கோடை மழையை பயன்படுத்தி, நிலத்தில் உழவோட்டும் பணி மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறமுடியும் என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த புரட்டாசி மாதத்தில் சம்பா நெல் பயிரிட்டு அறுவடை பணியை முடித்து விட்டனர். இதைத்தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் தற்போது நவரை நெல் சாகுபடி பயிரிட்டு நாற்றாங்கால் பணியை முடுக்கியுள்ளனர். மேலும் தோட்டக்கலை பயிர்களான பருத்தி, எள், சூரியகாந்தி, செடி முருங்கை போன்றவையும் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அறுவடை பணியை முடித்துள்ள நெல் மற்றும் நிலக்கடலை பயிரிட்ட நிலங்கள் தற்போது காய்ந்து வருகிறது. அடுத்தக்கட்டமாக தற்போது விவசாயிகள் உளுந்து மற்றும் வைகாசி முன்பட்ட நிலக்கடலை பயிரிட ஆயத்தமாக உள்ளனர். இந்த தருணங்களில் கோடை மழையை பயன்படுத்தி, நிலத்தில் உழவு பணி மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெற முடியும் என மாவட்ட வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தா.பழூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பழனிசாமி தெரிவித்ததாவது:
- சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்தால் பத்திரை மாற்றுத் தங்கம்” என்று சொல்வார்கள். அதன்படி. தற்போது கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருவது மிகவும் பயனுள்ளதாகும்.
- அறுவடை பணி முடித்து பின்னர் கோடைக்காலங்களில் தரிசு நிலங்கள் காய்ந்து இருக்கும். அந்த தருணங்களில் கோடை மழை பெய்கிறபோது கண்டிப்பாக உழவு பணி செய்வது மிகவும் உத்தமம்.
- விவசாயிகள் எருதுகளின் உதவியோடு கலப்பையை கொண்டும், இயந்திர கலப்பையை கொண்டும் உழவுப்பணியை மேற்கொள்ளலாம். கோடை உழவினால் முக்கியமாக மண்வளம் மேம்படும்.
- மேலும் மண்ணிலுள்ள கூண்டுப்புழு, கொக்கிப்புழு, புருட்டினாயா புழு, சிகப்பு கம்பளிப்புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் மண்ணில் புதைந்து இருக்கும். இதனால் பயிர் செய்யும் காலங்களில் இந்த பூச்சிகள் மண்ணில் இனப்பெருக்கம் செய்து பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை உண்டாக்கும். இதை தடுக்கும் விதமாக நிலங்களில் உழவோட்டும்போது மண்ணிலுள்ள புழுக்கள் எல்லாம் மேலே வெளியில் வரும்.
- அப்போது கோடை வெப்பத்தில் புழுக்கள் அனைத்தும் மயங்கிய நிலையில் இருக்கும்போது பறவைகள் எல்லாம் அதை கொத்தி தின்னும். மேலும் வெப்ப நிலை ஒரே சீராகவும், மண்ணிலுள்ள நீர்ப்பிடிப்புத்திறன் அதிமாகி நுண்ணியிர்களின் செயல்பாடு அதிகமாகும். மண் சத்தானது வேருக்குள் நிலைத்து நிற்கும்.
- எனவே கோடை உழவை விவசாயிகள் மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெற முடியும் என்றார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்