கருவேலங்காடாக இருந்த 140 ஏக்கர் சீரமைத்து விவசாயம்

வெளிநாட்டு மோகத்தை விடுத்து பல ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை சீரமைத்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர் காரைக்குடி பள்ளத்தூர் விவசாயிகள்.

போதிய மழையின்மை,ஆர்வம் குறைந்ததால்,கடந்த 15 ஆண்டுகளாக விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. செல்வத்துக்காக கடல் கடந்து வேலை செய்து, குடும்பத்தினரை சந்திக்க முடியாமல்,நல்லது கெட்டதுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானோர்.இந்நிலை என்று மாறுமோ? என்று ஏங்கி தவிக்கும் சமுதாயத்துக்கு மத்தியில் நாங்கள் மாறியுள்ளோம் என கூறுகின்றனர் பள்ளத்தூர் விவசாயிகள்.காரைக்குடி அருகே பள்ளத்தூர் பெரிய கண்மாய் மூலம் முப்போகம் விளைந்த 140 ஏக்கர் நிலத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக சீமை கருவேல மரங்கள் மண்டி கிடந்தது. யார் சீரமைப்பார்கள்? என்று ஏங்கியிருந்த நேரத்தில் முயற்சி செய்து பார்ப்போம்,முப்போகம் விளைந்த இடத்தில் ஒரு போகமாவது விளைய வைப்போம் என்று வெளிநாட்டில் இருந்து வந்த முன்னாள் விவசாயிகளும், பல்வேறு வேலைக்கு சென்ற இந்நாள் விவசாயிகளும் முயற்சித்தனர்.

சீரமைப்பின் போது Courtesy: Dinamalar
சீரமைப்பின் போது Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஊரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.100-க்கும் மேற்பட்டோருக்கு பாத்தியப்பட்ட இடத்தை சுற்றிலும் ரூ.8 லட்சம் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. சீமை கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு தற்போது 110 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 140 ஏக்கர் விவசாயம் செய்து காட்டுவோம் என்கின்றனர் இவ்வூர் விவசாயிகள்.

இப்போது.. Courtesy: Dinamalar
இப்போது.. Courtesy: Dinamalar

எஸ்.பி.தனுஷ்கோடி : மழை இல்லாததாலும்,வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையினாலும், வருமானம் சம்பாதிக்கும் நோக்கோடு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றோம். என்ன தான் சம்பாதித்தாலும் நம் நிலத்தில் விவசாயம் செய்து அடையும் திருப்திக்கு அளவே இல்லை. அதனால் தான்,இங்கு வந்த பிறகு, இந்த இடத்தை சீரமைத்து விவசாயம் செய்தால் என்ன என, இங்குள்ள விவசாயிகளும் சேர்ந்து யோசித்தோம் . ஊர் நிர்வாகமும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. தற்போது 70 ஏக்கரில் நெல் விவசாயம், 22 ஏக்கரில் உளுந்து பயிரிட்டுள்ளோம். <உளுந்து அறுவடை முடிந்ததும் நெல் விவசாயம் மேற்கொள்வோம்.

ஆர்.நாராயணன், இன்ஜினியர்: உடுமலை பேட்டை பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் செய்து வந்தேன். நம் தலைமுறையுடன் விவசாய நிலங்கள் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் நிலத்தை சமன் செய்து விவசாயம் செய்து வருகிறோம். ரூ.3 லட்சத்தில் வரத்துக் கால்வாயை சீர் செய்துள்ளோம். தற்போது ஒரு ஏக்கருக்கு சீரமைக்க ரூ.20 ஆயிரம், விவசாயத்துக்கு ரூ.20 ஆயிரம் ஆகும் என கணக்கிட்டுள்ளோம். இந்த ஆண்டு லாபம் கிடைக்காவிட்டாலும், வரும் ஆண்டுகளில் தொடர்ந்து விவசாயம் செய்து அதை மீட்டெடுக்க ஆர்வம் கொண்டுள்ளோம். பள்ளத்தூர் பெரிய கண்மாய், புது கண்மாய் இதன் பாசன பகுதிகள். கலெக்டர் வந்து பார்வையிட்டு புதிய போர்வெல் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இலவச மின்சார வசதியையும் அரசு உடனே செய்து கொடுத்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும்,என்றார்.

முள் வளர்ந்து கிடக்கிறது என நிலத்தை பார்த்து பெருமூச்சு விடும் நாம், அதை சீரமைத்து சிறிய அளவிலாவது காய்கறியாவது விளைவிக்க வேண்டும்  என்ற பள்ளத்தூர் விவசாயிகள் எண்ணம் பாராட்ட தக்கதே!

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *