25 சென்ட் நிலத்தில் 2 டன் வெள்ளரி சாதனை

மன்னார்குடி அருகே திருக்கொல்லி காட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தியாகராஜன் (60). இவருக்கு திருக்கொல்லிகாட்டில் 45 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல் பயிரிட்டு வருகிறார்.

இந்நிலையில் 25 சென்ட் நிலத்தில் வெள்ளரி சாகுபடி செய்து ஒரே மாதத்தில் 2 டன் வெள்ளரி உற்பத்தி செய்துள்ளார். களிமண் பூமியாக உள்ள கோட்டூர் ஒன்றிய பகுதியில் எப்படி இந்த வெள்ளரி சாகுபடி சாத்தியமானது என்று தியாகராஜனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

இந்த பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையை மாற்றியமைத்தால் மலைத்தோட்ட பயிர்கள் உட்பட ஏனைய பயிர்கள் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு வருமா என்று இணையதள தேடல் வழியாக ஆராய்ந்தபோது ஒரு வழி கிடைத்தது. அது தான் பாலிஹவுஸ் (பசுமை குடில்). இந்த குடிலை அமைத்தால் பல்வேறு பணப்பயிர், தோட்டக்கலை பயிர்களுக்குரிய சீதோஷ்ண நிலையை செயற்கையாக உருவாக்க முடியும் என்பது தெரிந்தது.
இதைதொடர்ந்து 25 சென்ட் விவசாய நிலத்தில் பசுமைகுடிலை அமைத்தோம். அதில் சொட்டுநீர் பாசனம் அமைப்பு ஏற்படுத்தினேன். இதற்கு மொத்தமாக ரூ.9 லட்சம் செலவானது. அதில் 50 சதவீதத்தை மானியமாக தோட்டக்கலைத்துறை தந்தது. அதில் நான் வெள்ளரியை தேர்வு செய்து சாகுபடி செய்துள்ளேன்.

கொடுமுடிக்கு சென்று கயிறு பித்து அடைத்த பேக்குகளை வாங்கி வந்தேன். அதில் ஒரு பேக்குக்கு 3 வீதம் விதைகளை போட்டு வளர்த்தெடுக்கும் வகையிலும் சொட்டுநீர் குழாய்கள் அந்த பேக்கில் செல்கிற வகையில் வடிவமைத்துள்ளனர். அதில் நான் 25 சென்ட் நிலத்துக்கு 1,250 பேக்குகளை வாங்கினேன். ஒரு பேக்கின் விலை ரூ.100. அதில் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்துவிட முடியும். ஓசூரில் வெள்ளரி ஹைபிரீடு விதைகள் வாங்கினேன். ஒரு விதையின் விலை ரூ.6. பின்னர் கயிறு பித்து அடைத்த பேக்குகளில் 3,750 விதைகளை விதைத்தேன். இதை பராமரிக்க 2 பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக நானும் இருந்தேன்.

விதைத்த 35வது நாளிலிருந்து வெள்ளரி விளைச்சல் துவங்கிவிடும். ஒரு நாள் விட்டு ஒருநாள் வெள்ளரியை பறிக்க வேண்டும். அதிலிருந்து 120 நாள் வரை ஒவ்வொரு செடியும் பலன் கொடுக்கும். அதன்பிறகு வேறு விதையை விட வேண்டும். நாள் ஒன்றுக்கு 30 கிலோ என துவங்கிய உற்பத்தி 280 கிலோவாக அதிகரித்துள்ளது. இன்னும் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் மழை பெய்தபோது விளைச்சல் குறைந்திருந்தது. இதுவரை நான்  அறுவடை செய்து வருகிற வெள்ளரியை கணக்கிட்டால் மழை காரணமாக 15 நாட்கள் விளைச்சல் குறைந்தபோதிலும் 2 டன் உற்பத்தியாகியுள்ளது. எதிர்காலத்தில் 3 மாதத்தில் 20 டன் உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ ரூ.30 முதல் அதன் தேவைக்கேற்ப ரூ.50 வரை விற்பனை செய்யலாம். நான் சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து வருகிறேன் என்றார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *