விதைக்காக கையேந்த அவசியமில்லை!

கோவை மாவட்டம், பட்டக்காரன்புதுார் கிராமத்தைச் சேர்ந்த, ‘முன்னோடி இயற்கை விவசாயி’யான, பி.ஆர்.சுப்பிரமணியம் கூறுகிறார் :

  • எனக்கு பூர்வீகமே இந்த ஊர் தான்; பரம்பரையான விவசாயக் குடும்பம். 4 ஏக்கர் மானாவாரி நிலம் இருக்கிறது; வானம் பார்த்த பூமி.
  • அதிக விளைச்சல் கொடுக்கும் வீரிய ரக விதைகள் வந்தபடி உள்ளன. நிறைய விவசாயிகள் அதைத்தான் விதைக்கின்றனர். அந்த விதைகளைச் சாகுபடி செய்தால், ஒவ்வொரு போகத்துக்கும், விதையை விலை கொடுத்து வாங்க வேண்டிஇருக்கும்.
  • நான், எங்கள் பாட்டன், பூட்டன் பயன்படுத்திய பாரம்பரிய விதைகளைத் தான், பட்டம் தவறாமல் விதைக்கிறேன். ஒவ்வொரு தடவையும் விளையும் பயிர்களில் இருந்து, அடுத்த போக விதைப்புக்கு தேவையான விதைகளை எடுத்து வைத்துள்ளேன்.
  • எந்தக் காலத்திலும் விதைகளை வெளியில் இருந்து, விலை கொடுத்து வாங்குவதே இல்லை.இப்போது, பாரம்பரிய விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. விளைவதில் பெரும் பகுதியை விதைக்காகத்தான் விற்பனை செய்து வருகிறேன்.
  • அறுவடை முடிந்ததும், அடித்து துாத்தி, மூட்டை பிடித்து சுடச்சுட வியாபாரம் செய்தால், உடனடியாக விலை கிடைத்து விடும்.ஆனால் நான், கொஞ்சம் பொறுமையாக இருந்து, விதைகளை காய வைத்து சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்தி, மூட்டை பிடித்து வைத்து விடுவேன். ‘விதை உறங்கும் காலம்’ முடிந்ததும், விதைப்புக்கு எடுத்து வைத்தது போக, மீதியை விதைக்காக விற்பனை செய்கிறேன்.
  • பங்குனி பட்டத்தில், ‘குத்துக்காராமணி’ என்ற, நாட்டு ரக தட்டைப் பயிறு, 2.5 ஏக்கர் நிலத்தில் விதைத்து அறுவடை செய்ததில், 1,000 கிலோ கிடைத்துள்ளது.
  • தட்டைப்பயறு விதை, 1 கிலோ, 80 ரூபாய்க்கு விலை போகிறது. அந்தக் கணக்குபடி, 2.5 ஏக்கருக்கு, 80 ஆயிரம் ரூபாய் வருமானம்.
  • இதில் உழவு, அறுவடை என, எல்லாச் செலவும் போக, 50 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.
    அதே வயலில் இப்போது, எள் விதைத்துள்ளேன். அது, காய்ப்புப் பருவத்தில் உள்ளது.இதோடு, 2 ஏக்கர் நிலத்தில், உளுந்து போட்டு அறுவடை செய்து, அதையும் மூட்டை பிடித்து வைத்துள்ளேன்.
  • நாட்டு ரகங்களை விதைத்தால், விதைக்காக யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.
  • நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, எள், துவரை என, மாற்றி மாற்றி மானாவாரியில் சாகுபடி செய்கிறேன். ஆண்டுக்கணக்காக அந்த விதைகளையே தான் எடுத்து வைத்து வருகிறேன். நாட்டு ரக விதைகளை மற்றவர்களுக்குக் கொடுப்பதில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

தொடர்புக்கு 9894505188

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *