தைப் பட்டத்தில் வெண்டை சாகுபடி

சிறுவர் முதல் பெரியவர் வரையில் விரும்பும் காய்கறிகளில் ஒன்றான வெண்டை சாகுபடியில் தைப்பட்டத்தில் கூடுதல் லாபம் பெற தகுந்த ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

agri1

 

 

 

 

 

 

மருத்துவப் பண்புகள்:

வெண்டைக்காயில் குறைவான கலோரிகளும், மிகுதியான ஏ, சி, தையமின், பி 6 விட்டமின், கால்சியம், துத்தநாகம் தாதுக்களும் உள்ளன. மேலும், பிபோபிளாவின், போலிக் அமிலம், நாரச்சத்துகள் கொண்டவை. வயது முதிர்வைக் குறைக்கும் பண்பை வெண்டை கொண்டிருப்பதால் அழகாககவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.

கால்சியமும், இரும்பும் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

வெண்டையில் உள்ள மூசிலேஜ், நார்ச்சத்து ஆகியவை ரத்த சர்க்கரையைச் சீராக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும்.

காரத்தன்மையுடையதால் அமிலத்தை சரிகட்டு குடல் புண்ணை சரியாக்கும். வெண்டை சாகுபடிக்கு தைப்பட்டம் மிகவும் ஏற்ற தருணமாகும்.

ரகங்கள்:

கோ2, எம்.டி.யு1, அர்கா அனாமிகா, பார்பான கிராந்தி, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.

வீரிய ஒட்டு ரகங்கள்:

சாஹிபா, யுஎஸ் 7902, கோ 3, யுஎஸ்9ஏ, ஆர்த்தி, வர்ஷா, எம்10, எம்12, விஜயா, விஷால் ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

மண் மற்றும் தட்பவெப்பம்:

வெண்டையை எல்லா வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண் வகைகளில் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.

பருவம்:

ஜூன்-ஆகஸ்ட், பிப்ரவரி- மார்ச் தகுந்த பருவங்கள்.

விதையளவு:

வீரிய ஒட்டு ரகங்களாக இருந்தால் ஏக்கருக்கு 1.5 கிலோவும், இதர ரகங்கள் ஏக்கருக்கு 3 கிலோவும் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்:

வெண்டை சாகுபடிக்கு முன்னதாக நிலத்தை நான்கு முறை உழவு செய்ய வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும்.

விதை நேர்த்தி:

  • வெண்டை விதைகளை விதைப்பதர்கு 24 மணி நேரத்துக்கு முன் 2 கிராம் கார்பன்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர வைக்க வேண்டும்.
  • 45 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் வீதம் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.
  • பத்து நாள்களுக்குப் பிறகு நன்றாக உள்ள செடியை வைத்துக் கொண்டு மற்ற செடிகளைக் களைத்துவிட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

விதைத்தப் பிறகு வாரத்துக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். சொட்டுநீர்ப் பாசன முறையில் நீர்ப்பாய்ச்சுதல் சாலச் சிறந்தது.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்:

  • அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 15 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 30 நாள்கள் கழித்து 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
  • ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ்பைரில்லம், 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்ளை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு தழை, மணச்சத்து தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
  • இலை வழி ஊட்டம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

காய்த்துளைப்பான்:

  • இத்தகைய பூச்சிகளை கட்டுப்படுத்த 5 இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து தாய் அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • தாக்குதலுக்குள்ளான காய்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
  • முட்டைகளை அழிக்க ஏக்கருக்கு 40,000 டிரைகோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 50 கிராம் வேப்பங்கொட்டை பொடி அல்லது 2 கிராம் கார்பரில் நனையும் தூள் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கலாம்.
  • சாம்பல் நிற வண்டு: கார்போ பியூரான் 3 ஜி குருணை மருந்தை ஏக்கருக்கு 5 கிலோ அளவில் இட வேண்டும்.

நூற்புழு:

  • மண் பரிசோதனை மூலம் நூற்புழு தாக்குதலை கண்டறிந்தால் ஏக்கருக்கு 160 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக இடும்போது பிற உரங்களுடன் கலந்து இட வேண்டும்.
  • மேலும், ஏக்கருக்கு 400 கிராம் 3 சத கார்போ பியூரான், 10 சத போரேட் குருணை மருந்து இடலாம்.

மஞ்சள் நரம்புத் தேமல் நோய்:

  • வெள்ளை ஈ எனும் பூச்சியால் இந்த நோய் பரவும். இந்த ஈயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. வேப்பெண்ணெய் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும். மஞ்சள் ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தலாம்.

சாம்பல் நோய்:

  • இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடனும், 15 நாள்கள் கழித்தும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை:

  • விதைத்த 45ஆவது நாள் முதல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
  • 90 முதல் 100 நாள்களில் ஏக்கருக்கு ஆறு டன் வரை மகசூல் எடுக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ல தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம் என உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *