புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி
2011-12 விவசாய ஆண்டு 2010-11ஐப் போலவே உணவு உற்பத்தியில் நல்ல சாதனை என்று வேளாண்மைச் செயலர் பி.கே. பாசு அனைத்திந்திய உணவு உற்பத்திப் புள்ளிவிவர மதிப்பீடுகளை 3-2-2012 அன்று வெளியிட்டுப் பேசியுள்ளார்.
ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 2010-11-ல் 24.48 கோடி டன்கள் என்ற நிலை 2011-12-ல் 25.04 கோடி டன்களாக உயர்ந்துள்ளது.ஒட்டுமொத்த உணவு உற்பத்தி வளர்ச்சி 56 லட்சம் டன்கள் மட்டுமே. அரிசி உற்பத்தி கடந்த ஆண்டைவிட, 60 லட்சம் டன் அதிகம் விளைந்து 10.8 கோடி டன்களாக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
கோதுமையும் 64 லட்சம் டன் அதிகம் விளைந்து 8.83 கோடி டன்கள் என்ற நிலையைத் தொட்டுள்ளது.அரிசியும் கோதுமையும் சேர்ந்து 1.24 கோடி டன்கள் அதிகம் விளைந்தாலும் மொத்த உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 56 லட்சம் டன் மட்டுமே.
இது ஏன்?
பருப்பு உற்பத்தியில் 1.82 கோடி டன் என்ற நிலை இந்த ஆண்டு 1.72 கோடி டன்களே விளைந்து சுமார் 10 லட்சம் டன்கள் குறைந்துவிட்டது.
இதர தானியங்களில் மக்காச்சோள உற்பத்தியைத் தவிர வெள்ளைச்சோளம், கம்பு, கேழ்வரகு, சிறு தானியங்களான வரகு, சாமை, தினை போன்றவை சுமார் 50 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி குறைந்துவிட்டது.
நிலக்கடலை, எள், கடுகு போன்ற எண்ணெய் வித்துகளின் உற்பத்தி 3.24 கோடி டன்னிலிருந்து 3.03 கோடி டன்னாகக் குறைந்துவிட்டது.
கடந்த இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து வருணபகவான் அருளிய கொடையை வைத்துச் சேற்றுநில உழவுப் பயிர்களான நெல்லையும் கோதுமையையும் வளர்க்க முடிந்த அளவுக்கு மேட்டுநிலப் பயிர்களான பருப்பு வகைகளையும், புஞ்சைத் தானியங்களையும், எண்ணெய் வித்துப் பயிர்களையும் வளர்க்க முடியாமல் போனது ஏன்?
பொது விநியோகத் தேவையை முன்னிட்டு உணவு தானியங்களில் நெல், கோதுமை உற்பத்திக்கு வழங்கப்படும் கவனம் பருப்புவகைப் பயிர்களுக்கோ, எண்ணெய் வித்துப் பயிர்களுக்கோ, புஞ்சை தானியப் பயிர்களுக்கோ வழங்கப்படாத காரணத்தால் ஏழை மக்களின் புரதச்சத்துத் தேவையும் புறக்கணிப்புக்குள்ளாகிறது.
அதேபோல் தாது உப்புகள் நிறைந்த சிறுதானியங்கள் அழிந்து வருகின்றன.
புஞ்சைப் பயிரில் பெருந்தானியம் என்று கூறப்படும் சோளம், கம்பு, கேழ்வரகு உற்பத்தி குறைவதால் நஷ்டம் மனிதனுக்கு மட்டுமல்ல. கறவைப் பசுக்களின் தீவனத் தட்டுப்பாட்டுக்கும் காரணமாகிறது.
எண்ணெய் வித்துப் பயிர் விளைச்சல் குறைவதால் மனிதனுக்குப் புரதத் தேவையுடன் கொழுப்புப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
கால்நடை (கறவைப்பசுக்கள்)களுக்கும் புரதம் வழங்கும் பிண்ணாக்குப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு கூடுகிறது.
பிண்ணாக்கு ஏற்றுமதியாவது ஒருபக்கம். கறவைப் பசுக்கள் நோயின்றி வாழ்ந்து பால் உற்பத்தி பெருக மற்ற தீவனங்களுடன் குறைந்தபட்சம் 1 பசுவுக்கு 400 கிராம் பிண்ணாக்கு வேண்டும். அப்போதுதான் 5 லிட்டர் பாலாவது கறக்கலாம். குறிப்பாக, நிலக்கடலைப் பிண்ணாக்கு மட்டுமே கறவைப் பசுக்களுக்கு வழங்கப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமல்ல.
கறவைப் பசுக்களின் நலனை எண்ணி நிலக்கடலை உற்பத்தியை உயர்த்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால், அந்தக் கடமை புறந்தள்ளப்படுவதால் நிலக்கடலை விவசாயிகளும் இன்று விலையில்லாத காரணத்தால் நிலக்கடலை சாகுபடி செய்வதையே நிறுத்தி வருகின்றனர்.
நல்ல மழை இருந்தும் நாடு முழுவதும் நிலக்கடலை உற்பத்தி குறையும் காரணம் எதுவெனில் புரதச்சத்து மிகுந்த நிலக்கடலை சாகுபடி செய்தவன் தனது புரதத்தை இழந்து பருத்தி விவசாயிகளைப்போல் தற்கொலை செய்துகொள்ளும் அளவில் தள்ளப்பட்டு விட்டான்.
இப்படிப் புரதம் இழந்தவன் நிலக்கடலை விவசாயிகள் மட்டுமல்ல. துவரை போட்ட புரத விவசாயியும் செத்துக் கொண்டிருக்கிறான். உளுந்து, பயறு போட்டவனும் மடிந்து வருகிறான்.
நெல் உற்பத்தி உயர்ந்துள்ளது. கோதுமை உற்பத்தி உயர்ந்துள்ளது என்று குதிக்கும் கிரிக்கெட் விவசாய அமைச்சர், குறைந்துபோன புரதப்பயிர் உற்பத்திக்குப் பதில் சொல்லாவிட்டால், புரதச்சத்து இல்லாமல் நாள்தோறும் இறந்துவரும் பல்லாயிரக்கணக்கான சிறார்களின் உயிர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
தொடரும்..
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்