தை பட்டம், ஆடி பட்டம் ஆகிய இரு பருவங்களில் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தை பட்டச் சாகுபடி நடந்து வருகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக, சூரியனின் உஷ்ணம் பூமியில் படும்போது, மண் சூடாகிறது. இதில் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது.
வெண்டை விதைத்த ஒரு மாதத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடங்கும்.இது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அதிகம் இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டமடைய நேர்கிறது.
வெண்டை பயிரைக் காப்பதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியது:
வெள்ளை ஈக்கள்:
- வெள்ளை ஈக்களின் இனப் பெருக்கம் அதிகம் நடைபெறும். இதன் இளம் குஞ்சுகளும், முதிர்ந்த வெள்ளை ஈக்களும் இலைகளின் சாற்றை உறிஞ்சும். இலை மஞ்சளாகி, அதன் ஓரங்கள் சுருங்கிவிடும்.
- இந்த ஈக்களால், மஞ்சள் தேமல் நோய் பிற இலைகளுக்கும் பரவும். ஒளிச்சேர்க்கை நடைபெறாமல், மகசூல் பாதிக்கப்படும்.
- இவற்றைக் கட்டுப்படுத்த முன்னுக்குப் பின் முரணான, ரசாயனத் தன்மையுள்ள, அதிக விஷத் தன்மையுள்ள மருந்துகளைப் பயன்படுத்தும் போது, அப்பூச்சிகள் குறையாமல் அதிகமாகும். இதற்குக் காரணம் அவை மறு உற்பத்தித் திறன் பெற்றுவிடுவதே.
- இதைக் கட்டுப்படுத்த, வெண்டை விதைத்த 30 நாளில் ஒரு ஏக்கருக்கு 25 மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை, பயிரை நோக்கி வைக்க வேண்டும்.இதற்கு ரூ.11 முதல் ரூ.15 வரை செலவாகும்.30 முதல் 70 நாள்கள் வரை இந்த பொறி வயலில் இருந்தால், வெண்டையைக் காக்கலாம்.
- துத்தி ரக (அபுட்டிலால் இண்டிகம்) களைச் செடிகளைப் பிடுங்கி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த களையால், வெள்ளை ஈக்களின் இனப்பெருக்கம் அதிகம் இருக்கும்.
- பொறி வைக்க முடியாவிட்டால், டைமீத்தோயேட் என்ற ரசாயன பூச்சிக்கொல்லியை ஒரு லி. நீருக்கு 2 மி. கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். பூச்சி மருந்தையும், அளவையும் மாற்றாமல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
பச்சைத்தட்டுப்பூச்சி:
- இதுவும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சி. வெள்ளை ஈயின் செயல்பாடு மெதுவாக இருக்கும். ஆனால், தத்துப்பூச்சி, தத்தித் தத்தி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவும்.
- இதைக் கட்டுப்படுத்த, 5 சீதா பழத்திலிருந்து கிடைக்கும் கொட்டைகளை இடித்து, ஒரு இரவு முழுவதும் ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் மெல்லிய துணியில் வடிகட்டி, ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.இது பச்சை தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும்.
- தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், மோனோகுரோட்டோபாஸ் அல்லது டைமீத்தோயேட் மருந்துகளில் ஒன்றை ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மி. கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
காய்த்துளைப்பான்:
- வெண்டைச் செடியில் பூ பூக்கும் தருணத்தில் ஒரு லிட்டர் நீருக்கு 3 சத வேப்ப எண்ணெய் 2 மி. வீதமும், கோபுர மார்க் காதி சோப்புக் கரைசலை ஒட்டுத் திரவமாகக் கலந்து தெளிக்க வேண்டும்.
- வேப்ப எண்ணெயின் கசப்புத் தன்மையால் காய்த்துளைப்பான் காயில் துளையிடாது.
- அடுத்ததாக, வெண்டை பிஞ்சாக இருக்கும்போது காய்த்துளைப்பானின் தாய்ப்பூச்சிகள் (பட்டாம்பூச்சி) வரும். ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைக்க வேண்டும். விளக்குப் பொறியில் 200 வாட்ஸ் பல்பு இருக்க வேண்டும். அதன் கீழே, நீரில் 2 சொட்டு மண்ணெய் கலந்து வைக்கப்பட்ட தட்டு இருக்க வேண்டும். மாலை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விளக்கை எரிய விட வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் முட்டையிடுவதைத் தடுக்க முடியும்.
- இரவு 10 மணிக்கு மேல் எரித்தால் நன்மை செய்யும் பூச்சிகள் சிலந்தி, பொறிவண்டு, தரைவண்டு மாட்டிக் கொள்வதைத் தடுக்கலாம். ஒரு ஏக்கருக்கு ரூ.100 முதல் ரூ.125 வரையே செலவாகும்.
இனக்கவர்ச்சிபொறி:
- பெண் பூச்சியின் உடலில் இருந்து செக்ஸ் ஹார்மோன்களை எடுத்து இனக்கவர்ச்சி பொறியில் வைப்பார்கள். இதன் மூலம் ஆண் பூச்சிகள் கவர்ந்து இழுக்கப்பட்டு, அழிக்கப்படும்.இதை ஒரு ஏக்கருக்கு 5 வைக்க வேண்டும். ஏக்கருக்கு மொத்தமாக ரூ.150 வரை செலவாகும்.
- முட்டைப் பருவத்தைக் கட்டுப்படுத்த, டிரைகோகிராமா கைளோனிஸ் என்ற ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சி.சி. வீதம் எடுத்து, 12 பாகங்களாகப் பிரித்து, 12 இடங்களில் அவற்றை பிளாஸ்டிக் கப்பில் கட்டித் தொங்கவிட வேண்டும்.
- அவ்வாறு செய்வதால் ஒட்டுண்ணி அட்டைகளில் இருந்து நன்மை தரும் குளவிகள் வெளியேறி, முட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும்.
- காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த அட்டைகள் கிடைக்கும்.ஒரு சி.சி. விலை ரூ.20.
- வெண்டை விதைத்த, 40 முதல் 45 நாள்களில் புழு அதிகம் தோன்றும். வெண்டையைத் துளையிடும். அந்த பருவத்தில், மறுபடியும் காதி சோப்புடன் கலந்த வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
- அதையும் மீறி காய்த்துளைப்பான் துளையிட்டால், பெவேரியா பேசியானா ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் என்ற அளவில் கரைத்து, அதிகாலைப் பொழுதில் வெண்டைச் செடி மீது படுமாறு தெளிக்க வேண்டும்.புழு மீது படும் பூஞ்சான்கள் நோயை உருவாக்கி, புழுக்களைச் சாகடிக்கும்.பூஞ்சானம் காமராஜர் வேளாம் அறிவியல் ஒரு கிலோ ரூ.170க்கு கிடைக்கும்.
- தாக்குதல் தொடர்ந்தால், பேசில்லஸ் துருஞ்சிஇயான்சிஸ் என்ற பாக்டீரிய உயிர் ரக மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து, புழு மீது தெளிக்க வேண்டும்.
- தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், கார்பரைல் 50 டபிள்யூபி என்ற தூள் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து, தெளிக்க வேண்டும்.
நூற்புழு:
- வெண்டையின் வேர்ப்பாகத்தில் இருக்கும். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செடி திடீரென வாடும். பிறகு மீண்டும் சரியாகும். அவ்வாறு நிகழ்வது நூற்புழு இருப்பதற்கான அறிகுறி.
- ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் வேரில் நூற்புழு இருப்பதைக் காண முடியும்.கண்ணுக்குத் தெரியாவிட்டால் ஆய்வகத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம்.
- அவ்வாறு புழு இருந்தால், ஒரு ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு போட்டு, தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும்.
- தாக்குதல் அதிகமாக இருந்தால், கார்போ பியூரான் என்ற குருணை மருந்தை ஏக்கருக்கு ஒரு கிலோ அளவு எடுத்து, வயிலில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- ஒருங்கிணைந்த பூச்சி மேலான்மை முறையில் இவற்றைச் செய்ய வேண்டும். கூடுமான வரையில் செடியில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.காயப்போடக் கூடாது.
வெண்டை உற்பத்தியை அதிகரிக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசியம் அல்லது யூரியா அல்லது இரண்டையும் சேர்த்து தெளிக்கும் போது, பூ அதிகம் இருக்கும். எதிர்ப்புத் தன்மை உருவாகும்
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இயற்கை முறையில் வெண்டை பயிரை எப்படி பாதுகாப்பது?