தரமான விதைகள் உற்பத்தியின் ஆதாரம்

தேனி மாவட்டம் வைகை அணை அருகே கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்’. இது 1995ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 105 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

பவானி சாகர் மற்றும் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் விதை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் நோக்கம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விதைகளின் முளைப்புத்திறன் குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்கிறது.

100 சதவிகிதம் முளைப்புத்திறன் கொண்ட விதைகள் மட்டுமே விவசாயிகளுக்கு நியாய விலைக்கு வழங்குகிறது. இதன் மூலம் போலி விதைகளை நடவு செய்து, அதனால் ஏற்படும் நஷ்டத்தை விவசாயிகள் தவிர்க்க இயலும்.

தரமான விதை உற்பத்தி

தேனி மாவட்டம் தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பேராசிரியை சு.ஜூலியட் ஹெப்சிபா கூறியதாவது:

இந்த ஆராய்ச்சி நிலையம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. வல்லுனர் விதை, ஆதார விதை, சான்று விதை, உண்மை நிலை விதை என நான்கு பிரிவுகளாக விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

வல்லுனர் விதை உற்பத்தியில் நெல்லில் ஏ.வி.டி.37, ஏ.வி.டி.45. வல்லுனர் உளுந்து, வம்பன் – 4 உளுந்து, பாசிப்பயறு வம்பன் – 3, நிலக்கடலை கோ-6 ஆகிய விதைகள்.

ஆதார விதை உற்பத்தியில் நெல்லில் கோ-51, ஏ.பி.டி. 45 ஆகிய விதைகள். சான்று விதை உற்பத்தியில் உளுந்து வம்பன் – 6, பாசிப்பயறு கோ-8, தட்டைப்பயறு கோ-7, மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் கோ-6 ஆகிய விதைகள். உண்மை நிலை விதை உற்பத்தியில் வம்பன் உளுந்து – 8. காய்கறி விதை உற்பத்தியில் வெள்ளை பூசணி கோ – 1, பாகற்காய் கோ – 1, புடலங்காய் – பாலுார் – 1, சின்ன வெங்காயம் கோ – 5, பசுந்தாள் விதை உற்பத்தியில் சணப்பு, தக்கைப்பூண்டு விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

முளைப்புத்திறன் 100 சதம்

விதைகளின் முளைப்புத்திறன் குறித்து கோவை வேளாண் பல்கலை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 100 சதவிகிதம் முளைப்புத்திறன் மற்றும் இனத்துாய்மை கொண்ட விதைகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படும். விதைகளின் ரகங்களின் விலை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கோவை வேளாண் பல்கலை அறிவிக்கும்.

இந்தாண்டு ஜூன், ஜூலை மாதத்தில் விவசாயிகளுக்கு விதைகள் தேவைப்படும். அதற்குள் விதைகளை உற்பத்தி செய்யப்பட்டு விடும். நெல் விதை 25 டன் (டன் என்பது ஆயிரம் கிலோ), நிலக்கடலை விதை 4 டன், பாசிப்பயறு விதை 1.5 டன், உளுந்து விதை 2 டன் என்ற அளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *