மனிதன் அழித்து வரும் மிருகங்கள் – 1 – பனி கரடி

உலகம் வெப்பம் ஆவதால் வட துருவம் உருகி கொண்டு இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் வட துருவம் நன்றாக உருகி கப்பல்கள் செல்லும் நிலை வந்து விடும்.

இங்கே மட்டுமே வாழும், குழந்தைகளுக்கும் பெரியோர்க்கும் பிடித்த அழகான பனி கரடி தன இறுதி நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறது. பனி உருகுவதால் இவற்றின் உணவு வாழ்க்கை முறைக்கு பங்கம் வந்து விட்டது.

மனிதன் தன செயல்கலால் அழித்து வரும் மிருகங்களில் லிஸ்டில் முதல் இது – பனி கரடி

சர்வைவல் விஷயத்தில் துருவக்கரடிகளுக்கு முக்கிய உணவாக இருப்பது சீல் விலங்குகள்தாம். துருவக்கரடிகள் அருமையான மோப்பத்திறன் கொண்டவை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீல்களையும் மோப்பத் திறனால் அறியக்கூடியவை.

ஆனால் ஒரு சீலை அவ்வளவு எளிதாகப் பிடித்துவிட முடியாது. அதற்கும் துருவக்கரடிகள் போராடியாக வேண்டும். சீல்களுக்கு இரண்டு முரட்டுப் பற்கள் இருக்கின்றன. அவை அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதே அந்தப் பற்களை வைத்துத்தான். இதனால் துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் 80 சதவிகிதம் தோல்வியையே சந்திக்கின்றன. 20 சதவிகிதம்தான் வெற்றி பெறுகின்றன.

சர்வைவல் வேட்டை

துருவக்கரடிகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவை கறுப்பு நிறம் கொண்டவை. அதன் தோலில் உள்ள முடிகள் மட்டுமே வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. துருவக்கரடியின் தோலுக்கு அடியில் 10 சென்டிமீட்டர் அடர்த்தியில் கொழுப்புத்திரை இருக்கும். அதனால்தான் குளிரிலும்கூட பனிக்கரடி இயல்பாக இருக்க முடிகிறது. அவை அதன் உடலை சூடாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. -20 டிகிரில் கூட அவை இருந்துவிடுகின்றன. ஆனால் 20 டிகிரி செல்சியஸில் அவற்றால் தொடர்ந்து உயிர் வாழவே முடியாது. அவற்றின் படைப்பு அப்படி.

தரையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. கடலில் மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியது. விலங்குகளில் இடைவேளையே இல்லாமல் நாள் முழுக்க நீந்தும் ஆற்றல் கொண்டவை. ஒரு வகையில் இவை கடல் வாழ் உயிரினம் கூட. இனப்பெருக்கக் காலங்களில் துணையுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், துருவக்கரடிகள் பொதுவாக தனியாக வாழும் விலங்குகள். எப்போதாவது பெரும் திமிங்கிலமோ, வால்ரஸ்களோ உண்ணக் கிடைக்கும் பொழுது, 20-30 கரடிகள் போல ஒரே இடத்தில் பார்க்கலாம்.

வேட்டையாடும்போது துருவக்கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக்கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கறுப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனி படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.

தாயுடன் குட்டிகள்

புதிதாய் பூமியைப் பார்த்த துருவக்கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவை மிக விரைவாகக் குண்டாக வேண்டும், அவை கொழுப்பு சத்துடன் இருந்தாக வேண்டும். இயற்கையிலேயே அவற்றின் தாய்ப்பால் மிகச் செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது. உறைந்த பனியிடங்கள்தாம் அதன் வாழ்விடம். பனி உருக ஆரம்பித்ததும் வேறு இடத்திற்குக் கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கிவிடும். வாழ்நாளில் ஐந்து முறை வரை குட்டிகள் பெற்றெடுக்கும் துருவக்கரடிகள் பெரும்பாலும் இரட்டைக் குட்டிகளையே பெற்றெடுக்கின்றன. குட்டிகள் நீந்துவதில் தொடங்கி வேட்டையாடுவது வரை அனைத்தையும் தாயிடமே கற்றுக் கொள்ளும்.

துருவக்கரடிகளின் சர்வைவலுக்கு முக்கிய உணவாகப் பார்க்கப்படுகிற சீல்களின் நிலையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்குச் சிறப்பாக இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை. சீல்கள் உணவாகக் கிடைக்காத சமயத்தில் துருவக்கரடிகளின் அடுத்த சாய்ஸ் குட்டி துருவக்கரடிகள். சில மிருகங்களைப் போல, துருவக்கரடிகளும் சர்வைவலுக்காக தன் இனத்தையே உண்ணும் விலங்கு தான்.  2011-ம் ஆண்டு புகைப்படக்காரர்  ஜென்னி ரோஸ்  அதிர்ச்சி தரும் சில படங்களை வெளியிட்டார். அதில் துருவக்கரடி இன்னொரு துருவக்கரடிக்குட்டியைக் கொன்று உணவாக உட்கொள்ளும் காட்சி பதிவாகி இருந்தது.

துருவக்கரடி

ஜென்னி ரோஸ்ஸின் புகைப்படம்

காலநிலை மாற்றத்தையும் துருவக்கரடிகளின் கடைசிக் காலத்தையும் இதைத்தவிர வேறு எந்த முறையிலும் சொல்லிவிட முடியாது. உடல் மாறி, உருவம் மாறி, இடம் மாறி, வாழ்க்கை மாறி என எல்லாமே மாறிப்போய் கடைசியில் மறைந்தே போகிற கரடிகள் அழிவில் இருக்கிற இன்னொரு முரண், பனிக்கரடிகள் வாழும் ஆர்டிக் பிரதேசத்தில் அதை இரையாகக் கொள்ளும் விலங்குகள் என்று எதுவுமே இல்லை.

சர்வைவலில் துருவக்கரடி அளவிற்குச் சவால்களை எதிர்கொள்கிற வேறு எந்த விலங்கினமும் விலங்குகள் சாம்ராஜ்யத்தில் இதுவரையில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் துருவக்கரடி என்று சொல்லக் கூடிய பனிக்கரடிகள் தங்களுடைய இறுதி நாள்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

2050-ம் ஆண்டுக்குள் இந்த இனம் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். எந்த ஓர் உயிரினத்தின் கடைசி ஆசையும் வாழவேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால், அப்படியெல்லாம் வாழ்ந்துவிட்டுப் போக மனிதன் வாய்ப்பு கொடுப்பதில்லை.

மனிதன் அல்லாத எந்த ஓர் உயிரினமும் கால மாற்றத்தால் சாகும்போதும் அதற்கு நாம்தான் காரணம் என்கிற குறைந்தபட்ச குற்ற உணர்வாவது மனித இனத்திற்கு வந்தாக வேண்டும். 

மேலும் அறிய:

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *