விதை மூலம் சாம்பார் வெங்காயம் நாற்று பாவி சாகுபடி செய்பவர்கள் கீழ்க்காணும் சிறப்பு விதிமுறைகளைக் கடைபிடித்து சிறப்பான மகசூல் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பசுந்தாள் உரப்பயிர்களும் வெங்காயமும்:
- பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மடக்கிவிடும் தொழில்நுட்பத்தால் வெங்கா யத்தில் தரமான கிழங்குகளைப் பெறமுடியும்.
- இதற்கு வெங்காய நாற்றுவிடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே தக்கைப்பூண்டு அல்லது சணப்பு அல்லது சோயாபீன்ஸ் அல்லது கொத்தவரை விதைகளை ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதைத்து 50 நாட்களில் ரோட்டவேட்டர் கருவி கொண்டு இரண்டுமுறை உழவேண்டும்.
- நிலம் நன்கு ஆறியபின் அந்த நிலத்தில் ஒரு மாத இடைவெளி விட்டு வெங்காய நாற்றுகளை நடவேண்டும்.
- அதற்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு வெங்காய விதை பாவும் தேதியை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
- இவ்வாறாக பசுந்தாள் உரமிட்டு வளம் கூட்டும் நிலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 2 கிலோ சூடோமோனாஸ், 2 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி, 5 கிலோ பாஸ்போபாக்டீரியா, 5 கிலோ அசோஸ்பைரில்லம் ஆகிய நுண்ணுயிரிகளை நன்கு மக்கிய மாட்டு எரு அல்லது மண்புழு உரம் 100 கிலோவுடன் உரநேர்த்தி செய்து பின் பாத்தி அமைத்தல் நலம்.
உழவு மேலாண்மை:
- வெங்காய விதை பாவி நாற்றங்காலுக்கு வயது 25 என்ற நிலையில் சாகுபடிக்குத் தேவையான நிலத்தை தேர்வுசெய்து இரண்டு மூன்று தடவை நன்கு உழவு செய்ய வேண்டும்.
- ஏர் உழவு எனில் பதமான சூழலில் 4 உழவு போடவேண்டும்.
- ஏழு கலப்பை அல்லது ஐந்து கலப்பை கொண்டு ஒரு வார இடைவெளியில் 2 தடவை உழுது கடைசியாக கொக்கி கொண்டு 2 உழவு போடுதல் அவசியம்.
அடி உரம் மற்றும் உரமேலாண்மை:
- அடி உரமிடுவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் ஆட்டுக்கிடை மறிக்கலாம்.
- தொழு எரு பயன்படுத்தும் பட்சத்தில் ஏக்கருக்கு 10 டன் இடலாம்.
- கோழி எரு எனில் ஏக்கர் ஒன்றுக்கு 2 டன்னுக்கு மிகாமல் பயன்படுத்த வும்.கோழி எரு பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கி நிழலில் கொட்டி ஒரு டன் உரத்திற்கு 50 கிலோ சூப்பர் பாஸ்பேட் கலந்து வைத்து பின் பயன்படுத்துவது மிக நன்று.முடிந்தால் வாரம் ஒரு முறை நீர் தெளித்துவந்தால் நன்கு மக்கிய, தரமான கோழி எரு கிடைக்கும்.
பாத்தி அமைத்தல்:
- அனைத்து அடி உரங்களும் இட்டபின் 8” அல்லது 20 செ.மீ. அகலம் கொண்ட கீழ் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நடவு மேலாண்மை:
- தகுதியான நாற்றுகள் 45 முதல் 50 நாட்களில் உருவாகும்.
- அதிகபட்சமாக 60 தினங்களில் நாற்று நடவை முடிக்கவும்.
- நாற்றுகளை நடவுக்கு முந்தைய தினம் நீர் பாய்ச்சி, பறித்து, நீள்-பதியம் (நெட்டுப் பதியம்) வைத்து மறுதினம் நடவு செய்ய வேண்டும்.
- அன்றே பறித்து உடனுக்குடனும் நடலாம். முந்தைய தினம் நாற்றுகளை எடுத்து பதியன் வைத்துக் கொண்டால் தொய்வில்லாமல் நடவு செய்யலாம்.
- பறித்து வைத்த நாற்றுகளை சிறு சிறு முடிகளாகக் கட்டி, நடவு செய்வதற்கு முன் சீராக நாற்றின் முன்பகுதியை பதமான அரிவாள் கொண்டு கீழே கட்டை ஒன்றை வைத்துக்கொண்டு தேவையான அளவு கச்சிதமாக ஒரு கைப்பட வெட்டி நடவு செய்ய வேண்டும்.
- நாற்று முடியின் நுனியை கழுத்தைத் திருகி தாள்களைக் கசக்கி எறிவது எக்காரணம் கொண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.
- இவ்வாறு செய்வதால் பாரின் இருபக்கம் நடும் நாற்றுகள் காற்றில் சாயாமல் உறுதியாக நிற்கும். நாற்று நடவும் விரைவாகச் செல்லும்.
- எடுத்து வைத்துள்ள நாற்றுகளை 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாளியில் 20 கிராம் சூடோமோனாஸ், 20 கிராம் டிரைகோடெர்மா விரிடி, 20 கிராம் அசோஸ்பைரில்லம் மூன்றையும் ஒன்றாகக் கரைத்து நாற்றின் வேர்ப்பகுதியை கரைசலில் முக்கி நடுவது மிக மிக நன்று. நாற்றுகள் நோய் தவிர்த்து விரைவில் பச்சை பிடிக்க ஏதுவாக இருக்கும்.
மேலும் விபரங்களுக்கு: கண்மணி சந்திரசேகரன், 404, கண்மணி இயற்கை அங்காடி, ரயில்வே நிலையம் எதிரில், பழனிப்பாதை, ஒட்டன்சத்திரம்-624 619. அலைபேசி எண்: 09865963456
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்