காவிரி பாசனப் பகுதிகளில் களமிறக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள்

100 நாள் வேலை திட்டத்தால் ஆள்கள் பற்றாக்குறை நிலவுவதால், காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி பணியில் வட மாநிலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், கடை மடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேருவதில் தாமதம் ஏற்பட்டதாலும், ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில்தான் விவசாயிகள் நாற்று விட்டனர். இந்த நிலையில், நாற்றுவிட்டு 30 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இப்போது நடவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாமதமாக நடவுப்பணி மேற்கொள்வதன் மூலம் பால் பிடிக்கத் தாமதம் ஏற்படும். இதன் மூலம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடை மழையில் நெல் பயிர் பாதிப்படைவதைத் தடுக்க முடியும்.


இந்த நிலையில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தால், சாகுபடிப் பணிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களை வைத்து நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், பில்லிக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கே.தங்கவேல் கூறியது: கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை சரியாகப் பெய்யாததால், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பலர், வேறு வேலை தேடி நகர்ப்புறங்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குச் சென்றதால், உழவு, நடவு உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் நெல் சாகுபடியில் அதிக மகசூலைத் தரும் திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒற்றை நடவைச் செய்ய முடியாமல், சொற்ப எண்ணிக்கையில் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்களை வைத்து விவசாயிகள் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம், பில்லிக்கல்பாளையம் பகுதிகளில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நடவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 10 பேர் வரை குழுவாக வேலை செய்யும் இந்தத் தொழிலாளர்கள் நாற்றினைப் பறித்து, நடவு செய்து கொடுக்க ஏக்கருக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை கூலியாகப் பெறுகின்றனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் தான் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுபோல் பவானிசாகர் அணை, அமராவதி அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், இந்தப் பாசனப் பகுதிகளிலும் நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. மேலும், கடந்த 10 நாள்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் நெல் சாகுபடி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆனால், நடவுப் பணிக்கு போதிய தொழிலாளர்கள் இல்லாத நிலையில், வேறு மாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு நடவுப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் வரும் ஜனவரி மாதம் வரை 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அல்லது 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை சாகுபடிப் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *