இன்ஜினீயர் விவசாயி ஆன கதை!

யற்கை விவசாயத்தின் மீதான மோகம் இன்று அதிக அளவில் பெருகி விட்டது. பல இளைஞர்களும், ஐ.டி துறையில் பணிபுரிபவர்களும்  வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தியாகராஜன் என்ற இன்ஜினீயரிங் பட்டதாரி இளைஞரும் தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் பக்கம்  திரும்பியிருக்கிறார். இயற்கை விவசாயம் செய்வதோடு நிற்கவில்லை. தன் உடன் பணி செய்யும் நண்பர்கள், உடன் படித்த நண்பர்களைக் கொண்டு இயற்கை அங்காடி அமைத்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள பெரணமநல்லூரில் இருக்கிறது, இயற்கை விவசாயி தியாகராஜனின் தோட்டம். காலை வேளையில் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

இயற்கை அங்காடி

“என் அப்பா ஹோமியோபதி மருத்துவர். மருத்துவரா இருந்தாலும், அவருக்கும் விவசாயம் செய்யணும் ஆசை இருந்துச்சு. அதனால மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்துக்கிட்டு இருந்தார். அவர் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி மட்டுமே விவசாயம் செய்தார். எனக்கு படிக்குறப்போ விவசாயத்துல ஆர்வம் இல்ல. என்னோட ஆர்வம் முழுக்க இன்ஜினீயரிங் படிப்புலதான் இருந்துச்சு. காஞ்சிபுரத்துல இருக்குற தனியார் காலேஜ்ல இன்ஜினீயரிங் முடிச்சேன். படிப்பு முடிஞ்ச உடனே சென்னையில தனியார் கம்பெனியில வேலை கிடைச்சது. அப்போ நான் சாப்புடுற சாப்பாடு, குடிக்குற தண்ணி, காத்து முழுக்க விஷமா தெரிஞ்சது. அப்போதான் எனக்கு தேவையான உணவை நானே உற்பத்தி செய்யணும்னு நினைச்சேன். அதனால 2013-ம் வருஷம் வேலையை விட்டுட்டு விவசாயம் செய்யணும்னு ஊருக்கு வந்துட்டேன். அப்போ நம்மாழ்வார் அய்யாகிட்ட வானகத்துல இயற்கை விவசாயத்தைப் பத்தி பயிற்சி எடுத்துக்கிட்டேன். நம்மாழ்வார் அய்யாவோட தற்சார்பு வாழ்க்கை பத்தின புரிதலும், இயற்கை விவசாய தெளிவும் எனக்கு முழுசா தெரிஞ்சது. அதுக்குப் பின்னால எங்க அப்பா நிலத்துலயே நான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். இயற்கை விவசாயம் செய்யுறேன்னு என் வீட்டுல சொன்னப்போ யாரும் தடை போடலை. கிணத்துப்பாசனத்தை வச்சுக்கிட்டுதான் விவசாயத்தை ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

“என்கூடவே வேலையை விட்டுட்டு நண்பர் சிவக்குமாரும் வந்தார். ரெண்டு பேரும் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். முதல்முதலா 70 சென்ட்ல தக்காளி, கத்தரி, முள்ளங்கி, கீரைனு விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம்.

ஆரம்பத்துல விற்பனை செய்யுறப்போ இயற்கை விவசாயப் பொருளுக்கு ஏத்த விலை கிடைக்கல. அதனால நாங்களே எங்க பொருட்களை விற்பனை செய்யணும்னு முடிவு செஞ்சோம். 2014-ம் வருஷம் செய்யாறு பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இயற்கை அங்காடி ஆரம்பிச்சோம். அதுமூலமா எங்களோட காய்கறிகளை நாங்களே விற்பனை செஞ்சோம். அப்புறமா என் நண்பர் சிவக்குமார் சொந்த ஊருக்குப் போயிட்டார்.

நான் ஒருத்தனா காய்கறி விவசாயம் செய்யுறப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்போதான் பாரம்பர்ய நெல் விதைக்கலாம்னு யோசனை தோணிச்சு. அதனால மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா நெல் வகைகளையும், நிலக்கடலை, எள்னு பயறு வகைகளையும் விதைக்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச அரிசியை என்னோட இயற்கை அங்காடி மூலமா விற்பனை செய்வேன். நிலக்கடலை மற்றும் எள்ளை எண்ணெயா மாத்தியும் அங்காடி மூலமா கொடுத்துடுவேன். சில நண்பர்கள் கொரியர் மூலமாவும் கேட்பாங்க, அவங்களுக்கும் கொடுத்துடுவேன்.

இயற்கை அங்காடி

என்னோட இயற்கை அங்காடிய என் உடன் படிச்ச இரண்டு நண்பர்களோட சேர்ந்து ஆரம்பிச்சேன். நான் உற்பத்தி செய்யுற பொருட்கள் தவிர, மற்ற இயற்கை விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களையும் வாங்கி விற்பனை செய்துக்கிட்டு வர்றேன்.

விற்பனை பொருட்கள்ல எனக்கு 5 சதவிகிதம், விவசாயிகளுக்கு 95 சதவிகிதம்னு பிரிச்சுக்குவோம். எண்ணை பயிர்களா இருந்தா (எண்ணெய் எடுக்குற செலவு உட்பட) எனக்கு 10 சதவிகிதமும், விவசாயிகளுக்கு 90 சதவிகிதமும் கொடுப்பேன். இந்த அங்காடி மூலமா பல இயற்கை விவசாயிகள் பலன் அடைஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இதுபோக கடையில மரச்செக்கு எண்ணெய், சிறுதானிய உணவு பொருட்கள், மண்பானை, இயற்கை காய்கறிகள்னு விற்பனை செய்யுறேன். ஒரு நாள்ல பாதி நேரம் தோட்டத்திலேயும், பாதிநேரம் இயற்கை அங்காடியிலயும் இருப்பேன். இப்போ நான் நம்மாழ்வார் அய்யா காட்டுன வழியில வாழ்ந்துக்கிட்டிருக்கேன்” என்றபடி விடைகொடுத்தார், தியாகராஜன்.

அப்போ முழுநேர இன்ஜினீயர்…இப்போ முழுநேர இயற்கை விவசாயி… வாழ்த்துக்கள் தியாகராஜன்!

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *