளில் இருந்து உதிரும் இலைகளை அப்புறப்படுத்துவதில்லை. அவற்றை அப்படியே மக்கவைத்து உரமாக்கிவிடுவது வழக்கம். இதையே இன்னும் தீவிரமாகச் செய்கிறார் விவசாயி மணி. வாழை அறுவடை செய்த பின், அடி வாழை மரத்தை இவர் வெட்டுவதில்லை. அதேபோல் ஒரு வாழையின் பக்கவாட்டில் வளரும் வாழைக்கன்றையும் வெட்டுவதில்லை. முதல் வாழைத்தார் அறுத்த பின்பு, வாழை மரத்தை அப்படியே விட்டுவிடுகிறார்.
அந்த வாழை மரத்தில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் தண்டில் இருக்கும் சத்துகள் பக்கவாட்டில் முளைக்கும் அடுத்த வாழைக்கு உரமாகவும், 50 சதவீத நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது என்கிறார் மணி. இவருடைய வாழை தோப்பில் 9 ஆண்டுகள் ஆன பழுத்துச் சாய்ந்த வாழை மரத்தைக்கூடப் பார்க்க முடிகிறது. இந்த அனுபவம் குறித்து மணி பகிர்ந்துகொண்டது:
பல பயிர் விவசாயம்
“எங்க தாத்தா காலத்திலிருந்தே விவசாயம்தான் ஜீவாதாரம். ஒன்பது வருஷத்துக்கு முன்பு இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். ஐந்து ஏக்கர் நிலத்தில், ஆரம்பத்தில் குறைச்சலாத்தான் விளைச்சல் கிடைச்சுது. இப்போ ரசாயன உரம் போட்டால் என்ன விளைச்சல் கிடைக்குமோ, அந்த அளவு விளைச்சல் கிடைக்குது. எல்லாமே சொட்டு நீர் பாசன முறைதான்.
இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை ஓன்றிரண்டு பயிர்களில், குறைந்த ரகங்களைப் பயிரிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். வாழையைப் பொறுத்தவரை எனது தோப்பில் நேந்திரன், பூவன், கற்பூரவல்லி, கதளி ஆகியவற்றைப் போட்டி ருக்கேன். தவிர முருங்கை, பப்பாளி, சுண்டக்காய், பாகல், தட்டை, கறிவேப்பிலை, சீதா, சேனை, கனகாம்பரம், தென்னை, பசலைக்கீரை, ஆமணக்கு, பாக்கு, புடலை, தட்டைப்பயறு எனப் பல்வேறு பயிர்களைப் பயிரிட்டுள்ளேன்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்த நொச்சி, சீத்தா, எருக்கன், ஊமத்தம்பூ ஆகியவற்றை ஊறவைத்துக் கிடைக்கும் கரைசலைத் தெளிக்கிறேன். பூண்டுக் கரைசலையும் பயன்படுத்துகிறேன்!” என்கிறார்.
ஜீவாமிர்தம்
உதிரும் சருகுகளை உரமாக்குவதுடன், ஜீவாமிர்தம் எனும் இயற்கை உரத்தையும் இவரே தயாரிக்கிறார். 20 கிலோ மாட்டுச் சாணம், 20 லிட்டர் கோமியம், கடலை, கொள்ளு போன்ற இலைத் தாவரத்தில் ஏதேனும் ஒன்றை 2 கிலோ காயவைத்துப் பொடிசெய்துகொண்டு, வெல்லம், விவசாயம் செய்யப்படும் நிலத்தின் மண் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அனைத்தையும் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கிறார்.
இரண்டு நாட்கள் கழித்து இது பயன்படுத்தும் பதத்துக்கு வந்துவிடுகிறது. அதைப் பயிர்களுக்குப் பயன்படுத்துகிறார். தனது தோட்டத்தில் விளைந்ததை விற்பதற்கு இரண்டு கடைகளையும் நடத்திவருகிறார் மணி.
விவசாயி மணி, தொடர்புக்கு: 09894450564
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்