தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பால் பொருட்களை ஆய்வு செய்வதற்காக, மீனாட்சிபுரத்தில், கேரள பால் வளத்துறையினர், தற்காலிக முகாம் அமைத்து, பணிகளை துவங்கியுள்ளனர்.
தமிழகத்திலிருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பால், கேரளா எடுத்துச் செல்லப்படுகிறது. இதில், கலப்படம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆய்வு செய்வதற்கு, அம்மாநில பால் வளத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்கென, கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து கேரளா செல்லும் வழியில், அம்மாநில எல்லையில், மீனாட்சிபுரம் வணிகவரித் துறை சோதனைச் சாவடி அருகில், பால் பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளனர். இக்கூடத்தில், ஏழு பேர் கொண்ட குழுவினர் பணியில் உள்ளனர். அவர்கள், டேங்கர், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில்
எடுத்து செல்லப்படும் பால் பொருட்களை மாதிரி எடுத்து, சோதனை செய்கின்றனர். ‘ஓணம் பண்டிகை வரை இந்த சோதனை நடைபெறும்’ என தெரிவித்து உள்ளனர்.
500 வாகனங்கள் சோதனை:கேரள பால்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கூடுதல் லாபம் பெறுவதற்காக, பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின், யூரியா, சர்க்கரை, குளூக்கோஸ், போரிக் ஆசிட் போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின்படி இந்த சோதனை நடத்தப்படுகிறது. ‘இதுவரை, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை அனைத்தும் சரியாக உள்ளது. வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட பால் என கண்டுபிடிக்கப்பட்டால் திருப்பி அனுப்பப்படும்’ என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகத்தின் கருத்து:
இந்த சோதனைகளை தமிழகத்திலும் எப்போதும் செய்யலாமே? பார்மாலின், யூரியா, சர்க்கரை, குளூக்கோஸ், போரிக் ஆசிட் போன்றவற்றை நாம் காபியில் குடிக்கிறோமோ என்னமோ?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்