கிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்கு

எண்ணெய் ஆட்டுவதற்கு மோகனூர் விவசாயி பயன்படுத்தும் புதிய முறை, விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் மாடு பூட்டி செக்கிழுத்து எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்றுவந்தது. எண்ணெய் எடுப்பதற்கு இந்த முறைதான் பரவலாகப் பின்பற்றப்பட்டுவந்தது. எண்ணெய் வியாபாரிகள் கடைகளில் மட்டுமல்லாமல், வீடுகளுக்கும் கொண்டுவந்து எண்ணெய் விற்றுவந்தார்கள். இன்றைக்கு செக்குகள் குறைந்துவிட்டன. எண்ணெய் எடுக்கும் தொழில் பல்வேறு நவீன மாற்றங்களைக் கண்டுள்ளது. மாடுகளும் குறைந்துவிட்டதால், மாடு கட்டி எண்ணெய் எடுக்கும் தொழில் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள ராசிபாளையத்தைச் சேர்ந்த இளம் விவசாயி எம். வடிவேல், செக்கில் எண்ணெய் எடுக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்திவருகிறார். அவர் செய்துள்ள ஒரே மாற்றம், செக்கில் மாடுகளுக்கு பதிலாக சின்ன டிராக்டரை பூட்டியுள்ளதுதான். முற்றிலும் புதிய இந்த உத்தி, அப்பகுதியைக் கடந்து செல்லும் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பரம்பரைத் தொழில்

இது குறித்து விவசாயி எம். வடிவேல் பகிர்ந்துகொண்டது:

“விவசாயம்தான் எங்களோட முதன்மைத் தொழில். எனது தாத்தா காலம் முதல் எண்ணெய் ஆட்டும் தொழிலில் ஈடுபட்டுவருகிறோம். தாத்தாவுக்கு பின்னால் அப்பா முத்துசாமியும் இத்தொழிலைத் தொடர்ந்தார். அப்பா காலத்தில் பெரிய ஆலைகளில் இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. அதனால் செக்கில் எண்ணெய் ஆட்டும் தொழில் முடங்கும் சூழ்நிலை உருவானது.

அதனால் சில ஆண்டுகளாக எண்ணெய் தயாரிக்கும் தொழிலை நிறுத்தி வைத்திருந்தோம். மீண்டும் எண்ணெய் ஆட்டும் தொழிலில் ஈடுபடலாம் என, அப்பா ஆலோசனை கூறினார். அப்போது முன்னைக் காட்டிலும் நவீன உத்தியைப் பயன்படுத்தி, எண்ணெய் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

புதிய உத்தி

நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படும் சின்ன டிராக்டர் எங்களிடம் இருந்தது. மாடுகளுக்கு பதிலாக அந்த டிராக்டரை பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம். எனினும், வெறும் மண் தரையில் இயக்கினால் டயர் தேய்மானம் அதிகமாக இருந்தது. அதைக் குறைப்பதற்காக சிமெண்ட் தளம் அமைத்தோம். அதற்கு ரூ. 1 லட்சம்வரை செலவு ஆனது.

பிறகு எண்ணெய் செக்கின் சங்கிலியை, டிராக்டருடன் இணைத்து செக்கை இயக்கினோம். இந்த முறையில் டிராக்டரை இயக்க ஆள் தேவையில்லை. டிராக்டர் ஸ்டியரிங்கை ‘லாக்’ செய்தால் போதும். டிராக்டர் தானாக சுற்றிக்கொண்டே இருக்கும். நாளொன்றுக்கு 16 லிட்டர் எண்ணெய் எடுக்கிறோம். வெளியிலிருந்து எண்ணெய் ஆட்ட வருபவர்களுக்கு, ஒரு லிட்டர் எண்ணெய் ஆட்டு வதற்குக் கட்டணமாக ரூ. 14 வாங்குகிறோம். ஆலைகளில் இதைவிடவும் குறைவாகக் கட்டணம் வாங்குகின்றனர். எனினும், சுத்தமாகவும் எவ்விதக் கலப்படமும் இன்றியும் எண்ணெய் தயாரிக்கப்படுவதால், எங்கள் கட்டணத்தை யாரும் பெரிதாக நினைப்பதில்லை.

Courtesy: Hindu
Courtesy: Hindu

மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக கடலை, எள், ஆமணக்கு, தேங்காய் போன்ற மூலப்பொருட்களை வாங்குகிறோம். சுத்தமாக இருப்பதால் பலரும் எங்களிடம் நேரடியாக எண்ணெய் வாங்கிச் செல்கின்றனர். மோகனூர் மட்டுமின்றி கரூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரிலிருந்தும் எண்ணெய் தயாரித்துத் தரச் சொல்லி ஆர்டர்கள் வருகின்றன” என்றார்.

மேலும் சில புதுமைகள்

காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்துகொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் செயல்படும் விவசாயி வடிவேல், தன் வயலில் கடந்த எட்டு ஆண்டுகளாகச் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, தானாக இயங்கும் அரிசி குத்தும் இயந்திரத்தையும் விவசாயி வடிவேல் தயாரித்து, பயன்படுத்தி வருகிறார்.

விவசாயி வடிவேல் தொடர்புக்கு: 09442955622

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *