உயிர்வேலி பயிருக்கு அரண்!

நிலத்தை சுற்றி உயிர் வேலிகள் அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல, செலவு குறைந்ததும், நிரந்தரமானதும் கூட. இரும்பு கம்பிகள் வேலியை விட உயிர் வேலி நன்மைகள் பயப்பவை.

தற்சார்பு பொருளாதாரத்திற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும் உயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும் அமையும்.

மண் அரிப்பு, காற்று அரிப்பை தடுக்கும் சக்தி இவைக்கு உண்டு. இதனால் நம் நிலத்தில் உள்ளே நாம் பயிரிடும் பழ மரங்கள், தென்னை, வாழை போன்றவைகளை கீழே சாய விடாமல் காற்றின் வேகத்தை குறைத்து தடுக்கும் தடுப்பாக பயன்படுகிறது. கடற்கரை ஓரங்களில் காற்றினால் மண் வாரி இறைப்பது தடுக்கப்படுகிறது.

மண் மேடு உருவாவது தடுக்கப்படுகிறது. உயிர் வேலி மரங்கள் பரம்பை முள், கிளுவை முள், நாட்டுக் கருவேல், கள்ளிச்செடி, நொச்சி, பனைமரம், கொடிப்பூவரசு, கொடுக்காப்புளி, இலந்தை முள், சவுக்கு, காகிதப்பூ (போகன்வில்லா), கலாக்காய் மரம், சீகைக்காய் மரம் போன்ற உயிர் வேலி மரங்கள் பல்லுயிர்களின் பெருக்கமாகவும், அதற்கு தேவையான வாழ்விடமாகவும் அமையும். உயிர் வேலி நம் நிலத்தை சுற்றி அமைக்கும்போது பாம்பு, தேள், பூரான் போன்ற அஞ்சக்கூடிய உயிர் இனங்கள் அனைத்தும் நிலத்திற்குள் தங்காமல் வேலியில் தங்கி பாதுகாப்பு வளையமாக செயல்படும். இதனால் நிழல் உருவாகும்.

ஆந்தை, மயில்கள், குருவி, கரிச்சான் போன்ற பறவை இனங்கள் உயிர் வேலிகளில் கூடு கட்டி தங்கி சிறு சரணாலயமாகவும் செயல்பட வழி வகுக்கும்.

மழைக்காலத்திற்கு முன்னர் நிலத்தின் எல்லைப் பகுதிகள் முழுவதும் உயிர் வேலி வளர்வதற்கு சிறிது இடம் ஒதுக்கி (6-7 அடி) உயிர்வேலி அமைத்தால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு பயிர்களுக்கு மனிதர்கள், விலங்குளிடமிருந்து பாதுகாப்பான அரணாக அமைந்து விடும்.

ஆண்டிற்கு ஒருமுறை செடிகளை கவாத்து செய்து புதர் போல இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும். சில வகை உயிர் வேலிகள் விவசாயத்திற்கு கூடுதல் வருமானம் தரக்கூடிய வகையில் தேனீ வளர்ப்பு, கால்நடைக்கு தீவனமாக பயன்படுகின்றன.

தொடர்புக்கு 9443570289 .

எஸ். சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர்,
அருப்புக்கோட்டை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “உயிர்வேலி பயிருக்கு அரண்!

  1. சுபாஷ் says:

    உயிர்வேலி அமைக்கும் முறை பற்றி சொல்லுங்க அண்ண கொஞ்சம் உதவியா இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *