உணவுப்பொருட்களில் நச்சு கண்டறிய ஆய்வுக்கூடம்

வெளி மாநிலங்களிலிருந்து  (அதாவது தமிழ்நாட்டில் இருந்து )வரும் உணவு பொருட்களில், ‘நச்சு இருக்கிறதா’ என்று கண்டறிய, கேரள உணவு பாதுகாப்புத்துறையினர் அமைத்துள்ள தாற்காலிக ஆய்வுக்கூடம், வாளையார் மற்றும் மீனாட்சிபுரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது.

கேரளாவில், ஆகஸ்ட் 28ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெளி மாநிலங்களில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வருவது அதிகரித்துள்ளது. அவற்றில், ‘நச்சு கலந்திருக்கிறதா’ என்று ஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில உணவுப் பாதுகாப்புத்துறையினர், எல்லையில் அமைந்துள்ள வாளையார், மீனாட்சிபுரம் சோதனைச்சாவடிகளில், தற்காலிக ஆய்வு கூடங்களை அமைத்துள்ளனர்.

மீனாட்சிபுரம் வணிக வரி சோதனைச்சாவடியிலும், வாளையார் வணிக வரி சோதனைச்சாவடி அருகேயுள்ள வாடகை கட்டடத்திலும், தற்காலிக ஆய்வுக்கூடங்கள் நேற்று முன்தினம் முதல் செயல்பட துவங்கியுள்ளன. பால், பால் பொருட்கள், எண்ணெய் கொண்டு வந்த நான்கு வாகனங்களில் சோதனையிடப்பட்டது. அவற்றில் நச்சுத்தன்மை இல்லை என்பது தெரியவந்தது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான உணவு பொருட்கள் வருவதையொட்டி இந்த தற்காலிக ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

செப்.,1 வரை, இந்த ஆய்வு தொடரும். பால் பொருட்களை சோதனையிடும் பணியில், பால் பண்ணை மேம்பாட்டு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நச்சுத்தன்மை கண்டுபிடித்தால் உணவு பொருட்களை திருப்பி அனுப்புவது மட்டுமல்லாமல் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறி, பழ வகைகளில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை, சோதனை செய்வதற்காக, கோழிக்கோடு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தரவை வாபஸ் பெற வேண்டும்

இது குறித்து கேரள தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் பேச்சிமுத்து கூறுகையில்,

”உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் பேரில், சோதனை சாவடிகளில் காய்கறி வாகனங்களை தேவையில்லாத சோதனைக்கு உட்படுத்துகின்றனர். விவசாயிகள், நுகர்வோர் பாதிக்கப் படுவதை தவிர்க்கும் வகையில், சோதனை உத்தரவை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும்,” என்றார்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகத்தின் கருத்து:

காய்கறிகளில் நச்சு இல்லாமல் இருக்க வேண்டியது தான் நுகர்வோருக்கு தேவை. திரு பேச்சிமுத்து கூறுவது போல் இந்த சோதனைகளால் மக்களுக்கு நுகர்வோருக்கு எந்த பிரச்னையும் இல்லை. கேரளாவில் ஹொவ் ஓல்ட் ஆர் யு படமும் தமிழில் வந்த 36 வயதினிலே படம் மூலமும் மக்களுக்கு இந்த பிரச்னை பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஆகி இருக்கிறது. கேரளத்தின் இந்த கிடுக்கி பிடியால் தமிழ் நாட்டிலும் காய்கறிகளில் ரசாயன பூச்சி கொள்ளியை சகட்டு மேனிக்கு தெளிப்பது குறைந்தால் நல்லதே. ஒரே அடியாக நிறுத்த முடியாவிட்டாலும் குறைக்க ஆரம்பிக்கலாம். விவசாயிகளின் உடல் நலத்திற்கும் இது நல்லதே!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *