சின்ன வெங்காய பயிரை தாக்கி சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
சின்ன வெங்காய பயிரை சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குவதால் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சின்ன வெங்காயத்தில் இலை, நுனி கருகல், இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் கருகல் நோய் ஏற்படும். இந்த நோய் பூசாணத்தினால் ஏற்படுகிறது. நுனி கருகிய வெங்காயத்தின் அடிப்பாகத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இருந்தால் அதை கட்டுப்படுத்த பயிருக்கு அதிகளவில் சாம்பல் சத்து இட வேண்டும்.
வேப்பம் புண்ணாக்கு ஒரு எக்டேருக்கு 60 கிலோ என்ற அளவில் நடவு செய்யும்போது இட வேண்டும். அதிக வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை இருக்கும் பகுதியில் இலைப்பேன் தாக்குதல் காணப்படும். இந்த சூழலை தவிர்க்க அதிக முறை நீர் பாய்ச்சி பயிர் காயாமல் பார்த்து கொள்ள வேண்டும். இலைப்பேன் இல்லாமல் கருகல் பாதிப்பு மட்டும் இருந்து அடித்தண்டில் அழுகல் காணப்பட்டால் பூஞ்சான கொல்லி தெளிக்க வேண்டும்.
ஒரு சதம் போர்ட்டோ கலவை அல்லது 0.2 சதவீதம் தாமிர பூஞ்சாண கொல்லி பயன்படுத்தலாம். பூஞ்சானை கொல்லிகளுடன் ஒட்டும் திரவம் ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மில்லி என்ற அளவில் கலந்து 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும். நுனிக்கருகல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் மான்கோசெப் இரண்டு கிராம் கலந்து 0.5 மில்லி ஒட்டு திரவம் கலந்து தெளிக்க வேண்டும். அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் கார்பெண்டாசிம் ஒரு கிராம் வீதம் கலந்து கரைசலை வேர் பகுதி நனையுமாறு மண்ணில் ஊற்ற வேண்டும் என மாவட்ட வேளாண்துறை தெரிவித்துள்ளது.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்