நல்ல பலன் தரும் மாடித்தோட்டம்

தமிழகத்தில் குடும்பத்திற்கு தேவையான அன்றாட காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யவும், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்கவும், ‘டி.வி.’ முன் அமர்ந்து பொன்னான நேரத்தை வீணடிக்கும் சில குடும்ப தலைவிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், அரசு கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் ‘மாடித்தோட்டம்‘.

522 ரூபாய் மதிப்புள்ள மாடித்தோட்டம் ‘கிட்’ ஒன்றுக்கு 200 ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது. கிட் ஒன்றில் தென்னை நார் கழிவுடன் கூடிய வளர் ஊடகம் அடங்கிய ஆறு பைகள், அேஸாஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம், சூடோமோனாஸ் 100 கிராம், டி.விரிடி 100 கிராம், நீரில் கரையும் உரம் 18:18:18 ஒரு கிலோ, அசார்டிராக்ஷன் 100 மில்லி, திட்ட விளக்க குறிப்பு, பத்து வகையான காய்கறி விதைகள் ஆகியன இடம் பெற்றிருக்கும்.

நீர் மேலாண்மை

செடிகள் வளர்ப்பதற்கு ஏற்றவாறு உள்ள பைகளில் செடிகளை வளர்க்கும் போது மிகவும் கவனம் தேவை. தேங்காய் நார் கழிவு ஊடகம், செடிகள், பருவநிலை, பைகளின் அளவு, செடியின் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு நீரை பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்

நீரில் எளிதில் கரையக்கூடிய செயற்கை உரங்களை ஒரு தேக்கரண்டி வீதம் இளம் பருவத்திலும், இரண்டு தேக்கரண்டி வீதம் பூக்கள் பூக்கும் தருணத்திலும், பழங்கள் பெருக்கம் அடையும் நேரத்தில் தேங்காய் நார் கழிவு கலவை மீது இட வேண்டும். பின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

குச்சி ஊன்றுதல்

காற்றின் வேகம் தாங்காமல் மிகவும் உயரமாக வளரக்கூடிய செடிகள் முறிந்து விடும். அதனால் சிறிய குச்சிகளை செடிக்கு அருகில் ஊன்றி கயிற்றால் கட்ட வேண்டும்.

களை அகற்றம்

களைகள் தென்படும் போது அவற்றை உடனடியாக எடுக்க வேண்டும். களைகள், காய்கறி செடிகளுடன் சத்துக்கள் மற்றும் இடங்களுக்கு போட்டியிட்டு செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும்.

பூச்சி அழிப்பு

சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவணி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவை செடிகளின் ஆரம்ப வளர்ச்சியை அதிகமாக பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கரைசல் கொண்டு செடிகளின் மீது வாரத்திற்கு ஒரு முறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நோய்கள்

நோய் வராமல் தடுக்க டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிர் கொல்லிகளை பயிர் செய்வதற்கான கலவையை தயார் செய்யும்போது சேர்த்து கலக்க வேண்டும். ஒரு பைக்கு 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு என்ற விகிதத்திலும் மற்றும் 10 மில்லி மாட்டு கோமியத்தை செடிகளின் மீது தெளித்து இயற்கை முறையிலும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

உண்பதற்கு ஏற்றவாறு உள்ள நிலையை அடையும் போது காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

நேர்த்தி முறை

அறுவடை முடிந்த பின் செடிகளை வளர்ப்பதற்காக பயன்படுத்திய பைகளில் உள்ள ஊடகத்தை ஒரு இடத்தில் ஒன்று சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாதவாறு உடைத்த பிறகு நன்கு கிளற வேண்டும். இத்துடன் 20 கிலோ தென்னை நார் கழிவு மற்றும் 10 கிலோ மக்கிய தொழு உரம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிய பின் பாலிதீன் பைகளில் நிரப்பி மீண்டும் பயன்படுத்தலாம். மானிய விலையில் மாடித்தோட்டம் அமைக்க வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

ஜி.பூபதி
துணை இயக்குனர், தோட்டக்கலை, மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *