வெண்டை சாப்பிட்டால் அறிவு வளரும் என்பது பரவலான நம்பிக்கை. அந்த வெண்டையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து செல்வத்தை வளர்த்திருக்கிறார் தேனி விவசாயி.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் வெண்டைக்காய் பெரும்பாலும் உள்ளூர், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது.
– விவசாயி பால்ராஜ்
20 ஆண்டுகளாக வெண்டை
இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோம்பையைச் சேர்ந்த விவசாயி பி. பால்ராஜ் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு வெண்டைக்காய் ஏற்றுமதி செய்கிறார்.
ஆண்டு முழுவதும் வெண்டை சாகுபடி செய்யலாம். இவருக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 20ஆண்டுகளாக வெண்டை சாகுபடி செய்துவருகிறார். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ஒன்றே கால் கிலோ விதை தேவை.
உழவு, மருந்து, களையெடுத்தல் ஆகியவற்றுக்குப் பின் ஒன்றரை மாதத்தில் வெண்டைக்காய் பறிக்கத் தயாராகி விடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பறிக்கத் தொடங்கலாம். வாரத்துக்கு ஒரு முறை மருந்து அடிக்கவேண்டும். சராசரியாக ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை வெண்டை கிடைக்கும். மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து காய் பறிக்கலாம்.
தரம் முக்கியம்
“செலவு போக வாரத்துக்கு ரூ.10 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். வரத்து அதிகமானால் விலை சரியத் தொடங்கிவிடும். மேலும் வாகனச் செலவு, காய்களை மூட்டை போடச் சாக்கு, கமிஷன் மண்டிக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன் எனக் கூடுதல் செலவு ஏற்பட்டு வந்தது. இதனால் கவலைப்பட்டு கொண்டிருந்தோம்.
இந்நிலையில் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் ஏஜென்ட்களோ, வெண்டையைப் பறித்துக் கொடுத்தால்போதும் தாங்களே மற்றச் செலவுகளை ஏற்றுக்கொண்டு அன்றைய சந்தை விலையைவிட கிலோவுக்கு ரூ.10 கூடுதலாகக் கொடுத்து எடுத்துக்கொள்வதாகக் கூறினர். கடந்த ஓராண்டாக அவர்களிடம் கொடுத்து வருகிறோம். ஒரே விஷயம் வெண்டை நல்ல தரத்தில் இருக்க வேண்டும்” என்கிறார்.
சாகுபடி அதிகரிப்பு
இப்படி வாங்கப்படும் வெண்டை 10 கிலோ எடையுடன் தனித்தனிப் பெட்டிகளில் அடைத்து விமானம் மூலம் சிங்கப்பூர், துபாய் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“எனது ஆலோசனையைக் கேட்ட பல விவசாயிகள் வெண்டை சாகுபடி செய்து ஏற்றுமதி மூலம் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வெண்டை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. உசிலம்பட்டி, தர்மத்துப்பட்டி பகுதி விவசாயிகளும் வெண்டை சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்” என்றார்.
பால்ராஜை தொடர்புகொள்ள: 08608144255
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்