விவசாய வேலையை எளிதாக்கும் புதிய எந்திரங்கள்

விவசாய வேலைகளை எளிமைப்படுத்தவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்த பொறியியல் கல்லூரி, திருச்சியிலிருந்து 37கி.மீ தொலைவில் உள்ள குமுளூரில் இயங்கி வருகிறது.

பண்ணை எந்திரம் மற்றும் உயிர் சக்தி துறையின் இணைப் பேராசிரியர் ச.கணபதி  இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றி பேசுகையில் “விவசாயிகளின் வேலையைக் குறைக்க புதிய கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறோம். தமிழ்நாட்டுக்குத் தக்கப்படிதான் நாங்கள் கருவிகளை வடிவமைத்து வருகிறோம்”  என்கிறார்.

இதோ இந்த கல்லூரியில் வடிவமைக்க பட்ட இயந்திரங்கள்:

நேரடி நெல் விதைப்புக் கருவி:

  • இந்தக் கருவியின் மூலம் நெல் விதைகள் நேரடியாக விதைத்து விடலாம்.
  • இரண்டு உருளைகள் கொண்ட இக்கருவியில் துளைகள் வழியாக நெல் விதைகள் சீராக வெளிவந்து நிலத்தில் விழும்.
  • இதைப் பயன்படுத்துவதன் மூலம் வேலை யாட்களின் தேவை 30% குறைகிறது.
  • இக்கருவியைப் பயன்படுத்துவதால் மாசூலில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
  • ஆட்களைக் கொண்டு நடவு செய்யும் முறைக்கு இணையாக மகசூல் கிடைக்கிறது.
  • ஒரே நாளில் ஹெக்டேர் நிலத்தில் விதைக்கலாம்.
  • இக்கருவியின் விலை ரூ.4,000

நாற்று நடும் கருவி:

  • இந்தக் கருவியின் மூலம் எட்டு வரிசைகளாக நடவு செய்யலாம்.
  • வழக்கமான பாணியில் அல்லாமல், பாய் முறையில் நாற்றுகள் தயாரிக்க வேண்டும் (பாலிதீன் பேப்பரின் மீது மண்கொட்டி, அதன் மீது விதைகளை தூவவேண்டும். வளர்ந்த பிறகு கேக், கேக்காக வெட்டி இயந்திரத்தில் பொருத்தவேண்டும்).
  • இக்கருவியை பயன்படுத்துவதால் ஆள் தேவை 75% குறைகிறது.
  • செலவும் 50% குறைகிறது.
  • ஒரு நாளைக்கு 1.5 ஹெக்டேரில் நடலாம்.
  • இக்கருவியின் விரை ரூ.1,50,000.

கூம்பு உருகைக் களையெடுக்கும் கருவி:

  • நாற்று வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் முன்னும் பின்னும் இக்கருவியை இழுத்து இயக்குவதன் மூலம் களைகள் சேற்றுக்குள் திணிக்கப்படும்.
  • களைகள் மட்கி பயிருக்கு உரமாக்கிவிடும்.
  • கோனோ வீடர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இக்கருவியின் விலை ரூ.900
  • ஒரு நாளைக்கு அரை ஹெக்டேரில் களையெடுக்கலாம்.

சிறுமரங்களின் வேர் அகற்றும் கருவி:

  • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கருவேலம், காட்டாமணக்கு, மஞ்சனத்தி போன்ற மரங்கள், களைகளாக வளர்ந்து நிலச் சீரமைப்புப் பணிகளுக்குச் சவாலாக இருந்து வருகின்றன.
  • இம்மரங்களின் கட்டைகளை வெட்டி அடுப்பெரிக்க கொண்டு செல்லும் விவசாயிககள் இவற்றின் வேர்களை அகற்ற அதிக ஆற்றலை வீணடிக்க வேண்டியிருக்கிறது.
  • அதிக ஆட்களைக் கொண்டு அதிக செலவில் வேர் மூடுகளை அகற்றி வருகின்றனர். இதனால் நேரமும் அதிகமாக விரயமாகிறது.
  • இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக டிராக்டரால் இயக்கப்படும் வேர் அகற்றும் கருவி வடிவமைக்கப்பட்டது.
  • இந்தக் கருவி ‘V’ வடிவம் கொண்ட எஃகு இரும்பிலான கூரிய ஈட்டி போன்ற தகடு கொண்டுள்ளது. இதைத்தவிர அடிமண் தளர்த்தி என்றொரு கருவியும் உண்டு. இந்த இரண்டையும் டிராக்டரில் பொருத்தி பயன்படுத்த வேண்டும்.
  • அடிமண் தளர்ததி மூலம் மண்ணுக்குள் இருந்து வேர் மூட்டினை எளிதாக பெயர்த்து எடுத்துவிட முடியும்.
  • வேர் முடிச்சுகள் இல்லாத தனி ஆணிவேர் கொண்ட மஞ்சனத்தி போன்ற மரங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
  • 2 முதல் 3 நிமிடங்களில் ஒரு வேர் மூடு அகற்றப்பட்டுவிடும்; 5 முதல் 25 கிலோ எடையுள்ள வேர் மூடுகளை இக்கருவியின் மூலம் அகற்றலாம்.
  • இந்தத் தகட்டின் விலை ரூ.500 மொத்தமாக அடிமண் தளர்த்தியுடன் சேர்த்து ரூ.10,500.

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் இயக்குவது குறித்த பயிற்சியும் இங்கு கொடுக்கப்படுகிறது.

தொடர்புக்கு:
முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி,
குழுளூர்,
திருச்சி.
Pincode: 621712
தொலைபேசி: 04312541218.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *