ஆண்டு முழுவதும் பலவகை பண்ணையம் மூலம் பயிர் செய்து லாபத்தை அடைந்து வருகிறார், காரைக்குடி அரியக்குடி விவசாயி ஆர்.கருணாநிதி.மொத்தமுள்ள ஐந்து ஏக்கரில், இரண்டு ஏக்கரில் தென்னை நடவு செய்துள்ளார்.இரண்டரை ஆண்டுக்கு முன்பு வைத்த கன்றுகள், இன்று காய்க்கும் தருவாயில் உள்ளன. தண்ணீரை சேமிக்க தென்னைகளுக்கு சொட்டு நீர் பாசன முறையில் பாய்ச்சி வருகிறார்.
பாத்தி மட்டும் கட்டி பயிர் செய்தால் போதும், தண்ணீரை தவிர எந்த வகை செலவையும் வைக்காது மரவள்ளி கிழங்கு என்கிறார் இவர்.

அவர் மேலும் கூறும்போது:
- கடந்த 40 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறோம். தற்போது ஒரு ஏக்கரில் கடலை போட்டுள்ளேன். ஒரு ஏக்கருக்கு 40 மூடை கடலை வரும். ஒரு மூடை ரூ.1,800 வரை விலை போகும். செலவு ரூ.40 ஆயிரம் போக, ஒரு பருவத்துக்கு ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
- கடந்த முறை 500 பப்பாளி கன்று வைத்தேன். மொத்தம் 24 டன் பப்பாளி விளைந்தது. ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையானது. இதில் அதிகம் செலவு கிடையாது. 24 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது 200 பப்பாளி கன்று வைத்துள்ளேன்.
- வைத்த 2வது மாதத்தில் பப்பாளி காய்க்க ஆரம்பித்து விடும். அதன் பிறகு 6 மாதம் காய்ப்பு இருக்கும். தென்னைக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளதால், 24 மணி நேரத்தில் பாய வேண்டிய தண்ணீர், 12 மணி நேரத்தில் பாய்ந்து விடும். இதனால் தண்ணீர் சிக்கனம் உள்ளது.
- இவை மட்டுமன்றி, வெண்டை, சோளம், பீர்க்கு, புடலை, அவரை என பல்வேறு வகையான காய்கறி பயிரிட்டு வருகிறேன்.
- காய்கறிகளை பொறுத்தவரை, அன்றன்று செலவுக்கு உதவும். பலா, மா இந்த முறை நன்றாக காய்த்துள்ளது. ஒரு பலாவை அறுத்து சுளையாக விற்றால் ரூ.200 கிடைக்கும். இதில் 400 சுளை வரை இருக்கும்.
- எந்த விவசாயத்தையும் முழு முயற்சியுடன் செய்தால் வெற்றி பெறலாம். நிலம் இல்லை, அதனால் விவசாயம் இல்லை என்பதை விட, இருக்கின்ற நிலத்தில், என்ன ரகம் பயிரிட்டால் வெற்றி பெறலாம், என்பதை தீர்மானித்து பயிரிட்டால், விவசாயத்தால் யாருக்கும் நஷ்டம் கிடையாது, என்றார்.
இவரை தொடர்பு கொள்ள 09976367375.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்