பரிசோதனை முயற்சியாக வால்வெள்ளரி சாகுபடி!

பென்னாகரம் அருகே முதல்முறையாக வால்வெள்ளரி சாகுபடி செய்யும் பணியில் விவசாயி ஆர்வம் காட்டி வருகிறார்.

வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த வால்வெள்ளரியும் ஒரு கொடிவகைதான். தண்ணீர் சத்து மிக்கதும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியதுமான இந்தக் காய்த்துண்டுகளை சிறிது உப்புச் சேர்த்து பச்சையாகவே உண்பர்.

வால்போல மெல்லியதாக, நீண்ட உருவமைப்புக்கொண்டு, வெள்ளரிக்காய்ச் சுவையுடையதாய், அதே இனத்தைச் சேர்ந்தக் காயானதால் வால்வெள்ளரி எனப்படுகிறது.

சமையலிலும் கூட்டு, கறி, துவையல், தயிர்ப்பச்சடி, சாம்பார் தான் ஆகிய பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது. வால் வெள்ளரிக்காய்கள் கர்நாடகாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் திண்டிவனம் பகுதியிலும் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் பரிசோதனை முயற்சியாக தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் விவசாயி ஒருவர் 10 சென்ட் நிலத்தில் வால்வெள்ளரியை பயிரிட்டுள்ளார்.

விவசாயி கூறுகையில், வால்வெள்ளரி கர்நாடாவில் பெங்களூரு, மைசூரிலும், தமிழகத்தில், கடலூர், திண்டிவனம் பகுதிகளிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

இந்த வெள்ளரி மிகவும் சுவையாக இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து வருகிறேன். பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டியில் எனக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனையாளரிடம் இருந்து 10 கிராம் வால்வெள்ளரி விதையை ரூ.400க்கு வரவழைத்து சோதனை முறையில் 10 சென்ட் நிலத்தில் மட்டும் ஜூன் மாதம் நடவு செய்தேன். நன்கு வளர்ந்த வால்வெள்ளரி பயிர் 40 நாளில் அறுவடைக்கு தயாரானது.

ஒரு நாள் விட்டு ஒருநாள் வீதம் அறுவடை செய்கிறேன். ஒரு அறுவடைக்கு 30 கிலோ வால்வெள்ளரி அறுவடை செய்து தர்மபுரி நகரில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்கிறேன்.

தர்மபுரி மண்ணில் வால்வெள்ளரி பயிர் நன்றாக விளைந்துள்ளது. 90 நாள் பயிரான வால்வெள்ளரியை 30 முறை அறுவடை செய்ய முடியும். அடுத்த சாகுபடியில் கூடுதல் பரப்பில் பயிர் செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *