மாடித்தோட்டம் அமைக்கப்போறீங்களா… நீங்க செய்யக்கூடாத விஷயங்கள்!

முதன்முதலா மாடித்தோட்டம் அமைக்கப்போறீங்களா... நீங்க செய்யக்கூடாத விஷயங்கள் இவைதாம்!

அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொண்டு மாடித்தோட்டம் அமைத்தால் வெற்றிகரமாக காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

வீடுகளில் மாடித்தோட்டம் இப்போது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. முதன்முதலாக தோட்டம் அமைக்கும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றாமல் போனால், அதனால் தவறு நேர்ந்து செடிகள் வளராமல் போய்விடும். இதனால் மனம் விரக்தியடைந்து பலரும் இதைக் கைவிட்டுவிடுவர். இதுவே முக்கியமான அடிப்படைகளைத் தெரிந்துகொண்டு பின்னர் மாடித்தோட்டம் ஆரம்பித்தால் கவலையே இருக்காது. அப்படி மாடித்தோட்டம் அமைக்கும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள் இதோ.

கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக செடிகள் வளராமல் போகலாம். மாடித்தோட்டத்தை ஜூன் மாதத்துக்கு மேல் அமைக்கலாம். அல்லது கோடைக்காலத்தில் நிழல் வலைக்குடில் அமைத்தும் மாடித்தோட்டம் அமைக்கலாம்.

காய்கறித் தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியைத் தேர்வு செய்யக் கூடாது. நிழல் வலைக்குடில் அமைத்தாலும் அவற்றில் காய்கறிகளை வைப்பதைத் தவிர்க்கலாம். மற்ற பயிர்களை விட காய்கறி பயிர்களுக்கு அதிக சூரிய ஒளி தேவை.

மாடித்தோட்டம்

பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்கக் கூடாது. மாடித் தோட்ட பையில் உள்ள துளைகள் வழையாகத் தண்ணீர் வெளியேறும்போது தளம் ஈரமாகிப் பாதிக்கப்படலாம். அதனால் வெறும் பைகளை மட்டும் வைத்து மாடித்தோட்டம் அமைக்கும்போது, பைகளை இடம் மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.

பைகளைத் தயார் செய்த உடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக் கூடாது. பைகளைத் தயார் செய்த 7 முதல் 10 நாள்களுக்குப் பின்னர்தான் பைகளில் நுண்ணுயிர்கள் வளர ஆரம்பிக்கும். உடனே நடவு செய்தால் பயிர்கள் வளர தாமதமாகும். அல்லது வளராமல் போகலாம்.

பைகளை நெருக்கி வைக்கக் கூடாது. பைகளுக்கு இடையே இடைவெளி மிக முக்கியமானது. அதிகமான பைகளை நெருக்கி வைக்கும்போது ஒரு செடிக்கு வரும் நோய் பக்கத்து செடிக்கும் பரவும் வாய்ப்பு அதிகம். அதனால் செடிகள் அதிகமாகப் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமானது.

ரசாயன உரங்களுடன் உயிர் உரங்களைக் கலந்து இடக் கூடாது. ஒருபோதும் இரண்டு உரங்களையும் கலந்து இடவே கூடாது. ரசாயன உரங்களின் தன்மை வேறு, உயிர் உரங்களின் தன்மை வேறு. இரண்டு உரங்களும் வேதி வினை புரியும்போது பயிர் பட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

பைகள்

ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சணக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. மாடித்தோட்டம் அமைப்பதே செலவைக் குறைத்து இயற்கையான காய்கறிகளையும், கீரைகள் மற்றும் பழங்களை உண்பதற்காகத்தான். அதனால் வேப்ப எண்ணெய், இஞ்சி பூண்டு கரைசல் என இயற்கை கரைசல்களையும், மண்புழு உரம், மாட்டு எரு, அசோஸ்பைரில்லம் என்ற உயிர் உரங்களையும் பயன்படுத்தலாம்.

மழைக்காலங்களில் நீர் ஊற்றக் கூடாது. மழைக்காலத்தில் ஈரப்பதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகளை சோதித்துப் பார்த்து நீர் ஊற்ற வேண்டும். வெயில் காலங்களில் இரண்டு வேளைகளில் கூட நீர் ஊற்றலாம். கோடையில் அதிக வறட்சி இருப்பதுதான் அதற்குக் காரணம். செடிக்குத் தண்ணீர் இருக்கும்போது, காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும். மாடித்தோட்டத்தை மாதத்தில் இரண்டு நாள் தனியாக ஒதுக்கி முழுமையாகப் பராமரிக்க வேண்டும். மாடித்தோட்டத்தில் இது மிக முக்கியமானது.

வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும். கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளிப் பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.

மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்கக் குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாகத் தேர்வு செய்ய வேண்டும். ஒளிர்ச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி மிக அவசியம்.

பைகள்

மாடித்தோட்டத்தில் வெறும் காய்கறிகள் மட்டுமல்லாமல், மலர்கள் மற்றும் பழ வகைச் செடிகளையும் வளர்க்கலாம். இது தேனீகளை இழுத்து வரும். இதனால் காய்கறி விளைச்சல் நன்றாக இருக்கும்.

மாடித்தோட்டத்துக்குத் தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தீன் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும். நீர் உள்ளிறங்காத பெயின்டை உபயோகித்தும் மாடித்தோட்டம் அமைக்கலாம்.

மாடித்தோட்ட பைகளுக்கு நேரடியாகச் செடி மேல் படும்படியோ அல்லது வேர்ப்பகுதியில் படும்படியோ தண்ணீர் ஊற்றக் கூடாது. பூவாளி கொண்டு செடிக்குத் தண்ணீர் தெளிக்கலாம். அல்லது குறைந்த வேகத்தில் இயங்கும் குழாய்கள் மூலம் தண்ணீர் ஊற்றலாம்.

ஒருமுறை பயிரிட்ட பையில் மீண்டும் மண்புழு உரம், மாட்டு எரு சேர்த்து அடுத்த விதைப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முதலில் விதைத்த பயிரையே விதைக்கக் கூடாது. பயிர் சுழற்சி முறை அவசியமான ஒன்று.

பூச்சித் தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய்யை 5 மில்லி என்ற அளவில் 1 லிட்டர்  நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். இதுபோக இஞ்சி பூண்டு கரைசலையும் கலந்து பயிருக்குத் தெளிக்கலாம். இதனால் செடிகளை பூச்சிகள் அண்டவே அண்டாது.

மூலிகளைச் செடிகளை அதிகமாக வளர்க்கலாம். அவை வீட்டில் உடனடி வைத்தியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு மாடித்தோட்டம் அமைத்தால் வெற்றிகரமாகக் காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மாடித்தோட்டம் அமைக்கப்போறீங்களா… நீங்க செய்யக்கூடாத விஷயங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *