இரண்டாம் போக சாகுபடிக்கு ஏற்ற பயிர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடிக்கு உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயிர்களை தனிப் பயிர்களாகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் சி.கனகராசன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

வடகிழக்குப் பருவ மழையால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

எனவே நெல், சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், பருத்தி மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மேலும், குறைந்த வயது மற்றும் குறைந்த நீர்த் தேவையுடைய பயிர்களான உளுந்து, பாசி மற்றும் தட்டைப் பயிர்களை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்து குறைந்த நாள்களில் கூடுதல் வருமானம் பெறலாம்.

இரண்டாம் போக சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள்:

உளுந்து பயிரில் விபிஎன் 3, விபிஎன் 4, விபிஎன் 5, பாசிப் பயிரில் விபிஎன் 2, விபிஎன் 3, கோ-7, தட்டைப் பயிரில் விபிஎன் 2, போ-7 ரகங்களை பயிர் செய்யலாம். விதை நேர்த்தி செய்ய, பயறு வகை பயிர்களில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் (அல்லது) கார்பண்டாசீம் (அல்லது) குடோமோனாஸ் 10 கிராம் (அல்லது) டிரைக்கோடெர்மாவிரிடி 4 கிராம் கொண்ட விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து விதைத்தல் வேண்டும்.

உயிரியல் விதை நேர்த்தியான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபிசயம் சி.ஆர்.யு-7, 3 பாக்கெட் (600 கிராம்எக்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் (600 கிராம்எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம்எக்) கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம்எக்), 10 பாக்கெட் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள்(2000 கிராம்எக்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்எக்) உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

அவ்வாறு செய்தால், குறைந்த நாள்களில் உரிய ரகங்களை தேர்வு செய்து, தக்க பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கூடுதல் வருமானத்தை விவசாயிகள் ஈட்டலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இரண்டாம் போக சாகுபடிக்கு ஏற்ற பயிர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *