உலகக் காய்கறி சாகுபடி பரப்பளவில் வெள்ளரி சாகுபடி 4 ஆவது இடத்தை வகிக்கிறது. மருத்துவப் பயன் கொண்ட வெள்ளரி சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வெள்ளரி பண்டைக்காலம் முதல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தியாவில் இருந்து கிரேக்கர்கள், ரோமானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கு பரவிய வெள்ளரி, உலகம் முழுவதும் பரவி உலகக் காய்கறி சாகுபடி பரப்பளவில் 4 ஆவது இடத்தை வகிக்கிறது. வெள்ளரி உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுவதற்கு காரணம் அதன் மருத்துவக் குணங்களாகும்.
மருத்துவப் பயன்கள்:
- 95 சதவீத நீர் சத்துடன் சாதாரண நீரை விட சத்து மிகுந்த நீரைக் கொண்டிருப்பதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
- வெள்ளரியில் உள்ள வைட்டமின்களும், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
- லேரிசிரிசினால். பினோரெசினால், சீகோஐசோசிரிசினால் என்ற மூன்று லிக்கன்கள் பலவகையான புற்றுநோய்களைத் தடுக்கின்றன.
- வெள்ளரிச் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியன ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.
- வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றைக் குணமாக்கி சீரணத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலைப் போக்கும்.
- வெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- இதில் உள்ள சிலிகான், மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
- இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கி (ஹார்மோன்) வெள்ளரியில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி இனியது.
- இதில் ஸ்டிரால்கள் என்ற கூட்டுப்பொருள்கள் கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- சிலிக்கானும், கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் வீக்கம், கருவளையங்களைப் போக்கவும், சிறு நீரகக் கற்களைக் கரைக்கவும் வெள்ளரி உதவுகிறது. கொழுப்பில்லாத, கலோரி குறைவான உணவாதலால், எடையைக் குறைக்க இது மிகவும் ஏற்ற உணவு.
சாகுபடி முறைகள்:
- கோ 1, ஜப்பானிஸ் லாங் கிரீன், ஸ்டெரெய்ட் எய்ட், பாயிண்ட் செட்டி ரகங்கள் பயிரிடலாம்.
- நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச்சத்து நிறைந்த மணற்சாரி வண்டல் மண் மிகவும் இதற்கு ஏற்றது.
- கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கலாம்.
- ஜூன் மாதமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களும் விதைப்பதற்கு ஏற்ற பருவம்.
விதைப்பு:
- நிலத்தை நான்கு முறை நன்கு உழவேண்டும்.
- 5 அடி இடைவெளியில் நீளமான கால்வாய்கள் அமைக்க வேண்டும்.
- ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
- ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற ரசாயன உயிர்ப் பூசணக் கொல்லி மருந்தையோ அல்லது 2 கிராம் கார்பண்டசிம் என்ற ரசாயனப் பூசணக் கொல்லி மருந்தையோ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- கால்வாயின் பக்கவாட்டில் 2 அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
- பின் குத்துக்கு 2 செடிகள் இருக்குமாறு களைத்து விட வேண்டும்.
- விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்:
- ஏக்கருக்கு 16 மெட்ரிக் டன் தொழு உரத்தை அடியுரமாக இட வேண்டும்.
- பின் விதைத்த 30 தினங்களில் ஏக்கருக்கு 14 கிலோ தழைச்சத்து தரவல்ல 30 கிலோ யூரியாவை மேல் உரமாக இடவெண்டும்.
- 2 அல்லது 3 முறை களைக் கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு:
- பழ ஈ யினால் பாதிக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழித்து விட வேண்டும்.
- பழ ஈக்களின் எண்ணிக்கை வெப்பமான நாள்களில் குறைவாகவும், மழை பெய்யும் பருவத்தில் அதிகமாகவும் இருக்கும்.
- ஆகவே மழைக் காலங்களில் காய்ப் பருவம் வராத நிலையில் விதைப்பு தேதியை நிர்ணயித்து விதைக்க வேண்டும்.
- நன்கு உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிப்பதன்மூலம் பழ ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.
- சாம்பல் நோய் தாக்குவதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு அரை கிராம் டினோகரப் அல்லது கார்பண்டசிம் கலந்து தெளிக்கலாம்.
- வெள்ளரி பயிருக்கு நச்சாகிப் பயிருக்கு தீங்கு தரக்கூடிய லிண்டென் 1.3 சதவீத தூள், தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
- 80 முதல் 90 நாள்களில் ஏக்கருக்கு 4,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
- ஆகவே வெள்ளரி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் உரிய பருவங்களில் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக மகசூலும், உன்னத லாபமும் தருவதுடன், சமூகத்திற்கும், மருத்துவப் பயன்மிக்க வெள்ளரியை அதிக உளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்