கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர், இயற்கையாகக் கிடைக்கும் காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறிக் கழிவுகள், சாணம் உள்ளிட்டவற்றை உரமாகப் பயன்படுத்தி, வெண்டைச் செடியை வளர்த்துள்ளார்.
அதில் விளைந்த வெண்டைக்காய், கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவிற்கு அபரிமிதமாக வளர்வதை, அந்தப் பள்ளியில் இப்போது படிக்கும் இரண்டு மாணவர்களைத் தலைவர்களாகக் கொண்ட குழு, ஆசிரியர் ஒருவரின் உதவியோடு ஆராய்ந்து கண்டறிந்துள்ளது. ‘கின்னஸூக்கு இந்தக் காயை அனுப்பலாமா…’ என்று அந்தக் குழு ஆராய்ந்துவருகிறது.
வெள்ளியணை, தில்லைநகரைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான ஆனந்த், தனது வீட்டுத் தோட்டத்தில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறி கழிவுகள், சாணம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை வெண்டைச் செடிக்கு உரமாக இட்டுள்ளார். அதன்பிறகு நடந்தவற்றை ஆசிரியர் தனபாலே விவரிக்கிறார்.
“இயற்கை உரத்தை வெண்டைச் செடிக்கு வைத்ததும், அது, ஒரு மாதத்தில் 183 சென்டி மீட்டர் வளர்ந்து, 40.2 சென்டி மீட்டர் நீளத்துக்கு வெண்டைக்காய் காய்த்துள்ளது. இதை, எங்கள் பள்ளியில் பயிலும் ஹரிகிஷோர், சுகி ஆகிய மாணவர்களைக்கொண்ட குழு ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.
மேலும், இந்த வேகத்தில் வளரும் வெண்டைக்காய் முழு வளர்ச்சியடையும்போது, கின்னஸ் சாதனை பெறுமா என்பதையும் மாணவர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். நிச்சயமாக கின்னஸ் சாதனை படைப்பார்கள். அதைவிட, இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதே, கின்னஸ் சாதனை பெற்றதுபோலத்தான்” என்றார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்