வறுமையை ஒழிக்கும் வழி இதுதானா?

நம் நாட்டின் பொருளாதார மேதை முதல்வரும், திட்ட கமிஷன் முனைவர் அவர்களும் எப்படி நம் நாட்டில் ஏழ்மை குறைந்து வருகிறது
என்று பொய் கணக்கு சொல்கிறார்கள் என்பதை பற்றிய தினமணியில் அற்புதமான தலையங்கம்.

வறுமையை ஒழிக்கும் வழி இதுதானா?

இந்தியப் பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்டு கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்றால், கூட்டணி அரசாக இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகள் அந்தச் செயலையே மேலும் கடுமையாக்கி விடுகிறது. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் எட்ட வேண்டியிருக்கிறது – இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில்கூறியுள்ளார்.

2008 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் சராசரியாக 9 விழுக்காடு இருந்தது. 2008-09 இல் அது 6.7 விழுக்காடாக குறைந்துவிட்டது. நிகழ் நிதியாண்டில் அது 6.9 விழுக்காடாக இருக்கிறது. அதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் அது 8.4 விழுக்காடாக இருந்தது. அடுத்த நிதியாண்டில் இது 7.6 விழுக்காடாக உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

இந்தப் புள்ளிவிவரங்கள் பொருளாதார மேதையின் ஆற்றலை வெளிப்படுத்தலாம். பொருளாதார ஏற்றத்தாழ்வால் சரிந்துவரும் தேசத்தைத் தூக்கி நிறுத்தி விடாது.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி விடாது.

இந்திய அரசமைப்புச் சட்டம், குடிமக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அதுபோலவே தங்கள் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை, உறையுள் கிடைத்திடச் செய்ய வேண்டியது அரசின் கடமையாகிறது.

அந்தக் கடமைகளை மறந்துவிட்டு அல்லது புறக்கணித்துவிட்டு நாட்டு மக்கள் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

அப்படி என்ன நடந்துவிட்டது என்று கேட்கிறீர்களா? பிரதமர் மன்மோகன் சிங் தலைவராகவும் மான்டேக் சிங் அலுவாலியாவைத் துணைத் தலைவராகவும் கொண்ட மத்திய திட்டக்குழு மார்ச் 19 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை 7.3 விழுக்காடு அளவுக்குக் குறைந்துவிட்டதாக ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை 2010-11 ஆம் ஆண்டில் 29.8 விழுக்காடாக உள்ளது. 2004-05 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 37.2 விழுக்காடாக இருந்தது.

இந்த மாபெரும் முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது?இந்த மந்திரக்கோலின் மகிமையைக் கேட்டால் சிரிப்புதான் வரும்.

நகர்ப்புறங்களில் தினசரி கூலி ரூ.28.65க்கு மேல் ஊதியம் பெறுபவர்களும் கிராமப்பகுதிகளில் ரூ.22.42க்கு மேல் ஊதியம் பெறுபவர்களும் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். இவர்கள் ஏழையர் பட்டியலில் வரமாட்டார்கள்.இதன்படி நகர்ப்பகுதிகளில் மாத ஊதியம் ரூ.859.60 பெறுவோரும் கிராமப்பகுதிகளில் மாதம் ரூ.672.80 சம்பாதிப்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2011 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.26 சம்பாதிப்பவர்களும் நகர்ப்புறத்தில் ரூ.32 சம்பாதிப்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று திட்டக்குழு கூறியிருந்தது. இந்தத் திட்டக்குழுவின் அறிவிப்பைக் கேட்டு அன்று நீதிமன்றமே சிரித்தது.

ஒரு வேளை உணவுக்கே போதாத இந்தத் தொகையைக் கொண்டு ஒரு நாளை எப்படி ஓட்டுவது? உடை, உறைவிடம், மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்வி, நல்லது கெட்டது – இவைகளையெல்லாம் சமாளிக்கப் பணம் வேண்டாமா? திட்டக்குழுவின் அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்து போனார்கள்.

இப்போது இந்தத் தொகையையும் குறைத்துவிட்டது. என்ன காரணம் என்றும் கூறவில்லை.

புள்ளிவிவரங்களைக் கொண்டு ஏழ்மையை விரட்டுகிறார்கள். பசிக்கிற வயிற்றுக்குத் தேவை உணவே தவிர, புள்ளிவிவரங்கள் அல்ல என்பதைத் திட்டக்குழுவுக்குப் புரிய வைப்பது யார்?

“ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது இந்தப் பொருளாதார மேதைகளுக்குத் தெரியாதா?

உணவுப் பொருள் மீதான பணவீக்கம் குறையவில்லை. உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் வறுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்ற செய்திகள் வராத நாள் இல்லை. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு திட்டக்குழு செயல்படுவதுதான் வேடிக்கை.

நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுபற்றி தில்லியில் நடைபெற்ற இந்தியத் தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். “”நாட்டின் நிதி நிலைமை கவலையளிக்கும் விதமாகவே இருக்கிறது. முக்கியமான சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நிதிப் பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க அடுத்த சில மாதங்களில் அரசு சில கடினமான முடிவுகளை எடுக்க இருக்கிறது.நிதிப் பற்றாக்குறையை நம்மால் தீர்க்க முடியுமா? என்பது இப்போது கேள்வியல்ல. இது ஒட்டுமொத்தமாக தேச நலன் சார்ந்த விஷயம். இதில் நமது ஒவ்வொருவரது பங்களிப்பும் இருக்கிறது…” என்று அவர் கூறியுள்ளார்.

இனி வரப்போகிற நிதி நெருக்கடிகளுக்கு நிதியமைச்சர் செய்யும் முன் அறிவிப்பு இது.நாள்தோறும் விலைவாசிகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன; பெருகிவரும் ஊழலையும், லஞ்சத்தையும் தடுக்க முடியவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் சொந்த நாட்டுக்குக் கொண்டுவர எண்ணம் இல்லை; வங்கிகளில் வாங்கப்பட்ட “வாராக் கடன்கள்’ வசூலிப்பதற்கு முயற்சிகள் இல்லை. இதற்குப் பின்னால் உள்ள மர்மங்கள் பற்றி வெளியிடுவதும் இல்லை. அவை ரகசியங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள பெரும் பணம் படைத்தவர்களின் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதில், “இந்தியாவின் பணக்காரர்களைப் பொருத்தவரை இந்த ஆண்டு கொந்தளிப்பான ஆண்டாகும்.

இந்தியாவின் பொருளாதாரம் 8 விழுக்காடாக உள்ளது. பல்வேறு ஊழல் புகார்கள், உயர்ந்து வரும் பணவீக்கம் உள்ள நிலையிலும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், “இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது’ என்று ஐ.நா.வின் மனிதவள மேம்பாட்டுத் திட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த முரண்பட்ட நிலையைப் பற்றி அரசாங்கமும், திட்டக்குழுவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இதை மேலும் மேலும் வளர்த்தெடுக்கவும், பிரச்னையை மூடி மறைக்கவுமே திட்டமிடப்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூ. 28.65-க்கு மேல் சம்பாதிப்பவரும், கிராமங்களில் ரூ. 22.42-க்கு மேல் சம்பாதிப்பவரும் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டவர்கள் என்று டெண்டுல்கர் தலைமையிலான குழு அளித்த அறிக்கையை மத்திய திட்டக்குழு ஏற்றுக் கொண்டிருப்பதற்காக மான்டேக் சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாகச் சாடினர்; அவரை அந்தப் பதவியிலிருந்தே அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இதைப் பற்றி திட்டக்குழுத் துணைத்தலைவர், “”28 ரூபாய், 22 ரூபாய் என்ற கணக்கு வேண்டுமானால் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது. பட்டினிச் சாவுகள் இல்லை என்பது உண்மையே. இதை வேறுவிதமாகக் கணக்கிட்டாலும் தெரிந்து கொள்ளலாம்” என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

வறுமைக் கோட்டை நிர்ணயிக்கத்தான் இந்த அளவே தவிர, இதை அடிப்படையாக வைத்து எந்தத் திட்டமும் தீட்டப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார். வேறு எதற்கு இந்தக் கணக்கு? இந்தியாவில் ஏழ்மையை ஒழித்துவிட்டோம் என்று உலகத்தை நம்ப வைப்பதற்காகவா?இந்த அளவுகோல் மூலம் 2004-05-ம் ஆண்டைவிட 2009-10-ம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை 7.3 விழுக்காடு குறைந்துவிட்டது என்று மத்திய அரசும் கூறுகிறது. அதாவது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 40.72 கோடியிலிருந்து 34.47 கோடியாகக் குறைந்துவிட்டது என்று நம்மை நம்பச் செய்கிறது.

ஏற்கெனவே இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 42 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து இன்றி வாடுவதாகவும், இது தேசிய அவமானம் என்றும் கூறிய பிரதமருக்கு இது தெரியாதா? தெரிவிக்கப்பட இல்லையா? எப்படியும் மக்களை ஏமாற்றலாம் என்பதற்கு இப்படியும் ஒரு வழி உருவாக்கப்பட்டிருக்கிறது.

“”இந்த மோசடியான வறுமைக்கோடு குறித்த அளவீடு மிகவும் தவறானது. எதார்த்தத்தைக் கணக்கில் கொள்ளாதது. உடனடியாக இந்த அர்த்தமற்ற அளவீடு மாற்றப்பட வேண்டும்” என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

இடைவிடாத பிரசாரத்தாலும் மக்களை மயக்கிவிடலாம் என்பது நடைமுறையாகிவிட்டது;

ஏழை எளிய பாமர மக்கள் நிறைந்த ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் சொல்வதெல்லாம் வேதம்; செய்வதெல்லாம் வெற்றியே!மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு ஏழ்மையை ஒழித்து, வளமான வாழ்வைத் தருவார்கள் என்று வாக்களித்த மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை; ஆனால், ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதில் ஏழைகளையே ஒழித்துக் கட்டுவதற்குத் திட்டம் போடலாமா? வறுமையை ஒழிக்கும் வழி இதுதானா?

பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *