சோலார் முறையில் விவசாயம்!

ஆற்றுப் பாசனத்தில் ஒருபோக சாகுபடியில் அப்பப்போ லாபம் கிடைச்சது. கிணற்று பாசனத்தில் சோலார் முறைக்கு மாறிய பின் இருபோக சாகுபடி பொய்க்காமல் நடக்கிறது என்கிறார் மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன்.

அவர் கூறியது: வாடிப்பட்டி தாலுகா தண்டலை கிராமத்தில் இரண்டரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்கிறேன். ஆற்றுப்பாசனத்தில் தண்ணீரை நம்பி சாகுபடி செய்யமுடியாது. எனவே ஜூலையில் ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வந்தேன். கிணற்றில் வற்றாமல் தண்ணீர் இருக்கிறது. ஆனால் டீசல் இன்ஜின் மூலம் இறைப்பதால் டீசல் செலவு அதிகமானது. நீர் பாய்ச்சுவதற்கு ஒரு ஏக்கருக்கு 4 மாத பயிருக்கு ஒன்றரை மூடை நெல் கூலியாக தர வேண்டியிருந்தது. எல்லாவிதத்திலும் செலவு அதிகமானது.

அப்போது தான் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சோலார் பம்ப் செட் அமைப்பது குறித்த தகவல் கிடைத்தது. முதலில் 20 பேர் தேர்வு செய்தனர். அதில் நானும் ஒருவன். சோலார் பம்ப்செட் அமைக்க ரூ.5 லட்சம் செலவானது. அதில் 80 சதவீதம் மானியமாக கிடைத்தது.

சோலார் பம்ப் செட் அமைக்கும் போதே கிணற்றை ஒட்டிய ஒரு ஏக்கருக்கு நேரடியாக கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்வது போல அமைத்து விட்டேன். அடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு பூமிக்கடியில் 3 அடி ஆழத்தில் பைப் அமைத்து இரண்டு இடங்களில் தண்ணீர் பாய்வது போல செய்து விட்டேன். ஜூன் மற்றும் நவம்பரில் இருபோக நெல் சாகுபடி செய்வதால் சில நேரங்களில் மோட்டாரை அணைக்காமல் விட்டாலும் தண்ணீர் பாய்வதால் நஷ்டமில்லை.

வெளியூர் சென்றாலும் தானாக தண்ணீர் பாய்ந்து விடும். இதற்கென தனி ஆள் நின்று கவனிக்க வேண்டியதில்லை. கிணற்றில் தண்ணீர் இருப்பதால் எவ்வளவு நேரம் தண்ணீர் பாய்ந்தாலும் மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. சின்ன சின்ன பழுது ஏற்பட்டால் நானே சரி செய்கிறேன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவும் குறைவாக தான் இருக்கும்.

பிப். முதல் வாரத்தில் இரண்டாம் போக அறுவடை முடிந்தபின் ஒரு ஏக்கரில் வெள்ளரி, ஒன்றரை ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்கிறேன். பயறு வகை பயிர்களை சாகுபடி செய்வதால் வேர் முடிச்சுகள் அதிகம் உருவாகி மண் பொலபொலப்பாகிறது. கோடை உழவு செய்யும் போது புழு, பூச்சிகள் வெளியே வருவதை பறவைகள் தின்பதால் நிலம் சுத்தமாகிறது.

குலமங்கலத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தில் தென்னை, நெல், மீன்வளர்ப்பு செய்கிறேன். ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதால் ஒன்றையொன்று சார்ந்து நிலம் வளமாகிறது என்றார்.
இவரிடம் பேச: 8973737379
.

 

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *