இதிலுமா ஊழல்?

அந்த காலத்தில் பாட்டிமார்கள் ஒரு பிரயோகத்தை பயன் படுத்துவார்கள். அநியாயம் செய்பவர்களை  “கட்டையில போக”, “நாசமா போக” என்று சாபம் கொடுப்பார்கள்.

எத்தனையோ கஷ்டங்களுடன்  நமக்கு உணவு கொடுத்து வரும் நம் உழவர்களின் வயற்றில் அடித்து விட்டு அவர்கள் பேரில் பணம் செய்யும் இந்த UPA அரசு ஊழல்கள் பற்றி என்ன கூறுவது – இதோ தினமணியில் வந்துள்ள ஒரு கட்டுரை–

இதிலுமா ஊழல்?

2008-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ நான்கு கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டது. அப்படி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 90,576 கணக்குகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில் 20,216 விவசாயக் கணக்குகள், இந்த நிவாரணம் மற்றும் கடன் ரத்துக்கு தகுதியில்லாதவை என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணம் திட்டத்தில் பயனடைந்த 22 சதவீதம் பேர் “தகுதியில்லாத விவசாயிகள்’ என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அலுவலகம் அறிக்கை அளித்திருக்கிறது.

உண்மையில் இந்த திட்டத்தால் பயனடைந்த 3.69 லட்சம் குறு, சிறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் “வசதிபடைத்த’ விவசாயிகளின் கடன் கணக்குகளை முறையாகப் பரிசீலித்தால், ரூ. 52,000 கோடியில், பாதிகூட தகுதியுடைய விவசாயிக்குப் போய்ச்சேரவில்லை என்பது உறுதிப்பட்டிருக்கும்.

ஆய்வு செய்யப்பட்ட இந்தக் கணக்குகளில் தகுதியுடைய விவசாயிகள் 13 சதவீதம் பேருக்குக் கடன் வழங்க வங்கிகள் மறுத்துள்ளன என்பது அதைவிட வேதனை. இத்தகைய ஊழலுக்கு முழுமுதற் காரணம் – வங்கிகள். கடன் வழங்கும்போது, விவசாயிகளின் பெயர், அவர் கடன் பெற்ற ஆண்டில் எந்த “சர்வே’ எண்ணில் உள்ள நிலத்தில் என்ன பயிர் செய்திருந்தார் என எல்லா விவரங்களையும் திரட்டி, கடன் நிவாரணம் பெற்ற தொகை மற்றும் கடன் தள்ளுபடி அல்லது நிவாரணம் அளிக்கப்பட்ட விவரம் ஆகியவற்றை இணையதளத்திலும் அந்தந்தக் கிளையின் வாசலிலும் வெளியிட்டிருந்தால், குறைந்தபட்சம் ஒரு சில விவசாயிகளாவது இதைப் படித்து, இதில் “தகுதியற்ற விவசாயிகள்’ இருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பர்.

ஆனால், வங்கிகள் இந்த வேளாண் கடன் விவகாரத்தில் மூடுமந்திரமாகவே செயல்படுவதால்தான் இந்த ஊழல் தொடக்க நிலையிலேயே அம்பலப்படுத்த வழியில்லாமல் போகிறது. வங்கி அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்குமோ என்னவோ யார் கண்டது?

இரண்டாவது காரணம் – மாவட்ட ஆட்சியர்களின் அக்கறையின்மை. மாவட்டத்தில் உள்ள எல்லா வங்கிகளையும் அழைத்து, கூட்டம் நடத்தி, பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்குவதற்காக ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிப்பவர் ஆட்சியர்தான். இந்த இலக்கு எட்டப்பட்டதா என்பதை ஆட்சியருக்கு உதவியாக இருந்து பார்த்துக்கொள்ள, வங்கிகளில் ஏதேனும் ஒரு வங்கி, முன்னோடி வங்கியாக (லீடு பாங்க்) இருந்து செயல்படுவதும் வழக்கமாக இருக்கிறது. இலக்கு நிர்ணயிப்பதுடன் தமது கடமை முடிந்துவிட்டது என்று மாவட்ட ஆட்சியர்கள் ஒதுங்கிக் கொள்வதும், இந்த ஊழலுக்கு ஒரு காரணம். இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், வேளாண் கடன் வழங்குவதில் எந்த வங்கிக்கும் ஆர்வம் கிடையாது என்பதே கசப்பான உண்மை.

வங்கி மேலாளர்கள், கடனைத் திரும்பச் செலுத்தக்கூடிய பணக்கார அல்லது “விவசாயம் செய்யாத’ விவசாயிக்குக் கடன்களை அளித்து, இலக்குகளை எட்டுகிறார்கள். டிராக்டர் வாங்குதல், கதிரடிக்கும் இயந்திரம் வாங்குதல், உரம் வாங்குதல் என்று பல பெயர்களில், திரும்பச் செலுத்தக்கூடிய விவசாயிகள் என்று கருதுவோருக்கு மட்டுமே வள்ளல்போல அள்ளி வழங்குகின்றன இந்த வங்கிகள்.

இன்னும் சில வங்கி மேலாளர்கள் “பண்ணைசாரா வேளாண்மைக் கடன்’ என்ற பெயரில் தொழில் தொடங்கவும் கடன் தருகிறார்கள். விவசாயிகள் தங்க நகைக் கடன் பெற்றால் அதற்கு வட்டி மிகமிகக் குறைவு. இவ்வாறு குறைந்த வட்டியில் “கோல்டு லோன்’ பெறுவோரில் 75 சதவீதம்பேர் விவசாயிகள் அல்ல. இவர்கள் வங்கி ஊழியர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது இதர வாடிக்கையாளர்களாகவே இருப்பார்கள். சில கிளைகளில், தங்க நகையின்பேரில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதை வெளியே கந்துவட்டிக்கு விடும் அற்புதங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

சில விவசாயிகள் தங்களிடம் “சிட்டா’ புத்தகம் வைத்திருப்பார்கள். ஆனால், அங்கே குத்தகைக்கு வியர்வை சிந்தும் விவசாயி வேறு யாராகவோ இருப்பார். ஆயினும் அவர் கடன் பெறுவார். கடன் தள்ளுபடிக்குத் தகுதி பெறுவார். வட்டித் தள்ளுபடி, அசல் தள்ளுபடி, குறுகியகாலக் கடன் நீண்டகாலக் கடனாக மாறுதல் என எல்லா சலுகைகளும் இவருக்குக் கிடைக்கும். வங்கி அதிகாரிகளுக்குத் தெரியாமலா இது நடக்கிறது?

அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு தகவல்: தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண் கடன் தொகையில், 7 சதவீதத் தொகை சென்னையில் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் எந்த விவசாயி, உழுது பயிர் செய்கிறான் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நியாயமான இந்தக் கேள்வியை சங்கக் கூட்டத்தில் எழுப்பி என்ன பயன்? எந்தெந்த வங்கிகள் இத்தகைய கடன்களைக் கொடுத்தன, இதனால் பயனடைந்த விவசாயிகள் யார் என்று பட்டியலைப் பெற்று அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா? வங்கி ஊழியர் சங்கம் அதைச் செய்யாவிட்டால் வேறு யாரால் இதைச் செய்ய முடியும்?

ஒருபுறம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது நடந்துகொண்டே இருக்கிறது. இன்னொருபுறம் இதைக் காரணம் காட்டி கடன் தள்ளுபடி, கடன் நிவாரணத்தை அரசு அறிவிக்கிறது. அப்படி அறிவிக்கப்படும் தள்ளுபடி மற்றும் நிவாரணம் தகுதியான விவசாயிகளுக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் முறையாகப் போய்ச் சேருவதில்லை என்றால், இந்த அறிவிப்புகளால் என்னதான் பயன்?

மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் ஒரு சிலரால் சட்டபூர்வமாகக் களவாடப்படுகிறது என்பதையும், சட்டங்களும் விதிகளும் பண பலமும், அதிகார பலமும், அடியாள் பலமும் உள்ளவர்களின் தவறுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்பதையும்தான் வெளியாகி இருக்கும் இந்த ஊழல் உறுதிப்படுத்துகிறது. விவசாயிகளின் வயிற்றிலும் அடிக்கிறார்களே, பாவிகள்!

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *