பரம்பரிய விதைகள்!

கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விதைகளைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. விதைகளைப் பண்டமாற்றாகப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இதனால் அந்தந்த மண்ணுக்குரிய விதைகள் அங்கேயே திரும்பத் திரும்பப் பயிரிடப்படுவதுடன், விதைகள் குறித்த அறிவும் தேடலும் பரவலாகும் என்று பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை உழவர்கள் வலியுறுத்தினார்கள்.

eco_2979779f
Courtesy: Hindu

இயற்கை வேளாண் இடுபொருட்கள், விளைபொருட்கள் குறித்து இளம்தலைமுறை விவசாயிகளுக்கு அறிவூட்டுதல், நாட்டு விதைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாரம்பரிய விதைத் திருவிழா, இயற்கை உழவர்கள் பட்டறிவுப் பகிர்வு முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது. இயற்கை வேளாண்மை இயக்கம், பசுமை சிகரம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெரம்பலூர், சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை உழவர்கள், ஆர்வலர்கள், முன்னோடிகள், அதிக அளவில் இளைஞர்கள் இந்தச் சந்திப்பில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முன்னோடித் தொடர்பு

இயற்கை முன்னோடி உழவர் பழ. ஆறுமுகம்:

பெரம்பலூர் மாவட்டம் தனது தேவைக்கான காய்கறி, கீரைகளை உற்பத்தி செய்வதில் சுயசார்பு அடையவில்லை. ஆனால் அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பிப் பருத்தி, மக்காச்சோளத்தைப் பயிரிட்டு, இடைத்தரகர்களால் நஷ்டமடையும் போக்கு மட்டும் தொடர்கிறது. இதுபோல ஒவ்வொரு பகுதி விவசாயிகளும் தங்கள் சுயசார்புக்கு ஒத்துவராத பயிர்களை நம்பி ஏமாந்துவருகிறார்கள்.

இயற்கை வேளாண்மை நமக்குப் புதிதல்ல. நமது பாட்டன் பூட்டன் காலத்தில் வாழ்வளித்துவந்த சிறுதானியங்களும் நமக்குப் புதியவையல்ல. அந்தந்த மண்ணின் இயல்புக்கும் நீராதாரத்துக்கும் ஏற்ற பயிர்களைச் சிறப்பாக மேலாண்மை செய்து, பாரம்பரிய வேளாண்மையில் விளைவித்திருக்கிறார்கள். சற்று இடைவெளிக்குப் பிறகு இப்போது அவற்றை மீட்டிருக்கிறோம். இதில் புதியவர்கள், புதிதாக முயற்சிப்பவர்கள் முன்னோடிகளுடன் தொடர்பில் இருந்தால் போதும்.

செலவில்லா நெல் ரகங்கள்

லால்குடி சம்பத்:

இயற்கை வேளாண்மை என்றால் அதிகச் செலவு பிடிக்கும் என்ற தவறான புரிதல் நிலவுகிறது. இயற்கை வேளாண்மைக்குக் குறைந்த செலவே ஆகும், சில வேளைகளில் செலவே இல்லாமலும் இயற்கை வேளாண்மையில் தாக்குப்பிடிக்க முடியும். சிறுதானியங்களுக்கு நிகராக மாப்பிள்ளை சம்பா, காட்டு யாணம், இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை, வாடன், கம்பன் சம்பா, கவுனி ரகங்கள், பெருங்கார், ராஜபோகம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் கவனம் பெற்றிருக்கின்றன. செலவு பிடிக்காததும், உணவுச் சந்தையில் கவனம் பெற்றதுமான இந்த நெல் ரகங்களைப் பயிரிட்டு லாபம் பார்க்கலாம்.

இயற்கை விவசாயி சதீஷ்:

கத்திரி, வெண்டை, பாகல் உள்ளிட்ட நமது நாட்டுக் காய்கறிகளுக்கான விதைகளுக்குக்கூட அமெரிக்க நிறுவன முகவர்களை அணுகும், நமது அறியாமை மாற வேண்டும். நாட்டு விதைகளை விதைத்தால்தான் இயற்கை விவசாயம் நல்ல பலனைத் தரும். அந்தந்தப் பகுதியின் வெப்பநிலை, நீராதாரம், மண் வளம் உள்ளிட்டவற்றுக்கு ஈடுகொடுத்து மகசூலையும் அள்ளித்தரும்.”

நாட்டு விதைப் பகிர்வு

இளம் விவசாயியான கார்த்திகேயன்:

நாட்டு விதைகள் எளிதில் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் சிலர் கவலைப்படுகின்றனர். கிராமத்தில் இருப்பவர்கள் விதைகளைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. விதைகளைப் பண்டமாற்றாகப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இளம் விவசாயிகளுக்குப் பரிசாகவும் விருந்தினருக்கு விழாக்களில் சிறப்புப் பரிசாகவும் விதைகளை அளிக்கலாம். இதனால் அந்தந்த மண்ணுக்குரிய விதைகள் அங்கேயே திரும்பத் திரும்பப் பயிரிடப்படுவதுடன், விதைகள் குறித்த அறிவும் தேடலும் பரவலாகும். விதைப் பரிமாற்றத்தைப் போலவே இடுபொருட்கள், கூலியாட்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்தப் பரஸ்பர உதவிகளைத் தொடர வேண்டும். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக இணைந்து கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த ஒரு கட்டத்தில் உதவும்.

இயற்கை வேளாண்மை பயிற்றுநர் மன்னா.ஏகாம்பரம்: இதுபோன்ற சந்திப்புகளை, புதிய உத்திகளை உங்களது கிராமங்களிலும் நடத்துவது இயற்கை வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். இயற்கை வேளாண்மை என்றாலே செலவு பிடிப்பது, அதன் விளைபொருட்கள் விலை அதிகமானவை என்ற மாயையை அப்போதுதான் உடைக்க முடியும்.

தேவை விதை வங்கிகள்

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சூழலியலாளர் ரமேசு கருப்பையா:

மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமானது மரபணு மாற்றப் பருத்தி விதைகளே. அதிக விளைச்சல், அதிக லாபம் என்ற விளம்பரப்படுத்தப்பட்ட அந்த விதைகளைப் பயிரிட்ட விவசாயிகள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, பராமரிப்புக்கு எனத் தொடர்ந்து அகலக் கால் வைத்ததால் நொடித்துப்போய்த் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மரபணு மாற்றப் பருத்தி, வீரிய ஒட்டுரக மக்காச்சோளம் பயிரிடல் அபாயக் கட்டத்துக்கு அதிகரித்துவருகிறது. இவற்றுக்காக நஞ்சு மிகுந்த பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், நிலத்தடி நீரும் மண்ணும் நஞ்சேறி வருகின்றன. அதிகப் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக, விவசாயக் குடும்பங்களில் தற்கொலைகள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக அவற்றைப் புறக்கணித்துவிட்டு, நாட்டு விதைகளைக் கொண்டு இயற்கை வேளாண்மையில் இறங்குவதற்கான முன்னெடுப்பாக இது போன்ற சந்திப்புகள் அவசியம். இதன் தொடர்ச்சியாகக் கிராமந்தோறும் நாட்டு விதை வங்கிகளும் உருவாக்கப்பட வேண்டும்.

இயற்கைக் கண்காட்சி

பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வம், பருத்தியைத் தாக்கும் பூச்சிகள் குறித்தும், அவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் உழவர்கள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் பாதகங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். மரபணு மாற்றப் பருத்திக்கு மாற்றாக நாட்டுப் பருத்தியில் லாபம் பார்ப்பது குறித்து நெய்வேலி வை. சுவாமிநாதன், இயற்கை விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் உத்திகள் குறித்துச் செங்குனம் ராமகிருஷ்ணன், விதைகள் சேகரிப்பு, சேமிப்பு, பரிமாற்றம் குறித்து விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து முசிறி யோகநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குப் பனங்கொட்டைகள், அழிஞ்சில் விதைகள் உள்ளிட்டவற்றைக் குளத்தூர் ஆவாரை நண்பர்கள் இலவசமாக வழங்கினார்கள். இயற்கை வேளாண் விளைபொருட்கள், சிறுதானியங்கள், அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள், ஏற்றுமதி செய்யக்கூடிய மதிப்புக்கூட்டு பொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், அரிய மூலிகைத் தாவரங்கள், நாட்டு மருந்துத் தயாரிப்புகள், மண்பானை ரகங்கள், துணிப்பைகள் உள்ளிட்டவற்றைக் கண்காட்சியாகவும், விற்பனைக்கும் வைத்திருந்தனர்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பரம்பரிய விதைகள்!

  1. h.priyanka says:

    mirugangalidam irundu payirgalai eppadi paadugakkalam?
    engal nilam pakkathil aadu ,madu pillugalai meygiradu aatkal illada nerathil adu vayalil erangi vidugiradu .padugaapu payiraga enda payirai verappu orathil valarkalam .keyvargu podvendum endru ninaikkuren anda payirukku edu paadugaapu payiraga irukkum?
    en kuzhappathuku yaarenum nalla badilai sollavum!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *