வெங்காய விலை அநியாயத்துக்கு விழுந்து போச்சி… ஏகப்பட்ட நஷ்டம்” என்று சில வாரங்களுக்கு முன் கோவை பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அதுகுறித்து பசுமை விகடனில கட்டுரை வெளியாகியிருந்தது.
‘வெங்காயத்தை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் வேண்டும்… வெங்காய ஏற்றுமதி தடையை ரத்து செய்யவேண்டும்’ என்றெல்லாம் அரசுக்கு கோரிக்கை விட்டார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். இதுவரை அரசுத்தரப்பிலிருந்து உரிய பதில்கள் வந்தபாடில்லை… இதற்கு நடுவே, ”இயற்கை முறையில நாட்டு ரக வெங்காயத்தை விளைவிச்சா, விலை குறைஞ்சாலும் தாக்குப்பிடிக்கலாம்” என்று ஆலோசனை சொல்கிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி வெங்காய விவசாயிகள் சிலர்.
அவர்களில் ஒருவர் காவேரிஅம்மாபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (09345941301). சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இவர், இதுதொடர்பான கருத்தரங்கங்களுக்குச் செல்வது, விவசாயிகளைச் சந்தித்து விவரங்களைப் பெறுவது, பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளை அள்ளிக் கொள்வது என்று மிகவும் நுணுக்கமாகவே செயல்பட்டு வருபவர்.
”சரியான பட்டத்துல விதைச்சா வெகுமதியை அள்ளிக்கொடுக்கும் அற்புத பயிர்தான் (சின்ன) வெங்காயம். வைகாசி-ஆனியில ஒரு பட்டம், ஐப்பசி-கார்த்திகையில ஒரு பட்டம்னு வருசத்துக்கு ரெண்டு பட்டம். இந்தப்பகுதி விவசாயிங்க இந்த ரெண்டு பட்டத்துலதான் பெரும்பாலும் வெங்காயம் பயிர் செய்வாங்க. எங்க பகுதியில விளையற காய் நல்லா கெட்டியா இருக்கிறதால, ஆறு மாசம் வரைக்கும் பாதுகாத்து, நல்ல விலை வரும்போது வித்துக்கலாம். அதனால எங்களுக்கு வெங்காயம் லாபமாத்தான் இருக்கு.
களையெடுத்தல்
|
நடவு செய்த 60 முதல் 80 நாளுக்குள்ள அறுவடை முடிஞ்சிரும். வெங்காயத்தை நேரடியாவோ… நாத்துவிட்டோ நடவு செய்யலாம். நேரடி நடவுல விளையற வெங்காயம் கெட்டியா இருக்கும். பட்டறை போட்டு சேமிச்சி வச்சா ரொம்ப நாளைக்குத் தாங்கும். நாத்து விட்டு நட்டா சேமிச்சி வைக்க முடியாது. காயவைச்சி உடனே வித்துறணும். ஆனா, நாத்து விடுறதுல காய் பெருசா வரும். வெளைச்சலும் கூடுதலா கிடைக்கும். அதுக்காகவே சில ஏரியாவுல அந்த முறையில பயிர் செய்றாங்க. ஆனா, விலை குறையும்போது தாக்குப்பிடிக்க முடியாம போயிடுது.
போன வைகாசி பட்டத்துல ரெண்டு ஏக்கருல கோ-4 ரக வெங்காயத்தை இயற்கை முறையில வெள்ளாமை பண்ணிணேன். பதினாறு டன் கிடைச்சுது. மனு (பத்து கிலோ) எம்பது ரூவாய் ரேட்டுக்கு 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கு வித்தேன். செலவு 33 ஆயிரம் போக 95 ஆயிரம் லாபம். ஊடுபயிரா பூசணி போட்டிருந்தேன். அது 120 நாள் பயிர். அதுல 9 டன் கிடைச்சுது. டன் ரெண்டாயிரம் ரூபாய்னு 18 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. செலவு மூவாயிரம் போக, 15 ஆயிரம் லாபம். மொத்தமா ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 1 லட்சத்தி 10 ஆயிரம் ரூபா கிடைச்சுது.
இந்தத் தடவையும் ரெண்டு ஏக்கருல வெங்காயம் நட்டிருக்கேன். வெங்காய விதையையும் உற்பத்தி பண்றேன். வெங்காயத்தை விதைக்காக வளர்த்தா 120 நாள் ஆகும். வெங்காயத் தாள்ல இருந்து வரும் தண்டுல பூ பிடிக்கும். அது காய்ஞ்சி, தண்டு மஞ்சள் நிறத்துக்கு வந்தப்புறம் கேப்பை கதிரை அறுக்குற மாதிரி பூவை மட்டும் அறுத்து, காயவெச்சி, குச்சியால அடிச்சி விதையை பிரிச்சி எடுக்கணும். விதைக்கு வளக்குறப்ப காய் கம்மியாத்தான் கிடைக்கும். காய் உருட்டும் இருக்காது. ஒரு ஏக்கர்ல ஒரு டன்னுக்கும் கம்மியான காயும், நூறு கிலோ விதையும் கிடைக்கும். போன வருசம் கிலோ ஆயிரம் ரூபாய்னு விதை வித்திச்சி. இந்தத் தடவை எண்ணூறு ரூபா வரைக்கும்தான் விலைபோகுது’’ என்று சொன்ன செல்வராஜ், சாகுபடி முறைகளை பட்டியல் போட்டார்.
‘வைகாசி பட்டம் என்றால் ஆனி மாதத்துக்குள் நடவு செய்யவேண்டும். ஐப்பசி பட்டம் என்றால் கார்த்திகை மாதத்துக்குள்ளாக நடவேண்டும். அப்போதுதான் மழையிலிருந்து தப்பிக்க முடியும். நல்ல விலையும் கிடைக்கும். பெரும்பாலும் கோ-3, கோ-4 ரக விதைகளைத்தான் விவசாயிகள் நடவு செய்கிறார்கள். இதை நேரடியாக நடலாம். ஏக்கருக்கு 600 கிலோ விதைக்காய் தேவைப்படும். ஒன்றரை அடி பார்களை அமைத்து, செடிக்குசெடி 3 விரல் அளவு இடைவெளி விட்டு நடவேண்டும். ஆரம்பத்திலேயே தொழு உரம் ஏக்கருக்கு ஒரு டன்னுக்கும் குறையாமல் போடுவது நல்லது.
நாற்று முறையில் நடுவதற்கு கோ-5 ரகம்தான் சிறந்தது. ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதும். நேரடியாக நடவு செய்யும்போது விதைக்காய்களுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். நாற்று முறை என்றால், ஆயிரம் ரூபாய் போதும். நாற்றங்காலில் 45 நாள் வளர்ந்த செடிகளை நடவு செய்யலாம். நடவு செய்த 5 முதல் 7 நாளுக்குள்ளாக முளை விடும். 15 முதல் 20 நாளில் ஒரு களையும், 30-ம் நாளில் ஒரு களையும், 45-ம் நாள் ஒரு களையும் எடுக்கவேண்டும். நுனிகருகல் நோய் தாக்குதல் இருந்தால், இரண்டு கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஊற வைத்து சாறு தயாரித்து தெளிக்கவேண்டும்.
30 மற்றும் 40-ம் நாளில் மண்புழு உரம், அசோஸ் பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா எல்லாவற்றையும் கலந்து கொடுத்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். அதிகமாக நோய் தாக்காது. ரசாயனம் போட்டு விவசாயம் செய்வதை விட இயற்கை முறையில் செய்தால் செலவு குறைவு. 60 முதல் 70 நாட்களில் வெங்காயதாள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில் செடி தரையில் சாய ஆரம்பிக்கும். அதுதான் அறுவடைக்கான நேரம். வெங்காயதாளை மட்டும் லேசாக அறுத்துவிட்டு, வேரை அறுக்காமல் காய வைத்து சேமிக்கலாம். உடனடியாக விற்பனை செய்ய நினைத்தால், தாள் மற்றும் வேர் அனைத்தையும் நீக்கிவிடவேண்டும்.
வெங்காய சேமிப்பு பட்டறை
|
ஒட்டன்சத்திரம் பகுதியில் நாட்டுரகம்தான் பயிரிடப் படுகிறது. கோவை வேளாண்மை பல்கலைக் கழகம்தான் அவற்றை எங்களுக்குக் கொடுக்கிறது. அவற்றில் கோ-3, கோ-4 ஆகிய ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதிக நாள் தாங்கும் தன்மை இந்த ரகங்களுக்கு இருப்பதால், ஏற்றுமதிக்கும் ஏற்றதாக உள்ளன. கோ-5 ரகம் விதை எடுப்பதற்காக பயிர்செய்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் பல்லடம், குண்டடம் பகுதியில் வெங்காயம் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. இங்கெல்லாம் முன்பு நாட்டு ரகங்களைத்தான் அதிகம் விளைவித்து வந்தார்கள். ஆனால், வீரிய விதைகள் வந்த பிறகு அதற்கு பரவலாக மாறிவிட்டார்கள். வீரிய ரகங்கள் அதிக விளைச்சலைக் கொடுத்தாலும் சாகுபடி செலவும் அதிகம்தான். அதாவது, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. சேமிப்புத் திறன் இல்லாததால் வைத்திருந்தும் விற்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு விற்கிறார்கள். இதே நாட்டு ரகங்களுக்கு மாறினால் நிச்சயம் அவர்களுக்கு பாதிப்பு இருக்காது’ என்று தன் அனுபவத்திலிருந்து எடுத்துச் சொன்னார் செல்வராஜ்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Very very use full info.
புரட்டாசியில் வெங்காயம் நாடவு செய்யலாமா