ஆடி காருக்கு 6 சதவீத வட்டி ? டிராக்டருக்கு 16 சதவீத வட்டி?

டி காருக்கு 6 சதவீத  வட்டி ? டிராக்டருக்கு 16  சதவீத வட்டி?

யாருக்கு லாபம் தருகிறது பயிர் கடன்…

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்  அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். அதில் 10 லட்சம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 8 லட்சம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட இந்தக் கடன் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்றால் அதற்கான பதிலை யாராலும் சொல்ல முடியாது. திரைப்படங்களில் வருவது போன்று அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் தொடங்கி கிராமத்து தலையாரி, வங்கி அதிகாரிகளை வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் .

தவணை தவறிவிட்டால் தற்கொலை வரை  கொண்டு விடுவார்கள் …

பயிர்க்கடனை அவ்வளவு எளிதாக விவசாயிகள் பெற்றுவிட முடியாது. இது தொடர்பாக இயற்கை விவசாயியான சரோஜாவிடம் பேசினோம் “மத்தியக் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க பலமுறை  முயற்சித்துள்ளேன்.ஆனால், இதுவரை வாங்கியதில்லை. அதற்கு நிறைய  செல்வாக்கு  இருக்கவேண்டும். அரசியல்வாதியாகவோ அல்லது வங்கி அதிகாரிகளுக்கு உறவினராகவோ இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் மீறி வங்கிக்குச் சென்று  ஆவணங்களைக் கொடுத்தாலும் எதாவது ஒரு குறையைச் சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள். எனவே, வீணாக அலைந்து கொண்டிருக்க வேண்டாம் என்று  பொதுத்துறை வங்கி ஒன்றில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கித்தான் பயிர் செய்து வருகிறேன்.

என்னுடைய உறவினர் ஒருவர் டிராக்டருக்கு கடன் வாங்கி உள்ளார். டிராக்டர் கடனுக்கு 16 சதவிகித வட்டி போடுகிறார்கள். ஆனால், ஆடி காருக்கு  6 சதவிகித வட்டி போடுகிறார்கள். ஒரு விவசாயிடம் கடனை செலுத்தச் சொல்கிற முறையும், தொழிலதிபரிடம்  கடனைத் திருப்பிச்  செலுத்தச் சொல்கிற முறையும்  நாடு அறிந்த விஷயம். ஒரு விவசாயி  கடனை வாங்கிவிட்டு அவனால் வீட்டில் நிம்மதியாக இருக்க  முடியாது. கடன் தவணை தவறி விட்டால் தற்கொலை வரை கொண்டு சென்று விடுவார்கள் அதிகாரிகள். ஆனால், இதே தொழிலதிபர்கள்  கடனை வாங்கி விட்டு நாடு நாடாகச் சுற்றலாம்.இதுதான் நமது இந்திய அரசியலமைப்பு சாமான்யனுக்கு வகுத்துள்ள சம உரிமை” என்றார்.

எத்தனை பேருக்கு பயிர்கடன் கொடுக்கப்பட்டது? 

மற்றொரு விவசாயியான விமல நாதனோ   “ஆண்டுதோறும்  பட்ஜெட்டில் பயிர்க்கடன் அளவை அதிகரித்துக் கொண்டு போகிறார்கள். அப்படி அறிவித்துள்ள தொகை விசாயிகளை முழுமையாக சேர்ந்துள்ளதா என்ற வெளிப்படையான தகவலை எந்த அரசாவது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளதா? திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா. அது கடைகோடி மக்களுக்குச் சென்று சேர்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டாமா?  கடனைக் கட்டவில்லை என்று ஒரு விவசாயியின் இயலாமையை நோட்டீஸ் அடித்து ஒட்டும் அரசாங்கம் ஏன் ஒரு விவசாயிக்கு போய்  சேர வேண்டிய கடனைப் பற்றி  எதுவும் பேசுவதில்லை. இதைவிட  ஒரு விவசாயியை மத்திய-மாநில அரசுகள் வெளிப்படையாக ஏமாற்ற  முடியாது” என்றார்.

போலி விவசாயிகளுக்கு கடனா ?

விமலநாதன் கருத்தை  உறுதிப்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் பெயர் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நம்மிடம் கூறிய தகவல்… “ஆரம்ப காலத்தில் எந்த விவசாயி கடன் வாங்குகிறாரோ அந்த விவசாயிக்கு மட்டுமே மீண்டும் கடன் வழங்கப்பட்டு வந்தது. புதிதாக ஒரு விவசாயி கடன் வாங்கவே முடியாது. அப்படியே வாங்க முயன்றாலும், வங்கி அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்காமல் வாங்க முடியாது.

சில நேரங்களில் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் அடையாளத்தை வைத்து, வேறு சிலர் பயிர் கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.பின்னர் அவர்களே  அந்தக் கடனைக் கட்டுவார்கள். இப்படியும் சில அதிகாரிகள் இருக்கின்றார்கள். ஊரில் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே இந்தக் கடன் போய் சேரும். 5 ஏக்கர் அல்லது  3 ஏக்கர் வைத்துள்ள குறு விவசாயிகளால் கடன் வாங்க முடிவதில்லை. விவசாயிகள், கடன் கேட்டு சண்டை போட்டாலும்  ஒன்றியத்துக்கு இவ்வளவு கடன் தொகைதான் வந்துள்ளது. முழுவதுமாகக் கொடுத்தாகி விட்டது என்று முடித்துவிடுவார்கள். சில தகவல்கள் மட்டுமே உங்களிடம் சொல்லி உள்ளேன். இன்னும் அதிகமான முறைகேடுகள் உள்ளது” என்றார்.

இந்தியாவின் முதுகெலும்பு  விவசாயம்.அந்த முதுகெலும்பை  சில அதிகாரிகள் , அரசியல்வாதிகள் செல்லாக அரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எப்படி அறுவை சிகிச்சை செய்யப் போகிறோம்  என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *