மொட்டை மாடியில் செடி வளார்க்கும் பழக்கம் இப்போது பெருகிவருகிறது. இந்த மாடிச் செடிகள் வீட்டுக்கு அழகையும் மனதுக்குக் குளிர்ச்சியையும் அளித்துவருகிறது. அழகையும் தாண்டி வீட்டுக்குப் பயன்படக் கூடிய வகையில் மாடியில் காய்கறிச் செடிகளையும் வளர்க்கிறார்கள்.
காய்கறிச் செடிகள், பூச்செடிகள் வளர்க்கலாம். ஆனால் மாடியில் மரம் வளர்க்க முடியுமா, என்றால் அது கேள்விக்குரிய விஷயம்தான். ஆனால் தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சேதுராமன்.
மக்கள்தொகைப் பெருக்கம், வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் காடுகளாக இருந்த பல இடங்கள் இன்று வீடுகளாக மாறிவிட்டன. எனவே விவசாய நிலத்தின் பரப்பும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் இயற்கை, விவசாயம் போன்றவற்றின் மீது ஆர்வமுள்ள சிலர் தங்கள் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைக்கின்றனர்.
இதற்காக ஜாடி, பூந்தொட்டி, சாக்குப்பை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகின்றனர். மாடித் தோட்டம் என அழைக்கப்படும் இதில் பூச்செடிகள், கீரை வகைகள், தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் ஆகியவற்றைப் பயிரிட்டுப் பராமரித்து வருகிறார்கள்.
மரம் வளர்க்க விரும்பும் சிலர் தங்கள் வீட்டு மாடியிலேயே தண்ணீர் நிரப்பிவைக்கும் டிரம்மில் மண் நிரப்பி அதில் மரங்கள் வளர்க்கின்றனர். மாடிக்கும் மரங்களுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கும். ஆனால், இவர் மாடியில் தோட்டம் அமைத்து அதில் வாழை, தென்னை மரங்கள் வைத்து மாடியையே விவசாய நிலமாகப் பராமரித்து வருகின்றார்.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டதாரி. இவர் மண் பரிசோதனை செய்யும் நிறுவனம் நடத்திவருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோமதிபுரத்தில் உள்ள வீட்டில் குடியேறிய அவர் தன் வீட்டு மாடியில் விவசாயம் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி, மாடியின் குறிப்பிட்ட பகுதியில் பிளாஸ்டிக் காகிதம் விரித்து அதன் மேல் மண், தென்னை நார் கழிவுகள் இட்டு மிளகாய், வெண்டை, தக்காளி, செம்பருத்தி போன்ற பலவிதமான செடிகளை வளர்த்து வருகிறார்.
மேலும், மரங்கள் வளர்ப்பதற்காகத் தொட்டி அமைத்து அதன் உட்பகுதியில் தென்னை நார்க் கழிவுகளைப் பரப்பி அதில் தென்னை, வாழை மரங்களையும் வளர்த்துவருகிறார்.
சேதுராமன் இந்தத் தோட்டத்துக்கு இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார். இந்தச் செடிகளுக்குக் குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. “இந்தத் தோட்டத்தில் தென்னை மரம் வைக்கத் தீர்மானித்தேன். ஆனால், அதிக பாரமாக இருக்கும் என உறவினர்கள் பலரும் வேண்டாம் என எச்சரித்தனர். புத்தகங்கள் மூலம் தென்னை மரத்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே மரம் வைத்துப் பராமரித்து வருகிறேன். இதற்குத் தென்னை நார்க் கழிவுகள் மட்டும் பயன்படுத்தி வருகிறோம்.
வாழை மரத்தில் ஏற்கனவே பழங்கள் விளைந்துள்ளன. ஆரம்பத்தில் தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தலின்போது சிரமங்கள் இருந்தன. ஆனால், தற்போது அதன் பயனை உணரும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனச் சொல்லும் சேதுராமன், ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வகையில் செலவழிக்க இந்த மாடித் தோட்டம் சரியான வழி என்றும் ஆலோசனை வழங்குகிறார்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
super sir