‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை, ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து, சிறப்பான மகசூல் கண்டு வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள எரசினம்பாளையம் விவசாயத் தம்பதியர் சுப்பிரமணியம் – வஞ்சிக்கொடி.
வெங்காய அறுவடை மும்மரமாக நடந்து கொண்டிருக்க, நம்மிடம் பேச ஆரம்பித்தார் சுப்பிரமணியம். “ ஏற்கெனவே மூணு வருஷமா தென்னை, மா, செடி முருங்கைனு ஜீரோ பட்ஜெட்லதான் சாகுபடி செய்றோம். முதல் போகத்துல கொஞ்சம் மகசூல் குறைஞ்சாலும், போகப் போக ஏறுமுகம்தான்ங்கிறத கண்கூடாவே பார்த்துக்கிட்டிருக்கோம்’ என்று எடுத்த எடுப்பிலயே ஜீரோ பட்ஜெட்டுக்குக் கட்டியம் கூறியவர், தொடர்ந்தார்.
“இதுவரைக்கும் நீண்ட வயசுள்ள பயிர்களை மட்டுமே ஜீரோ பட்ஜெட்ல செஞ்சுட்டு வந்த நாங்க, குறுகிய வயசுள்ள காய்கறியையும் ஒரு கை பாத்துடலாம்னு முடிவு பண்ணி, முதல் முயற்சியா வெங்காயத்தை நட்டோம்.ரெண்டு வருஷமா எந்த வெள்ளாமையும் செய்யாம போட்டு வெச்சுருந்த நிலத்தைத்தான் இதுக்கு தேர்ந்தெடுத்தோம். முதல் தடவையா நடுறதால அரை ஏக்கர்ல மட்டும்தான் நட்டோம். கோடை மழைக்குப் பிறகு சட்டிக்கலப்பை வெச்சு ஆழமா உழுது, நிலத்துல வளந்துகிடந்த புதர்களை அப்படியே நிலத்துல அமுக்கினோம். அதெல்லாம் மக்கிய பிறகு, அதாவது ஒரு மாசம் கழிச்சு ரெண்டு உழவு போட்டு, மண்ணை இளக்கினோம். நிலம் ஆறின பிறகு ஏர் உழவு போட்டு வெங்காயத்தை விதைச்சோம். எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காம, அருமையா விளைஞ்சு வந்தது. பெருசா பராமரிப்பு இல்லைங்கறதால ஜெட்வேகத்துல எல்லா வேலையும் முடிஞ்சு, ஜீரோ பட்ஜெட் வெங்காயத்தை அறுவடையும் பண்ணிட்மோம்.
இதோ நல்ல ரோஸ் நிறத்துல, ஒரே சீரா, அழுகல், குத்தல் எதுவும் இல்லாம, கெட்டித் தன்மையா கோலிக்குண்டுகள் கொட்டி வெச்ச மாதிரி கிடக்கிறதைப் பாருங்க. எல்லாம் ஜீவாமிர்தம் செஞ்ச சித்துவேலைதானுங்க” என்று குவியல் வெங்காயத்தைக் கைநீட்டி பெருமைப்பட்டவர், சாகுபடி முறை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
சாகுபடி முறை:
- சின்னவெங்காயத்தின் மொத்த வயது 60 முதல் 70 நாட்கள்.
- வடிகால் வசதியுள்ள மணல் கலந்த, செம்மண் நிலங்களில் நல்ல மகசூல் கொடுக்கும்.
- இரண்டு மூன்று உழவு போட்டு நிலத்தை பொலபொலப்பாக்க வேண்டும்.
- கடைசி உழவுக்கு முன்பாக, அரை ஏக்கருக்கு மூன்று டன் தொழுவுரத்தை இறைத்துவிட்டு உழவு செய்ய வேண்டும். (இவருடைய நிலம் ஏற்கெனவே மேய்ச்சல் நிலமாக இருந்ததால், கால்நடைகளின் கழிவுகள் நிலத்தில் மண்டிக் கிடக்கின்றன. அதோடு செடி, கொடிகளையும் மடக்கி உழுததால் தனியாக அடியுரம் எதுவும் போடப்படவில்லை).
- பிறகு, ஏர் மூலமாக ஓர் உழவு போட வேண்டும்.
- இரண்டு அடி இடைவெளியில் பார் அமைத்து, பாத்தி நிறைய தண்ணீர் பாய்ச்சி, தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு, அரையடிக்கு ஒரு காய் வீதம் வெங்காயத்தை ஈர நடவு செய்ய வேண்டும் ( நாற்று உற்பத்தி செய்தும் நடலாம்).
- அரை ஏக்கருக்கு, 250 கிலோ விதை தேவைப்படும்
- அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் இருப்பு வைக்கப்பட்ட, நேர்த்தி செய்யப்பட்ட விதை வெங்காயம் விவசாயிகளிடமே கிடைக்கும்.
- தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- பத்து நாளைக்கு ஒருமுறை பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும்.அதைத் தவிர, வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை.
- 15, 30, 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.
- ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்து வந்தால், பயிர் நன்றாக பச்சை பிடித்து, 45 நாளுக்குப் பிறகு காய் பெருக்கத் தொடங்கும். பச்சை பிடித்து நிற்கும் தாள்கள் வெளுத்துப் போய் கீழே சாயும் சமயத்தில் (55 – 60 நாட்கள்) அறுவடையை ஆரம்பிக்ககலாம்’.
- ஏக்கர்ல 2,500 கிலோ மகசூல் கிடைச்சுது. இதுவே ரசாயன முறையில் சாகுபடி செஞ்சுருந்தா அரை ஏக்கர்ல 3,500 கிலோ வரைக்கும் மகசூல் எடுத்திருக்கலாம்.ஆனா, இடுபொருள் செலவு, பூச்சிக்கட்டுப்பாடு செலவு எல்லாம் சேர்ந்து, அந்த கூடுதல் மகசூலை சாப்பிட்டும். நாங்க ஜீரோ பட்ஜெட் முறையில செஞ்சதால, அதுக்காக நாங்க நிறைய செலவு செய்யல. மனசுக்கும் நிம்மதியா இருக்கு அது போதுமுங்க” என்றார் நிம்மதி பெருமூச்சோடு.
மீண்டும் ஆரம்பித்த சுப்பிரமணியம், “வெங்காயம் சீக்கிரமா அழுகிப் போற பொருள. அதனால, பட்டுனு விதைச்சோம். சட்டுனு அறுத்தோம்னு வித்துடணும். அதுலயும் ரசாயனம் போட்டு வளர்த்த வெங்காயமா இருந்தா 10 நாள்ல கெட்டுப் போயிடும். பட்டறையெல்லாம் போட்டு பாதுகாப்பு பண்ணித்தான் விக்க முடியும். ஆனா, ஜீரோ பட்ஜெட்ல விளைஞ்ச வெங்காயத்தை பட்டறை போடாம வெச்சுருந்தாலும், மூணு மாசம் வரைக்கும் அழுகாது. அதனால்தான் அறுவடை செஞ்ச வெங்காயத்தை ஒட்டுமொத்தமா விக்காம, தினமும் கொஞ்சம்கொஞ்சமா கொண்டு போயி உழவர் சந்தையில விக்க முடியுது.
நான் மாசிப்பட்டத்துல போட்டிருந்தேன். பொதுவா வெங்காயத்துக்கு ஏத்தது வைகாசி, கார்த்திகைப் பட்டங்கதான். சிலுசிலுனு வீசுற ஈரக்காத்து, மிதமான தட்பவெப்பம் அப்பப்ப கிடைக்கிற சாரல் மழை எல்லாம் ஒண்ணா சேர்ந்து கிடைக்கும். அதுலயே பயிர் நல்லா வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். மண்டை எரியுற மாசிப் பட்டத்துல போட்டதும்கூட மகசூல் குறைஞ்சதுக்குக் காரணம். இப்ப வைகாசிப் பட்டத்திலயும் நடவு செய்யப்போறோம். நிச்சயமா கூடுதல் மகசூலை அள்ளப்போறோம்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
தொடர்புக்கு
ஆர் . சுப்பிரமணியம்
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம்
அலைபேசி 09942596971
மூலம்: பசுமை விகடன், நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்