விதை வளத்தைக் கொள்ளையடிக்க நடக்கும் முயற்சிகள்

விதையும், விதைப் பன்மயமுமே விவசாயிகளின் உயிர்நாடி. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட பன்னாட்டு நிறுவனங்களும், விதை பன்மயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசுகளும் மிக அதிகமாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

அதனால்தான் அரசு ஆணைகளின் மூலமும், வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமும் விதை பன்மயத்தை ஒடுக்க முயற்சிக்கின்றனர். நவீன வேளாண்மை என்கிற பெயரில் பயிர் உற்பத்தி முறையிலிருந்து விதை விலக்கப்பட்டது. விவசாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்த விதை, பெரும் வியாபாரமானது. அது ஒற்றை இடுபொருளாயிருந்த காலம் போய் ரசாயனம், பூச்சிக்கொல்லி, நீர் இறைப்பு இயந்திரங்கள் என ஒரு தொகுப்பாக விற்கப்பட்டது. அதனுடன் கடன், கடனுக்கான வட்டி போன்றவையும் சேர்ந்து பெரிய வலைப்பின்னலாக மாறின.

சட்ட நெருக்கடிகள்

உற்பத்தியை அதிகரிப்பதற்கு என்கிற பெயரில் மீண்டும் மீண்டும் விதையைச் சொந்தமாகப் பயன்படுத்துவதை விலக்கி வைத்தது நவீன வேளாண்மை. ஒவ்வோர் ஆண்டும் வெளிச்சந்தையில் விற்கப்படும் புதிய விதையை விலை கொடுத்து வாங்குவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று ஆசை காட்டப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் புதிய விதை விற்பனை அதிகரிப்பு குறித்தான ‘விதை மாற்ற விகிதத்தையே’ மேம்பாட்டுக்கான அளவுகோலாக வேளாண்மைத் துறை முன்வைத்தது. இந்தியக் காப்புரிமை அமைப்பின் கீழ் விதைகளுக்கும், பயிர்களுக்கும் காப்புரிமை வழங்கப்படுவதில்லை. அதேநேரம் மரபணுப் பொருட்களுக்கும் நியூக்ளியோடைடு வரிசை முறைகளுக்கும் காப்புரிமை பெறப்படுகிறது. துரதிருஷ்டவசமாக இது கேள்விக்கு உட்படுத்தப்படவே இல்லை.

Courtesy: Hindu

இப்படி விதைகளின் மீது நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கம் போதாது என விதைச் சட்டம், விற்பனைச் சட்டம், வர்த்தக ஒப்பந்தங்கள், காப்புரிமைச் சட்டம், இறக்குமதியை எளிமைப்படுத்தும் சட்டம் போன்ற பலவும் சோதா விதைகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளைச் சந்தைக்குள் திணிக்கின்றன.

பயங்கரச் சட்டம்

விதை சட்டம், 2010 இப்படிப் பல வில்லங்கமான ஷரத்துகளின் மூலம் மிரட்டியது. அதன்படி விவசாயிகள் விதை சேமிக்கவே கூடாது, பரிமாறிக்கொள்ளக் கூடாது எனப் பல கொடிய கட்டுப்பாடுகளை விதித்தது. மீறிச் செய்தால் கடுமையான அபராதம், சிறை தண்டனை விதிக்க வகை செய்தது.

தரமற்ற விதையை விற்கும் நிறுவனங்கள் பற்றியோ, தவறான விதைகள் விற்கப்பட்டால் தண்டனை, அபராதம் அளிப்பது பற்றியோ அந்தச் சட்டம் யோசிக்கவில்லை. விதைக்கு அரசே விலை நிர்ணயிப்பது பற்றியும் சிந்தனையில்லை. ஆனால், விவசாயிகளின் உரிமையை ஒடுக்குவதில் பேரார்வம் காட்டப்பட்டது!

நாடு தழுவிய போராட்டங்களால் இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்னமும் அந்தத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் இருந்துவருகிறது மத்திய அரசு. முந்தைய காங்கிரஸ் அரசு விதைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்த பா.ஜ.க., இன்றைக்கு அதே சட்டத்தில் மேலும் கடுமையான ஷரத்துகளை இணைக்க முயற்சிக்கிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகளைச் சேர்க்கவும் துடிக்கிறது.

அறிவுசார் தாக்குதல்

மண்டலப் பொருளாதாரப் புரிந்துணர்வு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership – RCEP) இந்தியா உள்ளிட்ட 16 ஆசிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. உலக வர்த்தகக் கழகத்தால் வந்த கேடுகள் போதாது என்பதுபோல், அதைவிட கொடுமையான ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம் குறித்து எந்த அம்சமும் இதுவரை மக்களிடம் பகிர்ந்துகொள்ளப்படவே இல்லை.

இப்படி விதை சேகரிப்பு, உள்ளூர் விதை உற்பத்தி போன்ற பாரம்பரிய நடைமுறைகளுக்கும், பாரம்பரிய அறிவுக்கும் எதிராக அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதன் மூலம் விதையைச் சேமிக்கும் உழவர்களின் உரிமை தடுக்கப்பட்டு, அதிக விலை கொண்ட கார்ப்பரேட் விதைகளை வாங்குவதற்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நம்முடைய விதை இறையாண்மை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

தென்னமெரிக்க முன்னுதாரணம்

பாரம்பரிய விதைகளைப் பேணுவதற்கான உரிமையை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டங்கள் உலகெங்கும் உள்ள ஏழை நாடுகளில் சமீப ஆண்டுகளாக இயற்றப்பட்டுவருகின்றன. அந்த நாடுகளின் உயிர் பன்மயத்தின் மேல் போர் தொடுக்கும் வேகத்துடன் மக்கள் எதிர்ப்பை மீறி இச்சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதைப்போலவே கொலம்பியாவிலும் பாரம்பரிய விதைகளை விவசாயிகள் சேமிப்பதோ அல்லது சக விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்வதோ சட்டப்படி தவறு என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதேநேரம் தென்னமெரிக்க நாடுகளான பொலீவியா, பெருவில் இதற்கு நேரெதிராகப் பூமித்தாய் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பூமித்தாய்க்கு பாரம்பரிய அந்தஸ்தை கொடுப்பன் மூலம், பூமியும் சட்ட உரிமைகள் பெற்ற ஒன்றாக மாறிவிடுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் உயிர்ப் பன்மயம், வேளாண் பன்மயம் பாதுகாக்கப்படுகிறது, மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் தடை செய்யப்படுகின்றன.

பொலீவியா, பெருவை போல விவசாயிகளின் கையில் இருக்கும் விதை பன்மயம் பறிபோவதைத் தடுக்க வேண்டும். அவர்களது நிலத்தில் மட்டுமல்லாமல், நம் வீட்டிலும் பல ரகங்களாக, பல பயிர்களாக, பல்வகை விதைகளாக, பல்வகை உணவாக இருக்க வேண்டும்.

பறிபோய்க்கொண்டிருக்கும் நம் விதை இறையாண்மையை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, விதை வளத்தின் முக்கியத்துவத்தைச் சிலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நமது விதை, விதை பன்மயத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு பாரம்பரிய விதைகளைச் சேகரிக்கும் விதை வித்தகர்கள், விதை பாதுகாவலர்கள், சமூக விதை வங்கிகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

– கட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *