கொஞ்சம் மூலிகைகள்,கொஞ்சம் காய்கறிகள் – நிறைவான ஆரோக்கியம்!

சென்னை போன்ற பெருநகரங்களில், இயற்கைக் காய்கறிகளுக்காக மாடித்தோட்டம் அமைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. முகநூல் போன்ற சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற ஸ்மார்ட் போன் செயலிகள் ஆகியவற்றில் மாடித்தோட்டம் குறித்தும் பல குழுக்கள் இயங்கி வருகின்றன.

அப்படிப்பட்ட குழுக்களில் ஒன்றுதான், ‘ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன்’. பிரபலமாக இருக்கும் இக்குழுவில் தீவிரமாக இயங்கிவருபவர், சென்னையை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த ரம்யா. லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு விடுமுறை நாளில் ரம்யாவைச் சந்தித்தோம்.

“நான் சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை செஞ்சுட்டுருந்தேன். அந்தச் சமயத்துல குழந்தை பிறக்கவும், வேலையை விட்டுட்டேன். வீட்டுல குழந்தையைப் பார்த்துக்குறது மட்டும்தான் வேலைங்கிறதால, எனக்கு ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைச்சது. அப்போ என் கணவர், மாடித்தோட்டம் போடலாமானு கேட்டார். ‘வீட்டுல சும்மாதான இருக்கோம்’னு உடனே சம்மதிச்சுட்டேன்.

2015-ம் வருஷம் அஞ்சு தொட்டிகளை வாங்கிட்டு வந்து கத்திரி, தக்காளி, வெண்டைனு விதைச்சேன். ஆனா, அதுல எதுவுமே சரியா வரலை. அதுக்கப்புறம்தான் ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன் பத்திக் கேள்விப்பட்டு அவங்க நடத்துன ஒரு பயிற்சியில கலந்துக்கிட்டேன். அங்க பலபேரோட தொடர்பு கிடைச்சதோடு நிறைய நாட்டு ரக விதைகளும் கிடைச்சது. அவங்களோட குழுவுல இணைஞ்சு எனக்கு தோன்றுகிற சந்தேகங்களைக் கேட்க ஆரம்பிச்சேன். அந்தக்குழுவிலேயே எனக்கான விளக்கங்கள் கிடைச்சது. இப்போ நானே நிறைய பேருக்கு சொல்லிக் கொடுக்குற அளவுக்குக் கத்துக்கிட்டேன்” என்ற ரம்யா, மாடித்தோட்டத்துக்கு அழைத்துச் சென்று செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“திப்பிலி, தூதுவளை, நொச்சி, பிரண்டை, தக்காளி, வெண்டை, மிளகாய், மாதுளை, சப்போட்டானு காய்கறிகளும் மூலிகைகளும் இருக்கு. இதோடு கீரைகள், கிழங்கு வகைகள், மரங்கள், மலர்கள்னு 200 செடிகளுக்கு மேல இருக்கு. தினமும் ஏதாவது ஒரு காய் கிடைச்சுட்டே இருக்கு.

கடையில காசு கொடுத்து தொட்டிகள், பைகள் வாங்கணும்னு ஆசைப்படமாட்டேன். பெயின்ட் வாளி, பிளாஸ்டிக் வாளினு பயன்படுத்திட்டு வீணாகத் தூக்கிப்போடுற பொருள்களைச் சேகரிச்சு அதுலதான் செடிகளை வளர்க்குறேன். மொட்டை மாடி தரையில பெயின்ட் அடிச்சு விட்டுட்டதால, தண்ணீர் இறங்கி பில்டிங் வீக்காகிடுங்கிற கவலை கிடையாது.

தொட்டிகள்ல தேங்காய் நார், மண்புழு உரம், செம்மண் கலந்து போட்டு அதுல இலைதழைகள், கரும்புச்சக்கை, காய்கறிக் கழிவுகள்னு போட்டு மட்க விடுவேன். அப்புறம் நவதானியங்களை விதைச்சு நாப்பது நாள் வளத்து தானியச்செடிகளைப் பிடுங்கிப் போட்டு மட்க விடுவேன். இப்படிச் செய்றதால மண் நல்ல வளமாகிடும்.

அதுக்கப்புறம்தான் தேவையான காய்கறி விதையையோ, நாத்தையோ நடுவேன். நாட்டுக் காய்கறிகளைச் சாகுபடி செய்யப் பட்டம் முக்கியம். தக்காளி, மிளகாய் ரெண்டையும் நாத்து விட்டுத்தான் நடவு செய்வேன். மத்த காய்கறி விதைகளை நேரடியா விதைச்சுடுவேன். செடிகள்ல பூச்சிகள் வந்தா மட்டும்தான் இஞ்சி-பூண்டுக் கரைசல் அல்லது வேப்பெண்ணெய் தெளிப்பேன். தினமும் செடிகளைப் பராமரிக்கிறதுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கிடுவேன்” என்ற ரம்யா நிறைவாக,

“போன வருஷம் எங்க ஃபவுண்டேஷன் சார்பா நடந்த விழாவுல மாடித்தோட்டத்துக்குச் சப்போர்ட்டா இருக்குற என் கணவருக்கும், குழந்தைக்கும் விருது கொடுத்தாங்க. அது மாடித்தோட்டத்துக்காக எங்களுக்கு கிடைச்ச அங்கீகாரம். எங்களைப்போல வீட்டுல தோட்டம் போட்டு மூலிகைகளையும் காய்கறிச் செடிகளையும் வளர்த்தா ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு ரம்யா, செல்போன்: 7448911116

நன்றி:பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *