மாடித்தோட்டம் அமைக்க ஆடி மாதமே சரியானது. உங்களுடைய வீட்டுக்கு நீங்களே மாடித்தோட்டம் அமைத்தால், நீங்களும் ஒரு ‘மினி’ விவசாயி.
இன்றைய சூழ்நிலையில் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறோம். அந்த அளவிற்குக் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் காய்கறிகளும் இயற்கையான காய்கறிகளா… என்ற கேள்விக்கு நிச்சயமாக நம்மிடம் பதில் இருக்காது. இந்த விலை ஏற்றத்திற்கு விவசாயிகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அப்படி இயற்கையான காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்குச் சிறந்தது, மாடித்தோட்டம் மட்டும்தான்.
“உணவே மருந்து” என நமது முன்னோர்கள் வந்திருக்கிறார்கள். நாம் “மருந்தே உணவு” எனத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு வருகிறோம். மாடித்தோட்டம் முழுமையாகத் தெரியாதவர்கள் கூட பத்து தொட்டிகள் வைத்து ஆரம்பிக்கலாம்.
முதலில் தொட்டிகளில் நிரப்பும் மண், உரம் போன்ற பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தேங்காய் நார் கட்டி, செம்மண், மாட்டு எரு, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு என்ற கலவையை கலந்து தொட்டியில் போட வேண்டும்.
தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும். அதன் பின்னர் 5 நாட்கள் கழித்து, விதையை விதைக்கலாம். ஆனால் கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்வது அவசியம். மற்ற காய்கறிப் பயிர்களுக்கு நாற்றுவிடத் தேவையில்லை.
சென்னை பகுதிகளில் அதிகமானோர் பழ மர வகைகளைக் கூட மாடித்தோட்டத்தில் வளர்த்து வருகிறார்கள். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். மேலும், இஞ்சி, பூண்டு, மிளகாய் மூன்றையும் தண்ணீரில் கலந்து தெளிக்கிறார்கள். சிலர் புளித்த மோரையும் தெளிப்பது உண்டு. ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து எப்போதுமே பயன்படுத்தக் கூடாது. மழை காலங்களில் நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் இரண்டுமுறை தண்ணீர் தர வேண்டும். கோடைக்காலத்தில் ஏற்படும் செடிவாடலைத் தவிர்க்க குறைந்த செலவில் நிழல்வலைக்குடில் அமைக்க வேண்டும்.
செடிகள் அழுகினால் வேர்ப்பகுதியில் ஏதாவது அழுகல் நோய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதன்பின்னர் வேப்ப எண்ணெய் கரைசலை சிறிதளவு வேர்ப்பகுதியில் விட வேண்டும். மேலும் வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகளை தொட்டியில் நேரடியாக உரமாகப் போடலாம். மாடித்தோட்ட தொட்டிகளைக் கீழே வெறும் தரையில் வைக்கக் கூடாது.
பாலித்தீன் ஷீட்டுகளை விரித்து அதன்மேல் வைக்கலாம். இதனால் மாடியில் தண்ணீர் கசிவு ஏ
ற்படும் பயம் இருக்காது. மாடித்தோட்டம் அமைக்க உங்கள் வீட்டு மொட்டை மாடி இடமே போதும். மாடித்தோட்டம் என்பது இயற்கைமுறை காய்கறிகளை மட்டும் நமக்குத் தருவதில்லை.
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும். இதற்கு என்று தனியாக அதிகமாகச் செலவு செய்யத் தேவையில்ல. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும் இடங்களிலும், விதை திருவிழாக்களிலும் விதை வாங்கிக் கொள்ளலாம்.
முன்னர் தமிழ்நாடு அரசே மானிய விலையில் பொருட்களை கொடுத்து வந்தது. இத்திட்டம் இப்போதைக்குச் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஒருசில இடங்களில் மட்டும் செயல்பட்டு வருகிறது. 1000 ரூபாய்க்கு 685 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தேவையான அனைத்தையும் மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மாடித்தோட்டம் அமைக்க ஆடி மாதமே சரியானது. உங்களுடைய வீட்டுக்கு நீங்களே மாடித்தோட்டம் அமைத்தால், நீங்களும் ஒரு ‘மினி’ விவசாயி.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்