வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
நகரங்களில் வாழும் மக்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்க முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைத்து காய், கனி, மருந்து செடிகள், பூச்செடிகள், அலங்கார தாவரங்களை வளர்க்க வசதியாக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, “நீங்களே செய்து பாருங்கள்” (வீட்டு மேல்தளத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல்) என்ற பெயரில் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ் வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பயனாளியும் 5 தளைகள் (கிட்ஸ்) வரை வாங்கலாம். ஒரு “கிட்” விலை ரூ.2,650. இதில், சுமார் 50 சதவீதம் (ரூ.1,325) மானியம். இந்த “கிட்”டில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, செடி அவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி விதைகள், இயற்கை உரம், மண் அள்ளும் கருவி, பாலிதின் விரிப்புகள் உள்ளிட்ட 15 வகையான இடுபொருட்கள் உள்ளன.
இந்த இடுபொருட்களை பெறுவதற்கு http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
வீட்டு மாடியில் 50 சதுர அடி இடம் இருந்தால், காய்கறித் தோட்டம் அமைத்து, அந்த வீட்டுக்குத் தேவையான பசுமையான காய்கறி, பழங்களைப் பெறலாம்.
இத்திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை ஆணையர் சத்யபிரதா சாகு கூறுகையில், “வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் சோதனை முயற்சியாக சென்னை மாநகர், கோவை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மாடித் தோட்டம் அமைக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மாடித் தோட்ட இடுபொருட்கள் கொண்ட “கிட்” வழங்கிவிட்டோம். மாடித்தோட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னையில் அண்ணாநகர், மாதவரம், திருவான்மியூரில் உள்ள தோட்டக்கலைத் துறை டெப்போவில் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை “கிட்” வழங்கப்படுகிறது. ஒருபகுதியில் 20 முதல் 30 பேர் வரை “கிட்” கேட்டு விண்ணப்பித்தால், அவர்களுக்கு வேனில் எடுத்துச் சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
தகவலுக்கு நன்றி
நன்றி வாழ்த்துக்கள்